சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா ? 

Misleading சர்வதேசம் | International

Subscribe to our WhatsApp Channel


INTRO :

சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “ கிழக்கு துர்கிஸ்தானில் நீடிக்கும் மனித உரிமை மீறல்: சீன சமூக ஊடகங்களில் வெளியான உய்குர் குழந்தைகளின் உயிரியல் சோதனை!

கிழக்கு துர்கிஸ்தான் (சின்கியாங்) பிராந்தியத்தில் சீன அரசாங்கம் உய்குர் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் தனது கடுமையான அடக்குமுறைகளையும், கலாச்சார அழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

(சீனாவின் சிஞ்சியாங் (Xinjiang) மாகாணத்தைச் சேர்ந்த துருக்கிய முஸ்லிம் இன மக்கள் ‘உய்குர்’ (Uyghur) என அழைக்கப்படுகிறார்கள்.)

#UyghurHumanRights

#EastTurkistan

#XinjiangCrisis2026

#FamilySeparation

#HumanRightsWatch

#SaveUyghurChildren

#FactCheckAlert  ” என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (04.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரின் அவல நிலை குறித்து, சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையே நீண்டகால சர்வதேச சர்ச்சையாக தொடர்ந்து வருகின்றது. 

இந்த பின்னணியில், சீனா உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் அல்லது மருத்துவச் சோதனைகளை நடத்துவதை ஒரு உண்மையாகவே காணொளி மூலம் அம்பலப்படுத்தியிருந்தால், அது  உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதுடன் அது தொடர்பாக சர்வதேச செய்திகளும் வெளியாகி இருக்கும்.

இந்த காணொளி பதிவில் உள்ளவாறு உய்குர் குழந்தைகள் மீதான உயிரியல் பரிசோதனைகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு நம்பகமான ஆதாரமோ அல்லது அத்தகைய செயல்களைக் காட்டும் அறிக்கைகளோ எமது ஆய்வின் மூலம் கிடைக்கவில்லை. 

சீன அரசாங்கம் உய்குர் குழந்தைகள் மீது இத்தகைய சோதனைகள் அல்லது மருத்துவப் பரிசோதனைகளை நடத்தியது என்ற கூற்றை எந்தவொரு நம்பகமான சர்வதேச ஆதாரமும் உறுதிப்படுத்தவில்லை.

ஆகவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி

Reverse Image Search மூலம் ஆய்வு செய்தோம். இது அமெரிக்காவைச் சேர்ந்த ஜனநாயக சார்பு ஆர்வலரான Jie Lijian என்பவரால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அன்று பகிர்ந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. 

அந்த வீடியோவில், இரண்டு உருளை வடிவ கண்ணாடிக் அறைகளுக்குள் (chambers) இரண்டு குழந்தைகள் முகம் மேல்நோக்கி படுத்திருப்பதையும், பின்னணியில் ஒரு தாதி அதில் ஒரு அறையின் கதவை மூடுவதையும் காட்டுகிறது. அவர்களின் பெற்றோர்கள் துன்புறுத்தப்படும் போது, இக்குழந்தைகள் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் உய்குர் குழந்தைகள் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

X.Com 

இருப்பினும், அந்த வீடியோவில் உள்ள கமெண்டுக்களை நாம் அவதானித்தபோது, அது சித்திரவதை அல்ல, மாறாக ஏதோ ஒரு மருத்துவ சிகிச்சையைக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தன.

கண்ணாடி அறைகள் சித்திரவதைக் கருவிகள் அல்ல, அவை குழந்தைகளுக்கான ஆக்சிஜன் அறைகள் (Infant Oxygen Chambers)

மேலே எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட காணொளி பதிவானது ஏப்ரல் மாதத்தில் பதியப்பட்டிருந்தது. எமது தேடலில் குறித்த பதிவுக்கு முன்பே, 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதே வீடியோவைப் பகிர்ந்த இரண்டு முந்தைய பதிவுகளை நாங்கள் கண்டறிந்தோம்.

X 

முதலாவது பதிவு, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பதிவிடப்பட்டு, சீனாவின் ‘ஜீரோ-கோவிட்’ (zero-COVID) கொள்கையின் கீழ் கோவிட் நோயாளிகளை தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்படும் அறையா இது என்று கேள்வி எழுப்பியது. 

X 

இரண்டாவது பதிவு, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டு, உய்குர் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு மர்மமான முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறியது.

அந்த பெப்ரவரி 18 பதிவில் அதே அறையின் பல்வேறு கோணங்களிலான கூடுதல் காட்சிகளும் இருந்தன. உன்னிப்பாக கவனித்தபோது, கண்ணாடி அறையின் ஒரு பக்கத்தில் சீன மொழியில் அச்சிடப்பட்ட மாதிரி எண் (Model number) தெரிந்தது. அது “Infant Oxygen Chamber Model YLC0.5/1.5” (குழந்தைகளுக்கான ஆக்சிஜன் அறை மாதிரி YLC0.5/1.5) என்று எழுதப்பட்டிருந்தது.

குழந்தைகளுக்கான ஆக்சிஜன் அறைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

சீனாவில் உள்ள ஜிகோங் தாய் மற்றும் சேய் நல்வாழ்வு மருத்துவமனை (Xigong Maternal and Child Health Hospital) இதேபோன்ற ஒரு சாதனத்தைப் பயன்படுத்தியதோடு, இது ‘ஹைப்பர்பாரிக் ஆக்சிஜன் சிகிச்சைக்காக’ (hyperbaric oxygen therapy) பயன்படுத்தப்படும் உபகரணம் என்று விவரித்துள்ளது.

link

சீன மருத்துவ உபகரண இணையதளத்தின்படி, இந்த அறைகள் சுவாசக் கோளாறு, கால்-கை வலிப்பு (epilepsy) அல்லது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைதல் போன்ற பாதிப்புகள் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

Radio Free Asia (RFA) வின் உண்மை சரிபார்க்கும் (Asia Fact Check Lab (AFCL) ) பிரிவினரால், இந்த வீடியோ குறித்து தைவானின் ஹைப்பர்பாரிக் மற்றும் அண்டர்சீ மருத்துவ சங்கத்தின் தலைவர் Dr. Hsia Te-Chun அவர்களிடம் வினவியுள்ளது.

இந்த காணொளி, cerebral palsy ( மூளை முடக்குவாதம்) மற்றும் ஆட்டிசம் (autism) ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான ஆக்சிஜன் அறையைக் காட்டுகிறது என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ‘ஜீரோ-கோவிட்’ சிகிச்சை என்ற கூற்றை மறுத்த அவர், கோவிட் நோய்க்கு ஆக்சிஜன் சிகிச்சை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்ல என்றும் அவர்களுக்கு தெரிவித்துள்ளார். Link

குறிப்பு: இந்த வீடியோ முதலில் எந்த மருத்துவமனையில் அல்லது எந்த இடத்தில் படமாக்கப்பட்டது என்பதை எங்களால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. நாங்கள் உறுதிப்படுத்துவது அங்கு காட்டப்பட்டுள்ள உபகரணங்களின் தன்மையையும் சிகிச்சையையும் மட்டுமே தவிர, அது பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட மருத்துவமனையை அல்ல.

சின்ஜியாங் உய்குர் நெருக்கடிப் பின்னணி:

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐநா அமைப்புகள் மற்றும் பல அரசாங்கங்கள் சின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக சீனா மீது குற்றம் சாட்டியுள்ளன, ஆனால் பெய்ஜிங் இக்குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத மதிப்பீட்டின்படி, சின்ஜியாங்கில் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை தன்னிச்சையாக தடுத்து வைப்பது உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்றும், இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம் இக்குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறது. பெய்ஜிங்கின் அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கைகளின்படி (White Papers), சின்ஜியாங்கில் உள்ள தீவிரவாத குழுக்களின் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. 

மேலதிக தகவல்களுக்கு – Link 1 | Link 2 | Link 3

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின்  சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பரவும் காணொளி  தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா ? 

Written By: S.G.Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *