
சிகையலங்கார நிலையத்தில் முடி வெட்டிய பிறகு, ஒரு நபர் கழுத்து மற்றும் தலை மசாஜ் செய்துகொள்ளும் போது அதன் ஊழியர் வாடிக்கையாளரின் கழுத்தை திடீரென நெட்டி முறிக்கும் போது, அந்த நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பதனைப் போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
எனவே அது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் தலையில் மசாஜ் செய்யாதீர்… உயிரே போச்சு.. கழுத்து நெட்டி உடைப்பது மிகவும் ஆபத்து நானும் அனுபவ பட்டேன் விழிப்புணர்விற்கு என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியின் சில காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி ‘ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்திய போது, Third Eye என்ற யூடியூப் பக்கத்தில் குறித்த காணொளி பதிவேற்றப்பட்டப்பட்டிருந்தமையை அறிய முடிந்தது.
‘Third Eye’ யூடியூப் பக்கத்தில் 2024 இல் பதிவேற்றப்பட்ட உண்மையான காணொளியின் முழுமையான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் உண்மையான காணொளியின் விளக்க உரையில் (Description) இது விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் காட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணொளியின் இறுதிப் பகுதியிலும், அதன் யூடியூப் விளக்க உரையிலும் (Disclaimer) பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:
“இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொழில்முறை நடிகர்களைக் கொண்டு திட்டமிட்டு தயாரிக்கப்பட்டவை (Scripted) ஆகும். சிகையலங்கார நிலையங்களில் முறையற்ற மற்றும் ஆபத்தான முறையில் கழுத்தை நெட்டி முறிப்பதால் ஏற்படும் நரம்பியல் பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.”
மருத்துவ எச்சரிக்கை: காணொளி கற்பனையானது, ஆனால் ஆபத்து நிஜமானது!
இந்த குறிப்பிட்ட காணொளி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்றாலும், சிகையலங்கார நிலையங்களில் தகுதியற்ற நபர்களால் கழுத்துப் பகுதி கடுமையான முறையில் திருப்பப்படும்போது ஏற்படும் பாதிப்புகள் உண்மையானவை என்று மருத்துவ அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
தமனி கிழிதல் (Arterial Dissection): சிகையலங்கார நிலையங்களில் முறையற்ற விதத்தில் திடீரென கழுத்தை வேகமாகத் திருப்பும்போது, இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளமான ‘கரோடிட் தமனி’ அல்லது ‘வெர்டெபிரல் தமனி’ (Vertebral Artery) ஆகியவற்றில் கிழிசல் ஏற்படலாம். இது இரத்த உறைவை ஏற்படுத்தி, பக்கவாதத்திற்கு (Stroke) வழிவகுக்கும். Link | Link
இந்தியாவில் நடந்த நிஜச் சம்பவங்கள்:
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள அஸ்டர் ஆர்வி (Aster RV) மருத்துவமனையில், சிகையலங்கார நிலையமொன்றில் மசாஜ் செய்துகொண்ட 30 வயது இளைஞர் ஒருவருக்கு கழுத்து திருப்பப்பட்டதால் கடுமையான பக்கவாதம் (Stroke) ஏற்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைய அவருக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. இது குறித்து The New Indian Express நாளிதழுக்கு கருத்து தெரிவித்த அஸ்டர் ஆர்வி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் வைத்தியர் ஸ்ரீகாந்தா சுவாமி “சிகையலங்காரம் செய்பவர்களாலோ அல்லது தனிநபர்களாலோ அறிவியல் பூர்வமற்ற முறையில் கழுத்தை வேகமாக நெட்டி முறிப்பது இரத்த நாளங்களில் கிழிசல்களை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தான பக்கவாதத்திற்கு (Strokes) வழிவகுக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
இதேபோல கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில் மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில், சிகையலங்கார நிலையங்களில் செய்யப்பட்ட மசாஜிற்கு பிறகு கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு, மக்கள் முடக்குவாதத்திற்கு (Bilateral diaphragmatic paralysis) உள்ளாகி வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற சம்பவங்கள் இந்தியாவி பல முதன்மை ஊடகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், சிகையலங்கார நிலையமொன்றில் மசாஜ் செய்தபோது வாடிக்கையாளர் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்ததாக பகிரப்படும் CCTV காணொளி தவறானது என்பதுடன் குறித்த காணொளி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஸ்கிரிப்ட் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், தகுதியற்ற நபர்களிடம் கழுத்தை நெட்டி முறித்துக் கொள்வது மருத்துவ ரீதியாக கடுமையான பக்கவாதம் மற்றும் முடக்குவாதத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான மசாஜ்களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


