
INTRO :
மஸ்கெலியாவில் தொலைபேசி வெடித்ததில் பாடசாலை மாணவன் காயமடைந்ததுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

This video contains graphic footage
காணொளியில் பகிரப்பட்ட ஆடியோ பதிவில், இந்தச் சம்பவம் நாட்டின் மஸ்கெலியா பகுதியில் நடந்ததாகவும், கைபேசி வெடித்தமையால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட பகிரப்பட்டு வருகின்றது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையில் எந்தவொரு அறிக்கையும் இல்லை:
மஸ்கெலியாவில் இவ்வாறானதொரு சம்பவம் நடந்திருந்தால் அது நாட்டின் பிரதான ஊடகங்களில் செய்தியாகி இருக்கும். ஆனால், நாம் மேற்கொண்ட ஆய்வின் போது அத்தகைய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
காணொளியில் உள்ள மொழி:
காணொளியினை பகிரந்த நபர் இது தமிழ் மொழியில் உள்ளதாக சிங்களத்தில் ஒரு குரல் பதிவுடன் பகிர்ந்திருந்தார். ஆகவே நாம் காணொளியினை நன்கு அவதானித்த போது அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் பேசுவது தமிழ் அல்ல, அது தெலுங்கு மொழியாகும்.
இந்தியாவில் இடம்பெற்ற சம்பவம்:
நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது, இச்சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொமரம் பீம் Asifabad மாவட்டத்தின் சிந்தலமானேபல்லி மண்டலத்திற்குட்பட்ட Gudem கிராமத்தில் இடம்பெற்றது கண்டறியப்பட்டது.
சம்பவத்தின் பின்னணி:
குறிப்பிட்ட சம்பவம் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கொமரம் பீம் Asifabad மாவட்டத்தின் சிந்தலமானேபல்லி மண்டலத்தைச் சேர்ந்த Gudem என்ற கிராமத்தில் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டு 22.07.2026 அன்று பதிவிடப்பட்ட X பதிவு கீழே தரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காணொளியைப் பகிர்ந்துள்ள அந்தப் பதிவில், கூடெம் கிராமத்தில் சிறுவன் ஒருவன் கைப்பேசி வெடித்ததில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் அவரது முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், லோகேஷ் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காணொளியைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் வெளியிடப்பட்ட மேலும் சில பதிவுகள் Link 1, Link 2மற்றும் Link 3. அந்தப் பதிவுகளிலும் இந்த விபத்து கைப்பேசி வெடித்ததாலேயே நிகழ்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ‘The Hindu’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், 22.07.2026 அன்று கொமரம் பீம் Asifabad மாவட்டத்தில் பேட்டரி வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அச்சிறுவன் காகஸ்நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படும் வழியில் உயிரிழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் Gudem பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த லோகேஷ் என்ற மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேட்டரி வெடித்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்தச் செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொமரம் பீம் Asifabad மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கைப்பேசி பேட்டரியைப் பழுதுபார்க்க முயன்ற போது அது வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்தியா மற்றும் தெலங்கானா மாநில ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்தச் செய்திகள் Link 1, Link 2.
அச்சிறுவன் பேட்டரியை ஒரு சார்ஜருடன் (9 வோல்ட்) மின்சாரத்தில் இணைத்து, அதைத் தனது வாயில் வைத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் பேட்டரி வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் சில தெலுங்கு செய்தி வலைத்தளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்திகள் Link 1, Link 2 மற்றும் Link 3.
இது குறித்து நாங்கள் Factcrescendo இந்தியக் குழுவைத் தொடர்புகொண்டு வினவிய போது, இச்சம்பவம் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கொமரம் பீம் Asifabad பகுதியில் இடம்பெற்றது என்பதையும், மின்சாரத்தில் இணைக்கப்பட்ட கைப்பேசி பேட்டரியைப் பழுதுபார்க்க முயன்ற போதே இவ்விபத்து நிகழ்ந்தது என்பதையும் அவர்களும் உறுதிப்படுத்தினர்.
உள்ளூர் அதிகாரிகளின் உறுதிப்படுத்தல்:
மஸ்கெலியா பகுதியின் உள்ளூர் ஊடகவியலாளர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையம் மற்றும் மஸ்கெலியா வைத்தியசாலை ஆகியவற்றிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்பகுதியில் மொபைல் போன் வெடிப்பு தொடர்பாக எந்தவொரு சம்பவமும் அல்லது நோயாளியும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
மஸ்கெலியா பகுதி பிரதேச செய்தியாளர்கள்
மஸ்கெலியா பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளதா என்பதை ஆராய்வதற்காக நாங்கள் பிரதேச செய்தியாளர்களைத் தொடர்புகொண்டு வினவினோம். இதன்போது, மஸ்கெலியா பகுதியில் இவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையம்
இது தொடர்பாக நாங்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திடமும் வினவியதுடன், கைப்பேசி வெடித்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மஸ்கெலியா பகுதியில் இருந்து எந்தவொரு பதிவும் இல்லை என அவர்களும் தெரிவித்தனர்.
மஸ்கெலியா வைத்தியசாலை
மஸ்கெலியா பகுதியில் இவ்வாறானதொரு விபத்து நடந்திருந்தால், அது குறித்து மஸ்கெலியா வைத்தியசாலை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட விசாரணையில், இவ்வாறான எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என மஸ்கெலியா வைத்தியசாலை தெரிவித்தது.
கையடக்கத்தொலைபேசி அல்லது பிற சாதனங்களின் பேட்டரிகளை நேரடியாக மின்சாரத்துடன் இணைத்து பழுதுபார்ப்பது மிகவும் ஆபத்தானது.
Lithium-ion பேட்டரிகளில் நேர் மற்றும் எதிர் முனைகளைப் பிரித்து வைப்பதற்காக மெல்லிய Separator மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயனப் பொருட்கள் உள்ளன. UL ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டுவது போல, பேட்டரி ஒன்றை மின்சாரத்துடன் இணைத்து முறைசாரா முறையில் பழுதுபார்க்கும் போதோ அல்லது அதிக மின்னழுத்தத்தை வழங்கும் போதோ பேட்டரியின் உட்புற வெப்பநிலை கட்டுப்பாடின்றி உயர்கிறது. இது ஒரு சங்கிலி வினையை (Chain reaction) உருவாக்குவதுடன், இந்தச் செயல்முறை அறிவியலில் ‘Thermal Runaway‘ என்று அழைக்கப்படுகிறது. இதன் போது சில வினாடிகளுக்குள் பேட்டரியின் வெப்பநிலை நூற்றுக்கணக்கான செல்சியஸ் டிகிரி வரை உயர்கிறது.
வெப்பநிலை கடுமையாக உயரும் போது, பேட்டரியிலுள்ள இரசாயனங்கள் சிதைவடைந்து கார்பன் மொனொக்சைட், ஹைடிரஜன் புளோரைடு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை உற்பத்தி செய்கின்றன. பேட்டரியின் உறைக்கு இந்த வாயு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் போகும் போது, அது உடனடியாக வெடித்துச் சிதறுகிறது அல்லது தீப்பிடிக்கிறது. மேலதிக தகவல்கள் Link 1.
பிரிட்டிஷ் பாதுகாப்பு பேரவை (British Safety Council) குறிப்பிடுவது போல், சேதமடைந்த அல்லது வீங்கிய பேட்டரிகளைப் பழுதுபார்க்க முயலும் போது அதன் உட்புறக் கட்டமைப்பு சிதைவடையும் அபாயம் மிக அதிகம். வீங்கிய பேட்டரி என்பது ஏற்கனவே அதன் இரசாயனக் கட்டமைப்பு நிலையற்றதாகிவிட்டது என்பதற்கான எச்சரிக்கையாகும். மேலதிக தகவல்கள் Link 1,Link 2 மற்றும் Link 3.
மஸ்கெலியாவில் பாடசாலை மாணவன் ஒருவனின் கையடக்கத்தொலைபேசி வெடித்ததாகப் பரவும் செய்தி தவறான வழிகாட்டலாகும்
இந்த காணொளி இலங்கையைச் சேர்ந்தது அல்ல, இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமாகும். அங்கு மின்சாரத்தில் இணைக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசி பேட்டரியைப் பழுதுபார்க்க முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

