
INTRO :
ஈரான் – அமெரிக்க இடையிலான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சூழலில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போர் தாக்குதல்களின் காணொளிகள் என தெரிவித்து பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அவ்வாறு பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த காணொளியில் துபாய் மற்றும் அபுதாபி உயர் எச்சரிக்கை என தெரிவித்து கடந்த 2026.07.20 ஆம் திகதி குறிப்பிட்டு இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அதில் நான்கு வெவ்வேறு காணொளிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு அந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளமையை காணமுடிந்தது.
ஆகவே நாம் அந்த நான்கு காணொளிகளின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
முதலாவது காட்சி
குறித்த காணொளியில் இணைக்கப்பட்டிருந்த முதலாவது காட்சி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, அது கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அறிய முடிந்தது.

மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பஹ்ரைனில் நடந்த இந்த தாக்குதல் தொடர்பில் AP உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.Link
அதனடிப்படையில் குறித்த காணொளியானது ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிலையுடன் சம்பந்தப்பட்ட காணொளியாக இருந்தாலும், இந்த காணொளி இரு நாட்டிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததன் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் இது துபாய், அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் அல்ல என்பதுவும் உறுதியானது.
இரண்டாவது காட்சி
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இணைக்கப்பட்ட இரண்டாவது காணொளி தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட போது, அந்த காணொளியானது கடந்த மார்ச் மாதம் Operation True Promise 4 நடவடிக்கையின் கீழ், இஸ்ரேலின் முக்கிய தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் தனது புதிய Nasrallah சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதலை நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது. Link
அதனடிப்படையில் குறித்த காணொளியில் இரண்டாவதாக இடம்பெற்ற காணொளியும் போர் நிறுத்த ஒப்பந்த முறிவின் பின்னர் துபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது உறுதியானது.
மூன்றாவது காட்சி
மூன்றாவதாக இணைக்கப்பட்ட காணொளி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, அந்த காணொளியானது கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேலின் பல பகுதிகளில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது. Link | Link
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானும் இஸ்ரேலும் ஒன்றையொன்று குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை மீண்டும் நடத்தின.
2025 ஆம் ஆண்டு 22 ஆம் திகதி இஸ்ரேலைக் குறிவைத்து 30 ஏவுகணைகளை வீசியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி காணொளிக் காட்சிகளை வெளியிட்டிருந்தன.
ஈரானிய ஏவுகணை தாக்குதலை உறுதிசெய்த பின்னர், இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்ததாகவும், இடைமறிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்திருந்தது.
ஆகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டகாணொளியில் மூன்றாவதாக இணைக்கப்பட்ட காணொளியும் அண்மையில் துபாயில் இடம்பெற்ற தாக்குதல் அல்ல என்பதுடன் அது 2025 ஆம் ஆண்டு ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலின் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
நான்காவது காணொளி
எனவே குறித்த காணொளியில் இணைக்ப்பட்டுள்ள நான்காவது காணொளி தொடர்பில் ஆராய்ந்த போது அந்த காணொளியானது, அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு ஜுன் 27 ஆம் திகதி, ஈரான் பஹ்ரைனிலும் ஹோர்முஸ் நீரிணையிலும் உள்ள எண்ணெய் டேங்கர் மீதும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்ட போது எடுக்கப்பட்டது என்பது கண்டறிப்பட்டது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் நான்காவதாக இணைக்கப்பட்ட காணொளியானது துபாய் அல்லது அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது தவறானது என்பதுடன் அந்த காணொளி கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் காணொளி என்பதுவும் உறுதியானது.
போர் நிறுத்த ஒப்பந்த முறிவின் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தாக்குதல்கள் இடம்பெற்றதா?
ஜூலை 2026 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) முறிந்த பின்னர், ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மீது நேரடித் தாக்குதல்களை நடத்தவில்லை.
போர் நிறுத்த முறிவுக்குப் பிறகு, ஈரான் தனது தாக்குதல்களை பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் மீதே தீவிரப்படுத்தியது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பெரிய மற்றும் வளமான அண்டை நாடுகளைத் தாக்குவதை ஈரான் இம்முறை தவிர்த்துவிட்டது.
மேலும் பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு ஜூலை 24 ஆம் திகதியன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த நாடுகளின் இறையாண்மை மீதான மீறல் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அமீரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு கிடங்குகள் மீது போர் விமானத் தாக்குதல்களை நடத்தின.
2026 பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் (போர் நிறுத்தத்திற்கு முன்பு), ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியது.
2026 ஏப்ரல் நிலவரப்படி, ஈரானால் ஏவப்பட்ட 537 பெலிஸ்டிக் ஏவுகணைகள், 2,256 ட்ரோன்கள் மற்றும் 26 க்ரூஸ் ஏவுகணைகளை அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளான (Air Defence Systems) THAAD மற்றும் Patriot மூலம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
போர் நிறுத்த ஒப்பந்த முறிவிற்கு பின்னர் தற்போதைய போர் நிலைமைகள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், ஈரான் அப்பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தனது கட்டுப்பாட்டைச் செலுத்த முற்பட்டது.
ஈரான் நிர்ணயித்த குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்ற மறுத்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஜூலை 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. நிலைமை மோசமானதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2026 ஜூலை 8 ஆம் திகதியன்று போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார்.
அமெரிக்க மத்தியக் கட்டளைக் குழுவின் (CENTCOM) தகவலின்படி, ஈரானின் இராணுவக் கட்டளை மையங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள், தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு எதிராக, பஹ்ரைன், குவைத், ஜோர்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகள் மீது ஈரானிய இராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படை (IRGC) ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈராக்கின் பிரதமர் அலி அல்-சாதி மூலம் அமெரிக்கா தரப்பில் அளிக்கப்பட்ட புதிய தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தப் பரிந்துரையை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த சிக்கல்கள் தீர்க்கப்படாததால் ஈரான் நிராகரித்துவிட்டது.Link
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்கள் என பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அவை ஈரான் அமெரிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னர், போர் தீவிரமடைந்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


