கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் உண்மையா ? 

Misleading சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel


INTRO :

கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “ கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் – பிரித்தானிய விஞ்ஞானிகளின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு!

பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழக (University of Surrey) ஆராய்ச்சியாளர்கள், கடல் மாசுபாட்டிற்கு எதிராகப் போராட இயற்கையான மீனைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய ரோபோ மீனை உருவாக்கியுள்ளனர்.

சாதாரண தூய்மைப் பணிகளின் போது கண்டறிய முடியாத மிகச்சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களைக் கூட, இந்த ரோபோ மீன் தண்ணீரில் நீந்திக்கொண்டே துல்லியமாகச் சேகரிக்கிறது.

இந்த ரோபோ இயங்குவதற்கு மின்சாரமோ அல்லது பேட்டரிகளோ தேவையில்லை என்பதுதான் இதில் உள்ள ஆச்சரியமான விஷயம்.

இதற்கு ஒரு ‘செயற்கை வயிறு’ (Synthetic Stomach) பொருத்தப்பட்டுள்ளது. இது தான் சேகரிக்கும் பிளாஸ்டிக் துகள்களைச் செரிமானம் செய்து, அதைத் தனக்குத் தேவையான ஆற்றலாக (Energy) மாற்றிக்கொள்கிறது.

எவ்வளவு அதிகமாக இது பிளாஸ்டிக்கை உட்கொள்கிறதோ, அவ்வளவு அதிக ஆற்றலைப் பெற்று நீண்ட நேரம் கடலில் நீந்தித் தூய்மைப் பணியைச் செய்யும்.

கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலக் கடல் தூய்மைப் பணிகளில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ” என கடந்த பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (01.02.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவல் தொடர்பாக முதலில் ஆய்வினை மேற்கொண்டபோது, இங்கிலாந்தில் அமைந்தள்ள University of Surrey பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு உண்மையான ஆய்விலிருந்து இந்த வைரலான கூற்று உருவாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

ரோபோ மீன் உண்மையில் பிளாஸ்டிக்கை உண்ணுமா.?

Surrey பல்கலைக்கழகத்தின் விளக்கத்தின்படி, Gillbert எனப்படும் குறித்த ரோபோ ஒரு வடிகட்டுதல் சாதனமாகவே செயல்படுகிறது. ரோபோவுக்குள் தண்ணீர் நுழையும் போது, அதன் செவுள் (gill) போன்ற வலை அமைப்புகள் வழியாகச் சென்று பிளாஸ்டிக் துகள்கள் அதனுள் பொருத்தப்பட்டுள்ள வடிகட்டிக்குள் சிக்கிக் கொள்கின்றன. 

உயிரினங்கள் உணவை உட்கொள்வது போல இந்த ரோபோ பிளாஸ்டிக்கை செரிமானம் அல்லது தான் இயங்குவதற்கு தேவையான சக்தியாக மாற்றுவதோ இல்லை. குறித்த கருவியானது தோராயமாக 2 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் பெரிய நுண் பிளாஸ்டிக் துகள்களை இதனால் சேகரிக்க முடியும்.

ரோபோ மீன் நிரூபிக்கப்பட்ட தீர்வா..?

குறித்த மீன் ரோபோ ஏற்கனவே பெருங்கடல்களைப் பெரிய அளவில் சுத்தம் செய்யக்கூடிய ஒரு நடைமுறை தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது போன்ற தோற்றத்தை இந்த சமூகவலைத்தளத்தில் வைரலான பதிவுகள் உருவாக்குகின்றன. 

ஆனால் இது ஒரு கருத்தியல் மாதிரியாகவே (proof-of-concept prototype) உள்ளது. 

நுண் பிளாஸ்டிக்குகளை அகற்றல் 

நுண் பிளாஸ்டிக்குகள் மிகவும் சிறியவை, பரவலாகச் சிதறியவை, மற்றும் இயற்கையான பொருட்களுடன் கலந்தவை என்பதால், அவற்றை அகற்றுவது மிகவும் கடினம் என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

பாரியளவில் கடலில் உள்ள நுண் பிளாஸ்டிக்குகளை அகற்றக்கூடிய எந்தவொரு முழுமையான தொழில்நுட்பமும் தற்போது வரையில் கண்டுபிடிக்கவில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நீருக்கடியில் குறைந்த பார்வைத் திறன், வழிகாட்டுதல் சவால்கள், பேட்டரி வரம்புகள், பராமரிப்புத் தேவைகள் மற்றும் பரந்த கடல் சூழலில் சிறிய பிளாஸ்டிக் துகள்களைக் கண்டறிவதில் உள்ள சிரமம் போன்றவை நுண் பிளாஸ்டிக்குகளை அகற்றலில் உள்ள முக்கிய நடைமுறைத் தடைகள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(Source: Science Direct, Pubmed Central, Royal Society of Chemistry

இந்தத் திட்டம் ஒரு சோதனை முன்மாதிரியாக முன்வைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்கால மேம்பாடுகள் மற்றும் இந்த அமைப்பின் சாத்தியமான வழித்தோன்றல்கள் குறித்து விவாதித்துள்ளனர். 

Surrey பல்கலைக்கழகமும், இந்தத் திட்டத்தின் கல்விசார் ஆய்வுக் கட்டுரையும், கில்பர்ட்டை, களத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கடல் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பமாக விவரிக்காமல், ஒரு போட்டியில் வெற்றி பெற்ற வடிவமைப்பிலிருந்து உருவாக்கப்பட்ட, கருத்தாக்கத்தை நிரூபிக்கும் ஒரு ரோபோ மீன் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Link 

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின்  மூலம் கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *