குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதா.. ? 

Missing Context இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel

INTRO :

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “ VIDEO > இனிமேல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை விபரம் 👇 https://madawalaenews.com/24852.html   ” என கடந்த வருடம் ஜுலை மாதம் 18 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (18.07.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளதாக பகிரப்பட்டு வருகின்ற தகவல் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது, கடந்த வருடம் இலங்கை மாத்திரமல்ல உலக நாடுகளில் வாழுகின்ற இலங்கை மக்களின் மனதினை துயரத்தில் ஆழ்த்திய சம்பவமான குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் ஊடக சந்திப்பினை மேற்கொண்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சரான சரோஜா சாவித்திரி போல்ராஜ் கருத்தினை வைத்து இது பகிரப்படுகின்றமை அவதானிக்க கிடைத்தது.

சரோஜா சாவித்திரி போல்ராஜ் உண்மையில் கூறியது என்ன..?

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நடத்திய ஊடக சந்திப்பின் காணொளி, அத தெரண தமிழ்’ (Ada Derana Tamil) யூடியூப் தளத்தில் வெளியிடப்படிருந்து எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்களின் சுருக்கம் பின்வருமாறு:

  • குழந்தைகளைக் கைவிடக் கூடாது என்ற வேண்டுகோள்:

    மாவத்தகம பகுதியில் சிறுமி ஒருவர் வயல்வெளியில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, எக்காரணம் கொண்டும் பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் அனாதரவாகக் கைவிட்டுச் செல்ல வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொள்கிறார் .
  • பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றங்கள்:
    • பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி தவிர்க்கப்பட்டுள்ளது.
    • தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமின்றி, தாயின் குடும்பப் பெயரின் மூலம் குழந்தைக்குப் பெயரிட முடியும்.
  • அரசாங்கத்தின் பராமரிப்பு உதவி:

    குழந்தையை வளர்ப்பதற்குப் பொருளாதார வசதி இல்லாத சூழலிலும், அக்குழந்தையின் பராமரிப்பு மற்றும் பாடசாலைக் கல்வி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.
  • கருக்கலைப்பைத் தவிர்த்தல்:

    நாட்டில் கருக்கலைப்புக்குச் சட்டப்பூர்வ அனுமதி கிடையாது என்பதால், எந்தவொரு பெண்ணும் சட்டவிரோதக் கருக்கலைப்புக்கு முன்வரக் கூடாது என வலியுறுத்துகிறார்.
  • பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் திட்டமிடல்:

    நம்பிக்கையான சூழல் அல்லது குடும்பப் பாதுகாப்பு இல்லாத பட்சத்தில், கரு உருவாவதைத் தடுப்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்.
  • சட்டப்பூர்வப் பாதுகாப்பு மற்றும் தத்தெடுப்பு:

    குழந்தையைப் பராமரிக்க முடியாத நிலமையிலுள்ள தாய்மார்களுக்கு நிறுவனப் பாதுகாப்பை வழங்குவதோடு, குழந்தைகள் தேவைப்படும் குடும்பங்களுக்குச் சட்டப்பூர்வமாக ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் .
  • பாலியல் கல்வியின் முக்கியத்துவம்:

    சிறுவயதிலிருந்தே பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடசாலைகளில் பாலியல் கல்வியை வலியுறுத்துவது குறித்து கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கிறார் .

இதில் அவர் குறிப்பிட்டிருந்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றங்களை வைத்து தான் இணையத்தில் குறித்த தகவல் பகிரப்படுகின்றதை அவதானிக்க கிடைத்தது.

அதில் அவர் தெரிவித்த விடயமானது தந்தையின்றி பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கலில் இருக்கும் பெற்றோரின் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியை நீக்கியுள்ளதாகவும், மேலும் தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமின்றி, தன் தாயின் குடும்பப் பெயரின் மூலம் குழந்தைக்குப் பெயரிட முடியும் என தெரிவித்திருந்தார். 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சரின் செயலாளர்

இதனை நாம் உறுதி செய்ய சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சரின் செயலாளரை தொடர்புக்கொண்டு வினவினோம்.

அதில் தற்போது புதிதாக வழங்குகின்ற பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் குழந்தையின் பெற்றோர் திருமணம் செய்துள்ளனரா என்ற விடயம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதற்கு முன்னர் அச்சிடப்பட்டிருந்த பிறப்புப் பதிவுப் புத்தக பத்திரங்களில் குறித்த விடயம் இருப்பதாகவும், யாராவது தந்தையின்றி குழந்தையின் பிறப்பினை பதிவு செய்ய வருவராயின் அவர்களில் வேண்டுக்கோளுக்கு இணங்க குறித்த புதிய பிறப்புப் பதிவுப் புத்தக படிவம் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

பதிவாளர் நாயகம் திணைக்களம்

இது குறித்து நாம் தகவலினை மேலும் அறிவதற்கு நாம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தகவல் உத்தியோகத்தரை தொடர்புக்கொள்ள முயற்சித்த போது, அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.

ஆகவே நாம் பிரதேச பதிவாளர் ஒருவரை தொடர்புக்கொண்டு வினவியபோது, புதிதாக வழங்கப்படும் தேசிய பிறப்பு சன்றிதழ்  பத்திரத்தில் பெற்றோர் திருமணமாகி உள்ளனரா என்ற கேள்வி நீக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரணமாக பயன்பாட்டில் இருக்கும் பிறப்புப் பதிவுப் புத்தக பத்திரத்திலும் அந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய பிறப்புச் சான்றிதழ் 

இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் பதிவு செய்யப்பட வேண்டும். 1951 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ், பிறப்பு சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் பதிவாளர் ஜெனரல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நபர் பதிவு சட்டத்தின் கீழ், 15 வயது நிறைவடைந்த இலங்கையர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் அதிகாரம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மின்வர்த்தகச் சட்டம் மற்றும் 2019 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க (இலங்கை அடையாள எண்) விதிமுறைகளின் படி, ஒவ்வொரு இலங்கையருக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கும் அதிகாரமும் அதே திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒரே அடையாள எண் மூலம் பிறப்பிலிருந்து இறப்பு வரை அரச மற்றும் தனியார் துறைகளில் தேவையான சேவைகளை எளிதாகப் பெற முடியும்.

இதன் அடிப்படையில், ஆட்பதிவு திணைக்களத்தின் தகவல் முறைமையின் மூலம் தேசிய அடையாள எண் பதிவாளர் ஜெனரல் திணைக்களத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர், அந்த எண்ணைச் சேர்த்தே பதிவாளர் ஜெனரல் திணைக்களம் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்குகிறது.

2021 ஜனவரி 01 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த தேசிய பிறப்புச் சான்றிதழைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது பாரம்பரிய காகிதச் சான்றிதழை விட நவீனமும் பாதுகாப்பானதும் ஆகும். தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுவதால் போலிச் சான்றிதழ் தயாரிப்பது கடினமாகிறது. மேலும், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் ஏற்றதாகும்.

சிங்கள + ஆங்கிலம் அல்லது தமிழ் + ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வழங்கப்படுவதால் தனியே மொழிபெயர்ப்பு தேவையில்லை. திருத்தங்கள் செய்யப்பட்டால் அவை தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய சான்றிதழில் காட்டப்படும்.

தேசிய பிறப்புச் சான்றிதழின் சிறப்பம்சங்கள்:

1. A4 அளவிலான பாதுகாப்பு காகிதத்தில் அச்சிடப்படும்.

2. பதிவாளர் ஜெனரல் அவர்களின் கையொப்பத்துடன் வழங்கப்படும்.

3. QR குறியீடு மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் அடங்கும்.

4. தேசிய அடையாள அட்டை எண் (அடையாள எண்) சேர்க்கப்படும்.

5. சிங்கள + ஆங்கிலம் அல்லது தமிழ் + ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வழங்கப்படும்.

6. தேவையற்ற சில புலங்கள் (பெற்றோரின் திருமண நிலை போன்றவை) நீக்கப்பட்டுள்ளன.

7. பெற்றோரின் இனத்திற்கு மேலாக “தேசியத்துவம் (Nationality)” என்ற புதிய புலம் சேர்க்கப்பட்டுள்ளது.

8. திருத்தங்கள் செய்யப்பட்டால் பழைய தடயமின்றி மீண்டும் அச்சிடப்படும்.

9. முழுப் பெயரை குறிப்பிடும் வசதி.

10. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட    ஆவணம்.

இவை தவிர பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

2021.01.01க்கு பிறகு பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் தேசிய பிறப்புச் சான்றிதழின் முதல் பிரதியை முற்றிலும் இலவசமாக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தின் மாவட்ட பதிவாளர் பிரிவிலிருந்து பெறலாம்.

Link 1 | defence.lk

பிறப்பொன்றை பதிவு செய்வதற்கான விபரங்கள் வழங்கல் ஆவணப்பத்திரத்தில் திருமணத்தின் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதில் (32) கேள்வியாக பெற்றோர் விவாகம் செய்திருப்பின், தகப்பனின் தகவல்கள் பதிவு செய்ய வேண்டுமெனின் பெற்றோரின் கையொப்பம் இட ஒரு  பகுதி வழங்கப்பட்டுள்ளது.பெற்றோர் இருவரும், பிறப்பு நிகழ்ந்த வைத்தியசாலைக்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரிடம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக பிறப்பி​னை பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவுக்கான CR01 படிவம்
  • பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் வைத்தியசாலையினால் வழங்கப்படும் அறிக்கை
  • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
  • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
  • தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதி

நமது தேடலின் போது, 2025 ஆம் ஆண்டு இந்த பெற்றோர் திருமணம் தொடர்பாக கேள்வி மற்றும் தந்தையின் பெயர் இன்றி பதிவு செய்யும்  நடைமுறை அறிமுகம் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஆகவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்,  குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது போன்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் தெரிவித்த கருத்து தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதா.. ?

Fact Check By: S.G.Prabu

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *