உடனடி கடன்களை பெற்றுத்தருவதாக கூறி வரும் இணைப்புகள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்!!!

Insight சமூகம் | Society

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், அதேபோன்று பிரபலமானவர்களின் தோற்றம் அல்லது குரலை போலியாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கி போலியான நிதித் திட்டங்கள் தொடர்பில் தெரிவித்து அதன்மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களை திருடும் மோசடிச் செயற்பாடுகள் குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நாம் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி மக்களை தெளிவுப்படுத்தி வருகின்றோம்.

அந்த வரிசையில் தற்போது இணைய கடன் திட்டங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரப் பதிவுகளாக பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான திட்டங்கள் உண்மையானவையா என்பது தொடர்பில் ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடுமாறு நமது வாசகர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தமையை அடுத்து ஃபேக்ட் கிரஸண்டோ நாம் இது குறித்த ஆய்வை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் நீங்கள் தேடும் கடனை சாய்வான விதிமுறைகளுடன் பெறுங்கள் என தெரிவித்து அந்த கடனை பெறுவதற்கான இணைப்புடன் இந்த பதிவு பகிரப்பட்டிருந்தது.

மேலும் பலரும் இந்த கடன் திட்டங்கள் உண்மையானவையா அல்லது மோசடியானவையா என தெரியாமல் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததுடன் கமென்ட் செய்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இவ்வாறான கடன் திட்டங்கள் தொடர்பான இணைப்புகள் மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஆனால் எமது பணத்தேவைகள் காரணமாக நாம் இவை உண்மையானவையா அல்லது மோசடிகளா என்பதனை ஆராயாமல் நாம் இவற்றுக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அவ்வாறு விண்ணப்பித்ததன் பிறகு அவர்கள் எம்மிடம் கேட்டும் அனைத்து தரவுகளையும் நாம் வழங்கிவிடுகின்றோம். 

மோசடியாளர்கள் உண்மையில் நமது வங்கித் தரவுகள் மற்றும் தனிப்பட்ட தரவுகளுக்காக, இவ்வாறு கடன் பெற்றுத்தருவதாக கூறி எம்மிடம் வரக்கூடும்.

ஆகவே மேற்குறிப்பிட்ட பதிவு தொடர்பிலான எமது ஆய்வில் நாம் அந்த பதிவு பகிரப்பட்டிருந்த Utua Sri Lanka என்ற பேஸ்புக் பக்கதிற்குச் சென்று ஆய்வுசெய்த போது, அந்த பேஸ்புக் பக்கத்தின் feed இல் இந்த பதிவை காணமுடியவில்லை. காரணம் இதுவொரு விளம்பரப் பதிவாகவே ( Boost Post) பகிரப்படுகின்றது என்பதனாலேயே ஆகும்.

எனவே அந்த பக்கதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது எந்தவொரு தொடர்பு இலக்கங்களோ அல்லது கடன் வழங்கும் நிறுவனம் தொடர்பான எந்த தகவல்களும் அதில் வழங்கப்பட்டிருக்கவில்லை

மேலும் நாம் அந்த பதிவில் கொடுக்கப்பட்ட இணைப்பின் ஊடாக சென்று பார்க்கும் போது அங்கு எமது விபரங்கள் கேட்கப்பட்டிருந்தன. அது மாத்திரமன்றி அங்கு கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்களில் எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றமையும் அவதானிக்க முடிந்தது.

அதாவது இவ்வாறான மோசடி இணையதளங்களில் எழுத்துப்பிழைகள் பெரும்பால சந்தர்ப்பங்களில் இடம்பெற்றிரும் என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க ஒரு விடயமாகும்.

மேலும் நாம் இது குறித்து தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டபோது, அது பிரேசில் நாட்டை தளமாகக் கொண்ட ஒரு இணையதளம் என்பதனை அறியமுடிந்தது.

ஆகவே பிரேசில் நாட்டை தளமாக கொண்ட ஒரு நிறுவனம் எவ்வாறு இலங்கையில் கடன் வழங்கமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. அண்மையில் வெளிநாட்டவர்களினால் நமது நாட்டில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் நாம் ஊடக செய்திகளின் மூலம் அறிந்திருப்போம் அவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறான கடன் திட்டங்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். Link | Link 

இலங்கை மத்திய வங்கி

மேலும் உங்கள் பேஸ்புக்கிற்கு வரும் இதுபோன்ற கடன்திட்டங்கள் மற்றும் அவற்றை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான நம்பகத்தன்மையை அறிய உண்மையில் அந்த நிறுவனம் பதிவுசெய்யப்பட்ட இலங்கை நிதி நிறுவனமாக இருப்பின் அது தொடர்பில் மத்திய வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

ஆகவே இதுபோன்ற பதிவுகளை நீங்கள் கண்டவுடன் உடனடியாக இலங்கை மத்திய வங்கியின் இணையதளத்திற்குச் சென்று அந்த நிதி நிறுவனம் பதிவுசெய்யப்பட்டு மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற நிறுவனமா என்பதனை ஆராயுங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அந்த நிறுவனங்களின் ஊடாக பணம் பெறுவதற்கோ அதில் உங்கள் தனிப்பட்ட தரவுகளை வழங்குவற்கோ முயற்சி செய்யவேண்டாம். 

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) 

இது குறித்து நாம் SLCERT இடம் வினவியபோது அநேகமான சந்தர்ப்பங்களில், பொதுமக்களின் வங்கித் தரவுகளை திருடும் நோக்கில் இவ்வாறான நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் மோசடிகள் இடம்பெறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆகவே பொதுமக்கள் பேஸ்புக்கில் வரும் இது போன்ற நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Phishing Attack என்றால் என்ன?

Phishing  என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான முயற்சியாகும் அல்லது ஏமாற்றும் நோக்கமுடைய மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், விளம்பரங்கள் அல்லது நீங்கள் ஏற்கெனவே உபயோகித்த தளங்களின் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி ஆன்லைன் கணக்குகளில் உள்நுழைவதாகும். உதாரணத்திற்கு, ஃபிஷிங் மின்னஞ்சல் உங்கள் பேங்க்கில் இருந்து வருபவை போன்று இருக்கக்கூடும். அத்துடன் உங்கள் பேங்க் அக்கவுண்ட் தொடர்பான தனிப்பட்ட தகவல்களையும் கேட்கக்கூடும்.

Phishing மெசேஜ்கள் அல்லது உள்ளடக்கம் பின்வருபவற்றைச் செய்யலாம்: 

  • உங்கள் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்கலாம்.
  • இணைப்புகளைக் கிளிக் செய்யுமாறோ மென்பொருளைப் பதிவிறக்குமாறோ கேட்கலாம்.
  • நீங்கள் உபயோகிக்கும் சமூக வலைதளம், உங்கள் பேங்க், உங்கள் பணியிடம் போன்ற நற்பெயருள்ள நிறுவனங்களின் தோற்றத்தில் மோசடி செய்யலாம். 
  • குடும்பத்தினர், நண்பர் அல்லது உடன் பணிபுரிபவர் போன்ற உங்களுக்குத் தெரிந்தவரின் தோற்றத்தில் மோசடி செய்யலாம்.
  • ஒரு நிறுவனமோ உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரோ அனுப்பிய மெசேஜைப் போன்றே அச்சு அசலாகத் தோற்றமளிக்கலாம்.

Also Read:  

SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்! 

அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சில நிமிடங்களில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்து பகிரப்படும் இந்த தகவல் மற்றும் இணைப்பு போலியானது என்பது கண்டறியப்பட்டது. 

மேலும் இவ்வாறு சில நிமிடங்களில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்து சமூக ஊடகங்கங்ளில் வரும் இணைப்புகளிற்குள் சென்று உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களை உட்செலுத்தி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: உடனடி கடன்களை பெற்றுத்தருவதாக கூறி வரும் இணைப்புகள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்!!!

Fact Check By: Suji Shabeedharan

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *