2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டதா?  

Misleading இலங்கை | Sri Lanka

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் 80 மில்லியன் டாலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளது🚨

சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 143 பக்கங்களைக் கொண்ட அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் இந்த நாட்டிலிருந்து 80 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரே இந்த விபரங்களை வெளியிட்டனர்.

அத்துடன், 2024ஆம் ஆண்டில் இந்த பற்றாக்குறை மறை (Minus) 254 மில்லியன் டாலர்களாகப் பதிவாகியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்து 2025ஆம் ஆண்டில் மறை 808 மில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, மத்திய வங்கியின் 80 மில்லியன் டாலர் பணம் வெளியேறியுள்ளதா அல்லது ஏதேனும் அழிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய வங்கி நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த அறிக்கையின்படி, மத்திய வங்கியின் 80 மில்லியன் டாலர் பணம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவே தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த 808 மில்லியன் டாலர்களைக் கருத்திற்கொள்ளும் போது, நாட்டிற்கு வரும் பணம் (வெளிநாட்டுப் பிரேஷணங்கள்) முழுமையாக நாட்டிற்குள் வராமல், மறைமுகமான அல்லது சட்டவிரோத வழிகள் ஊடாக இந்த பணம் இழக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். என தெரிவித்து கடந்த 2026.06.09 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அண்மையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்புகளில், 2025 ஆம் ஆண்டில் 808 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை காட்டுவதாகத் தெரிவித்திருந்தனர். இது குறித்து மத்திய வங்கி உடனடியாக நாட்டிற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.Link | Link

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2026 மே மாதத்தில் இலங்கையின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மறுஆய்வு உள்ளிட்ட 143 பக்க அறிக்கையை வெளியிட்டது, இதன் மூலம் 695 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி நிதி வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.Archived 

அந்த அதிகாரப்பூர்வ IMF அறிக்கையின் (Country Report No. 26/111) 35 ஆம் பக்கத்தில் உள்ள “Table 4a. Sri Lanka: Balance of Payments” (செலுத்தல் நிலுவை) என்ற முதன்மைத் தரவு அட்டவணையில் தான் இந்த பேசுபொருளாக மாறியுள்ள 80 மில்லியன் டொலர் மறைமதிப்பு (-808) பதிவாகியுள்ளது. அந்த அட்டவணையில் “Errors and omissions” (பிழைகளும் விடுபடுதல்களும்) என்ற வரியின் கீழ் 2025 ஆம் ஆண்டிற்காக இந்த 808 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை IMF அறிக்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையிலும் (பக்கம் 48, அட்டவணை 1.13) இந்த 808 மில்லியன் டொலர் “Net Errors and Omissions” மதிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இது IMF மட்டும் குறிப்பிட்ட மதிப்பு அல்ல, இலங்கை மத்திய வங்கியே தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியிட்ட மதிப்பாகும்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம்

IMF அறிக்கையை மேற்கோள்காட்டி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையிலிருந்து 808 மில்லியன் டொலர் பணம் வெளியேறியுள்ளதாகப் பல்வேறு தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து, அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா, மத்திய வங்கி ஆளுநரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

அப்போது ஹர்ஷ டி சில்வா கூறுகையில், சமூக ஊடகங்கள் காரணமாக சில நேரங்களில் தவறான தகவல்கள் வெளியாகி அவை மிக வேகமாகப் பரவி விடுகின்றன என்றும், இந்த 808 மில்லியன் டாலர் விவகாரத்தில் அதற்குப் பல்வேறு தவறான விளக்கங்கள் கொடுக்கப்படுவதை தான் பார்த்ததாகவும் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் சாராத தவறான விளக்கங்கள் முதன்மைக்கருத்தாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கூறிய அவர், இது குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் விளக்கம் கோரினார்.

மத்திய வங்கி ஆளுநரின் பதில்:

“இங்கு ஏன் ‘பிழைகளும் விடுபடுதல்களும்’ (errors and omissions) என 808 மில்லியன் டொலர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரிவதில்லை. யாரோ ஒருவர் இதை எடுத்து சமூக ஊடகங்களில் ஏன் இப்படிப் பிரச்சாரம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இது செலுத்தல் நிலுவையைத் தயாரிக்கும் போது (compilation of balance of payments) ஏற்படும் ‘பிழைகள் மற்றும் விடுபடுதல்கள்’ பற்றிய பொதுவான அறிவு சார்ந்த விடயமாகும். எந்தவொரு பொருளாதார மாணவருக்கு கூட இது தெரியும். இது பாடசாலை பாடப்புத்தகங்களிலேயே கற்பிக்கப்படும் ஒரு தொழில்நுட்பக் கருத்தாகும். ஆனால் பிரச்சினை என்னவென்றால், சாதாரண குடிமக்கள் அனைவருக்கும் இது தெரிந்திருப்பதில்லை.

ஒரு குறிப்பிட்ட ஆண்டின் வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளைச் சேகரிக்கும் போது, அதை நாம் செலுத்தல் நிலுவை (Balance of Payments) தயாரித்தல் என்கிறோம். அதன் வகைகளைப் பார்த்தால் இறக்குமதி, ஏற்றுமதி, வட்டிச் செலுத்தல்கள் மற்றும் பணம் அனுப்புதல்கள் (remittances) உள்ளன. அந்தப் பெரிய பரிவர்த்தனைப் பிரிவு நடப்புக் கணக்கு (current account) எனப்படுகிறது. அதன் பின்னர் நிதிக்கணக்கில் (financial account) அடிப்படையில் பணம் உள்ளே வருவதை வரவு (credit) என்றும், வெளியேறுவதை பற்று (debit) என்றும் பதிவு செய்கிறோம். எந்தவொரு தனியார் நிறுவனத்தின் அல்லது அமைப்பின் கணக்கியல் அமைப்பில் பற்றும் வரவும் சமமாக இருக்க வேண்டும். அதன் நிகர மதிப்பு பூஜ்ஜியமாக (zero) இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு நாட்டின் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்யும் போது, அது பெருமளவில் தரவுகள் மற்றும் மதிப்பீடுகளின் (estimates) அடிப்படையிலேயே அமைகிறது. உதாரணமாக, இறக்குமதியை எடுத்தால், சுங்கத் திணைக்களம் மூலம் பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்த தெளிவான தரவுகள் பதிவாவதால் நம்மிடம் துல்லியமான தரவு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அதற்குரிய நிதிப் பரிவர்த்தனைகளை, அதாவது நிதிக்கணக்கின் பற்று அல்லது வரவுப் பகுதியை நோக்கும் போது, வங்கிகள் ஊடாக நடக்கும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது மிகவும் கடினம். வங்கிகள் தங்களுக்குக் கிடைக்கும் பண வரவுகளை மட்டுமே பதிவு செய்கின்றன. உலகில் எந்தவொரு நாட்டினாலும் செலுத்தல் நிலுவையின் பற்று மற்றும் வரவை நூறு சதவீதம் துல்லியமாக ஒப்பிட்டுச் சமப்படுத்த முடியாது. அங்கு மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றங்கள், குறைத்து மதிப்பிடுதல் அல்லது கூட்டி மதிப்பிடுதல் காரணமாக ஒரு இடைவெளி (gap) ஏற்படுகிறது. அது ஒருபோதும் பூஜ்ஜியமாக இருக்க முடியாது.

நமது நாட்டின் வரலாற்றைப் பார்த்தாலும், கடந்த ஆண்டு அது -254 மில்லியன் டொலர்களாகக் காட்டப்பட்டது. இந்த ஆண்டு -808 மில்லியன் டொலர்கள். ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு அது பூஜ்ஜியமாக இருந்தது. சில ஆண்டுகளில் அது நேர்மறை (+) மதிப்பாகவும் இருக்கும். எனவே, இது கவலைப்பட வேண்டிய ஒரு விடயமே அல்ல. இது ஒரு இயற்கையான நிலைமை. உதாரணமாக, சுங்கத் தரவுகளின்படி ஒரு வருடத்திற்கு ஏற்றுமதி 12 பில்லியன் டொலர்களாகப் பதிவானாலும், அதற்குரிய பணம் 2 மாதங்களுக்குப் பிறகே நாட்டிற்குள் வரக்கூடும். அந்த நிதியாண்டுக்குள் அங்கு ஒரு இடைவெளி ஏற்பட்டாலும், கடந்த ஆண்டின் பணம் இந்த ஆண்டின் கணக்கு முறைக்குள் வந்துவிடுகிறது. இந்த நேர வித்தியாசங்கள் ஏற்படும் போது, அது தரவுகளில் ஒரு இடைவெளியாகப் பதிவாகிறது.

நான் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன், மத்திய வங்கிக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகத் நிகழ்ச்சிகளில் கூறப்படுவதை நான் பார்த்தேன். அது முற்றிலும் ஆதாரமற்ற பொய்ப் பிரசாரமாகும். எதுவும் காணாமல் போகவில்லை, இழப்பும் ஏற்படவில்லை. இது தரவுகளைப் பதிவு செய்யும் போது ஏற்பட்ட ஒரு புள்ளிவிவர இடைவெளி (statistical discrepancy) மாத்திரமே.” என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விவாதிக்கப்பட்ட முழுமையான காணொளியை கீழே காண்க

IMF இன் படி ‘Errors and Omissions’ என்றால் என்ன?

IMF இன் செலுத்தல் நிலுவை மற்றும் சர்வதேச முதலீட்டு நிலை கையேட்டின் (BPM6) படி, ‘Net Errors and Omissions’ (நிகர பிழைகளும் விடுபடுதல்களும்) என்பது பணம் காணாமல் போனதாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ எங்குமே வரையறுக்கப்படவில்லை. அது ஒரு புள்ளிவிபர முரண்பாடாகும் (statistical discrepancy). இது செலுத்தல் நிலுவை அறிக்கைகளைத் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் தரவு ஆதாரங்களில் உள்ள முழுமையற்ற தன்மை மற்றும் தரவுச் சேகரிப்புச் செயல்பாட்டில் ஏற்படும் பிழைகள் காரணமாக உருவாகும் ஒரு புள்ளிவிபர மதிப்பாகும்.

இவ்வாறான மறைமதிப்புடன் (-) கூடிய பிழைகள் மற்றும் விடுபடுதல்கள் மதிப்பு பதிவாவது இது முதன்முறையல்ல. அதேபோல், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மாத்திரம் இது நடக்கவில்லை.

வளரும் நாடுகளின் மெக்ரோ பொருளாதார தரவுகள் (Macroeconomic data), தொழில்துறை பகுப்பாய்வுகள் மற்றும் நிறுவன விபரங்களை வழங்கும் முன்னணி சர்வதேச நிதி தரவு தளமான ISI Markets (ISI Emerging Markets Group) நிறுவனமானது, 1975 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இலங்கையின் செலுத்து நிலுவையில் (Balance of Payments) ஏற்பட்ட பிழைகள் மற்றும் விடுபடல்களின் (Errors and omissions) பெறுமதி ஏற்ற இறக்கங்கள் குறித்த பகுப்பாய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இதில் 2006 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான பெறுமதிகளைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கையின் நிகர பிழைகள் மற்றும் விடுபடல்களின் பெறுமதியானது, 2025 ஆம் ஆண்டின் பெறுமதியை விட (-808), 2010 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த மறைப் பெறுமதியாக (-867) மதிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. 

  • நேர்மறை மதிப்பு (+) கிடைப்பதன் அர்த்தம்: நாட்டிற்குள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நாணய வரத்து ஏற்பட்டுள்ளது என்பதாகும். பதிவாகியுள்ள தரவுகளை விட அதிகமான பணம் உண்மையில் நாட்டிற்குள் புழக்கத்தில் உள்ளதைக் குறிக்கும்.
  • மறைமதிப்பு (-) கிடைப்பதன் அர்த்தம்: நாட்டிலிருந்து வெளியே அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நாணய வெளிச்செல்லுகை (ஒழுங்கற்ற நேர வேறுபாடுகள்/மதிப்பீட்டுப் பிழைகள்) நடந்துள்ளது என்பதாகும்.

Sri Lanka Chronicle அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, 2025 இன் மதிப்பு (-808), 2024 ஆம் ஆண்டின் மதிப்பை விட (-254) மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இது ‘தொழில்முறை ஆய்வாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு புள்ளிவிபர முரண்பாடு’ என்று விவரிக்கப்படுகிறது. இருப்பினும், Net Errors and Omissions எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மூலதன வெளியேற்றம் அல்லது முறைகேடுகள் நடந்ததாக நிரூபிக்க முடியாது என்றும், அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது. Link 

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரின் கருத்து

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான டபிள்யூ. ஏ. விஜேவர்தன, 2025 ஆம் ஆண்டில் பதிவான 808 மில்லியன் அமெரிக்க டொலர் “பிழைகளும் விடுபடுதல்களும்” மதிப்பினால் மத்திய வங்கிக்கு எந்தவொரு நிதி இழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார். இந்த எண்ணிக்கை கணக்கியல் ரீதியாக ஒரு வரவுப் பக்க சரிசெய்தலாக இருப்பதால், வங்கி முறைமைக்குள் வெளிநாட்டு நாணயம் கிடைத்துள்ளது ஆனால் அவை உரிய முறையில் கணக்கில் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை என்பதையே இது குறிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

செலுத்தல் நிலுவையானது “இரட்டைப் பதிவு” (double-entry) கணக்கியல் கொள்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால் பற்று மற்றும் வரவுப் பக்கங்கள் சமநிலைப்பட வேண்டும் என்றும், ஆனால் சுங்கம், வர்த்தக வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவுகளைப் பெறும்போது ஏற்படும் தாமதங்கள், குறைபாடுகள் அல்லது தவறான பதிவுகள் காரணமாக இந்த புள்ளிவிபர முரண்பாடு ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். Link

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ்  2025 ஆம் ஆண்டில் 808 மில்லியன் டொலர்கள் காணாமல் போய்விட்டன அல்லது அது ஒரு ஊழல்/திருட்டு என்று தெரிவித்து பகிரப்படும் பதிவுகள் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை IMF இன் அறிக்கையிலும், இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையிலும் பதிவாகியுள்ள ‘Net Errors and Omissions’ (நிகர பிழைகளும் விடுபடுதல்களும்) எனப்படும் நிலையான கணக்குச் சரிசெய்தல் மதிப்பாகும். இது பணம் காணாமல் போனதோ அல்லது திருடப்பட்டதோ அல்ல. IMF தரநிலைகளின்படி நாட்டிற்குள் வந்த மற்றும் வெளியேறிய அதிகாரப்பூர்வ பணத் தரவுகள் (நேர வேறுபாடுகள் மற்றும் கணக்கீட்டுப் பிழைகளால்) சரியாகப் பொருந்தாத போது, கணக்குகளைச் சமநிலைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளிவிபரக் கணக்கீடு மாத்திரமேயாகும் என்பது தெளிவாகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: 2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டதா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *