
INTRO :
சமூக ஊடகங்கள் வழியாக மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கி தகவல்கள், பணம் மற்றம் தனிப்பட்ட தரவுகள் என்பவற்றை திருடும் செயற்பாடுகள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் அமெரிக்கர் ஒருவர் 25 இலட்சம் இலங்கை ரூபாவை தருவதாகவும் அதற்குப் பதிலாக அவர்களின் ஏடிஎம் கார்டின் புகைப்படத்தை தனக்கு அனுப்புமாறு தெரிவித்தும் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த காணொளியில் ஒரு அறையில் பெரும் தொகையான நாணயத்தாள்கள் இருப்பது காட்டப்படுகின்றது. அத்தோடு அதில் பேசும் நபர், தனது பெயர் ஜான் (John) என்றும், தான் அமெரிக்காவைச் சேர்ந்தவர் (from USA) என்றும் கூறுகிறார்.
ஃபேஸ்புக் எண்ணின் விலை $10,000 (இலங்கைப் பண மதிப்பில்) எனக் குறிப்பிடும் அவர், அது எவ்வளவு பணம் என்று கேட்கிறார். மேலும், 25 LKR பணப் பரிமாற்றம் (money transfer) குறித்தும் பேசுகிறார்.
வங்கி ஏடிஎம் கார்டு (bank ATM card) பயன்படுத்துவதைப் பற்றிப் பேசும் அவர், நண்பர்கள் தனது மெசஞ்சருக்கு (messenger) புகைப்படங்களை அனுப்புவதாகக் குறிப்பிடுகிறார்.
தான் பணம் அனுப்புவதாகவும், அதற்குப் பதிலாக அவர்களின் ஏடிஎம் கார்டின் புகைப்படத்தை தனக்கு அனுப்புமாறும் (“Photo send me”) கேட்கிறார். இவ்வாறு குறிப்பிட்டு இந்த காணொளி 2026.07.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை பலரும் உண்மை என நம்பி கமெனட் செய்துள்ளதுடன், இதன் உண்மையை கண்டறியுமாறு சில வாசகர்கள் எமக்கு அனுப்பிய கோரிக்கைக்கு அமைய நாம் இந்த விடயம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இந்த தகவல் உண்மையா என்பதனை அறிய அந்த காணொளி பகிரப்பட்ட பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்தோம். இதன்போது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த காணொளியை தவிற அந்த பக்கத்தில் வேறு எந்த தகவல்களையும் காணமுடியவில்லை.
ஆகவே நமக்கு இந்த பேஸ்புக்க பக்கத்தை பார்த்தவுடனேயே இது மக்களின் தரவுகள் மற்றும் பணம் என்பவற்றை திருடுவதற்காக மோசடிக்காரர்களினால் மேற்கொள்ளப்படும் செயல் என்பதனை அறிய முடிகின்றது.
ஃபேஸ்புக் ATM Card புகைப்பட மோசடி (ATM Card Photo Scam on Facebook)
சமூக ஊடகங்களில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி, பெரிய அளவில் பணப் பரிமாற்றம் செய்வதாகக் கூறி, ஏடிஎம் கார்டுகளின் (முன்பக்கம் மற்றும் பின்பக்கம்) புகைப்படங்களைக் கேட்டுப் பெற்று, வங்கி கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் மோசடிகள் இலங்கை உள்ளிட்ட சர்வதேசளவில் வேகமாக அதிகரித்து வருகின்றன.
- கார்ட் புகைப்படங்களைப் பகிர்வதன் ஆபத்து: ஏடிஎம் கார்டின் முன்பக்கத்தில் உள்ள கார்ட் எண், காலாவதி திகதி மற்றும் பின்பக்கத்தில் உள்ள CVV குறியீடு ஆகியவற்றைப் புகைப்படமாகப் பகிர்வது, மோசடியாளர்கள் உங்கள் கார்டைப் பயன்படுத்தி இணையவழியில் எளிதாகப் பணத்தைத் திருட வழிவகுக்கும்.
- பண ஆசை காட்டி ஏமாற்றுதல்: மோசடி செய்பவர்கள் பெரிய தொகை ($10,000 அல்லது இலங்கை ரூபாய்) அனுப்புவதாக ஆசை காட்டி, அதற்கு ஈடாக ஏடிஎம் கார்ட் புகைப்படங்களை அவசரமாகக் கேட்டு உங்களை நம்ப வைக்க முயல்கிறார்கள்.
- போலி சுயவிவரங்கள் (Impersonation): இலங்கைக் பொலிஸின் எச்சரிக்கையின்படி, சைபர் குற்றவாளிகள் போலி சமூக ஊடகக் கணக்குகள் அல்லது நண்பர்களின் கணக்குகளைப் பயன்படுத்திப் பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
- தற்காத்துக் கொள்ளும் வழிகள்: எக்காரணம் கொண்டும் வங்கி விபரங்களையோ, ஏடிஎம் கார்ட் புகைப்படங்களையோ சமூக ஊடகங்கள் வழியாக யாருடனும் பகிரக் கூடாது; சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)
இது குறித்து நாம் SLCERT இடம் வினவியபோது, பொதுமக்களின் வங்கித் தரவுகளை திருடும் நோக்கில் இவ்வாறான முறையில் மோசடிகள் இடம்பெறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆகவே பொதுமக்கள் பேஸ்புக்கில் வரும் இது போன்ற காணொளிகள் மற்றும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள ஒரு நபர் பணம் அனுப்புவதாகவும், அதற்கு பதிலாக அவர்களின் ஏடிஎம் கார்டின் புகைப்படத்தை தனக்கு அனுப்புமாறும் கோரி பகிரப்படும் காணொளி முற்றிலும் போலியானது என்பதுடன் அது மக்களின் வங்கித் தரவுகன் மற்றும் பணம் என்பவற்றை திருடுவதற்காக மோசடிக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி செயல் என்பதுவும் கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


