2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர்பில் பகிரப்பட்ட போலியான தகவல்கள் என்ன? 

Misleading சர்வதேசம் | International விளையாட்டு | Sports

2026 FIFA  உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகளாவிய கவனத்தை ஈர்த்த வேளையில், அதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால்  (AI) உருவாக்கப்பட்ட காட்சிகள் (Deepfakes ), எடிட் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் தவறான பிரசாரங்கள் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களை திசைதிருப்பின. இந்த தொடர் முழுவதும் சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மிக முக்கியமான போலித் தகவல்கள் பற்றிய அறிக்கை பின்வருமாறு

தகவலின் விவரம் (What is the claim):

Claim : லமின் யமால் உலகக் கிண்ணத்துடன் பாலஸ்தீனக் கொடியைச் சுற்றிக்கொண்டிருந்தமை.

லமின் யமால் உலகக் கிண்ணத்துடன் பாலஸ்தீனக் கொடியை சுற்றிக்கொண்டிருக்கும் புகைப்படம் இவ்வாறு பரவியிருந்தது. 

Instagram| Archived Link 

Fact Check (உண்மை அறிவோம்)

இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீரர் லமின் யமால் உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு பாலஸ்தீனக் கொடியைத் தன் மீது போர்த்தியிருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால், உண்மை என்னவென்றால், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், உண்மையான புகைப்படங்களில் அவர் ‘Campeones’ (சாம்பியன்கள்) என்று எழுதப்பட்ட பதாகையை மட்டுமே போர்த்தியிருந்தாரே தவிர, எந்தவொரு கொடியையும் ஏந்தியிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. 

gettyimages 

அத்துடன் இறுதிப் போட்டியில் அவர் இருக்கும் வேறு புகைப்படங்களைச் பரிசோதிக்கும் போது, ​​அவர் அவ்வாறு பாலஸ்தீனக் கொடியைச் சுற்றிக்கொண்டிருக்கும் எந்த புகைப்படங்களையும் காணமுடியவில்லை. அதன்படி, இந்தப் புகைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், 2026 மே மாதத்தில் நடைபெற்ற லா லீகா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு பஸ்ஸில் பயணம் செய்தபோது அவர் உண்மையில் பாலஸ்தீனக் கொடியைக் காட்சிப்படுத்தியிருந்ததால், பலரும் மேற்குறிப்பிட்ட புகைப்படத்தையும் உண்மையான புகைப்படம் என்று நம்பியிருந்தனர். 

euronews.com|aljazeera 

Claim : யமால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் கைகுலுக்க மறுத்தார்

இறுதிப் போட்டிக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகக் கைகுலுக்க முற்பட்டவேளையில், யமால் ட்ரம்புடன் கைகுலுக்க மறுத்துவிட்டதாகக் கூறி காணொளியொன்று பகிரப்பட்டது. 

Threads  

அதேபோல் மற்றொரு காணொளியில், யமால் ட்ரம்புடன் கைகுலுக்காமல், ட்ரம்பை நோக்கி தனது கையால் ‘V’ குறியைக் காட்டியதாகக் காட்டப்பட்டது. 

Facebook 

Fact Check (உண்மை அறிவோம்)

பாலஸ்தீனர்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை காரணமாக லமின் யமால் டொனால்ட் ட்ரம்புடன் கைகுலுக்க மறுத்துவிட்டதாக ஊகித்து இந்தக் காணொளிகள் வெளியிடப்பட்ட போதிலும், மேற்கண்ட முதல் காணொளியானது யமாலின் பின்புறத்திலிருந்து படமாக்கப்பட்ட ஒன்றாகும். அதனால் நாங்கள் முன்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகளைப் பரிசோதித்தோம். அதற்கமைய, யமால் தனது பதக்கத்தைப் பெறுவதற்கு முன்பு ட்ரம்புடன் கைகுலுக்கி அவரைத் தழுவிக்கொள்வது அவதானிக்கப்பட்டது. 

Facebook 

அத்துடன் AFP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புகைப்படமொன்றிலும், யமால் டொனால்ட் ட்ரம்புடன் கைகுலுக்கிய தருணத்தின் புகைப்படம் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது.

AFP 

அத்துடன் மேற்கண்ட இரண்டாவது காணொளி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளி என்பது AI Detective Tool மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 

Claim: எர்லிங் ஹாலன்ட் தனது சொந்தப் பிரதிபிம்பத்தைப் பார்த்தே பயப்படுகிறார் 

Facebook  

Fact Check (உண்மை அறிவோம்)

இது 2026 ஜூன் மாதத்தில் ஒரு சீன படைப்பாளி Douyin (TikTok) தளத்தில் வெளியிட்ட ஒரு நகைச்சுவைக் காணொளியாகும். செயற்கை நுண்ணறிவு (AI Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உண்மையான காணொளியில் இருந்த சீன நாட்டவரின் முகத்திற்குப் பதிலாக ஹாலன்ட்டின் முகம் எடிட் செய்யப்பட்டு இக்காணொளி தயாரிக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆய்வு Link

Claim: ஜூட் பெல்லிங்காமும் புதிய “வாய் மூடும்” சிவப்பு அட்டை விதியும் 

இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்காம் போட்டியின் போது வாயை மூடிக்கொண்டு பேசியதால் ஃபிஃபாவின் புதிய விதியின் கீழ் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. 

Fact Check (உண்மை அறிவோம்)

FIFA  அமைப்பு வாய் மூடும் விதியை அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக அமுல்படுத்துகிறது. அவதூறான வார்த்தைகளை மறைப்பதைத் தடுப்பதே இந்த விதியின் நோக்கமாகும். 2026 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில், எதிரணியினருடன் மோதல் போக்கில் வாதாடிக்கொண்டே வாயை மூடிக்கொள்ளும் (Mouth-covering rule) புதிய விதியை மீறியதன் காரணமாக பியேரோ ஹிங்கபியே, மிகெல் அல்மிரோன் போன்ற வீரர்களுக்கு VAR தொழில்நுட்பத்தின் மூலம் நேரடி சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் ஜூட் பெல்லிங்காம் வாயை மூடிக்கொண்டு உரையாடியது கானா அணியின் தலைவர் ஜோர்டன் அய்யூவுடன் (Jordan Ayew) ஆகும்; அவர்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான வசைபாடல்களோ சண்டையோ (Confrontation) நடக்கவில்லை, அது ஒரு சாதாரண உரையாடலாக மட்டுமே இருந்தது. அவர்கள் இருவரும் நண்பர்களைப் போல அமைதியாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதால், நடுவர்களோ அல்லது VAR தொழில்நுட்பமோ அதனை ஒரு குற்றமாகக் கருதவில்லை. 

போட்டியின் போது ஏற்படும் மோதல்களின் போது அவதூறான வார்த்தைகளை மறைப்பதைத் தடுப்பதற்காக இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதில் விரோதப் போக்கிலான வாதப்பிரதிகவாதங்களுக்கும் சாதாரணத் தொடர்பாடலுக்கும் இடையே உள்ள வேறுபாடு அடையாளம் காணப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மோதலில்லாத சாதாரண உரையாடல்களின் போது வாயை மூடிக்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் அல்ல. Link

Claim: உலகக் கிண்ணப் போட்டிகளில் ‘முகச் சாயம்/வர்ணம்’ (Face paint) தடை செய்யப்படுதல் 

2026 FIFA  உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் முகத்தில் வர்ணம் அல்லது சாயம் பூசிக்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. 

FB | Archive 

Fact Check (உண்மை அறிவோம்)

இந்தப் பதிவுகள் முற்றிலும் போலியானவை மற்றும் ரசிகர்கள் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு மைதானங்களுக்கு உள்ளே செல்ல முழுமையான அனுமதி இருந்தது. ஆபத்தானதாக மாறக்கூடிய வர்ண கொள்கலன்களை (paint containers) மைதானத்திற்குள் கொண்டு செல்வது மட்டுமே தடை செய்யப்பட்டிருந்தது. Link

Claim: சிம்சன்ஸ் (The Simpsons) கார்ட்டூன் போர்த்துக்கல் வெற்றி பெறும் என்று கணித்துள்ளதாக வைரலான கதை 

‘The Simpsons’ கார்ட்டூன் தொடரின் ஒரு பகுதியில் 2026 உலகக் கிண்ணத்தில் போர்ச்சுக்கல் வெற்றி பெறும் எனக் கணித்துக்கூறியுள்ளதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று வெளியாகியிருந்தது. 

Facebook|Archived Link  

மேலும், 2026 FIFAவின் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதைப் பற்றியும் தொடர்புடைய கார்ட்டூன் பல தசாப்தங்களுக்கு முன்பே சரியாகக் கணித்துக் கூறியிருந்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகள் மேலும் பகிரப்பட்டு வந்தன. 

Facebook  

Fact Check (உண்மை அறிவோம்)

சிம்சன்ஸ் கார்ட்டூன் மூலம் 2026 FIFA  உலகக் கிண்ணத்தின் வெற்றியாளர் குறித்து எந்தக் கணிப்பும் கூறப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் கூற்றுகள், 1997 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட அக்கார்ட்டூனின் ஒரு பகுதிக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்; அதில் மெக்ஸிகோவிற்கும் போர்ச்சுக்கலுக்கும் இடையே நடைபெறும் ஒரு கற்பனையான போட்டி மட்டுமே காட்டப்படுகிறது. அதில் 2026 ஆம் ஆண்டைப் பற்றியோ அல்லது FIFA  உலகக் கிண்ணத்தைப் பற்றியோ அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ கிண்ணத்தை உயர்த்துவது குறித்தோ எந்தக் குறிப்பும் இல்லை. இது குறிதது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உண்மை சரிபார்ப்பு அறிக்கையை காண்க

Claim: FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இலக்கு வைத்த போலிக் காட்சிகள் 

FIFA தலைவர் ஒரே நேரத்தில் இரு நகரங்களில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் கலந்துகொண்டதாகவும், எகிப்தின் கோல் ஒன்றுக்குச் சிறப்பு கருத்து வழங்கியதாகவும், டொனால்ட் ட்ரம்பை விமர்சித்ததாகவும் கூறி புகைப்படப் பதிவுகள் பகிரப்பட்டன. 

X 

Fact Check (உண்மை அறிவோம்)

2026 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் போது ஒரே நேரத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) கலந்துகொண்டதாகக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் கூற்று பொய்யானதாகும். 

எக்ஸ் (X) தள கணக்கு ஒன்றில் வெளியிடப்பட்ட பதிவில், இன்ஃபான்டினோ ஒரே நேரத்தில் தொடங்கிய ஈக்வடோர் – ஜெர்மனி போட்டி மற்றும் ஐவரி கோஸ்ட் – குராக்கோ போட்டி ஆகியவற்றில் 10 நிமிட இடைவெளியில் தோன்றியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், முதல் புகைப்படம் உண்மையில் 2026 ஜூன் 15 அன்று நடைபெற்ற ஈரான் – நியூசிலாந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும். 

இரண்டாவது புகைப்படம்

ஜப்பானுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போட்டி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டனில் (Arlington) நடைபெற்றது. 

துனிசியாவுக்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான போட்டி அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கேன்சஸ் சிட்டியில் (Kansas City) நடைபெற்றது. இந்த இரண்டு அரங்கங்களுக்கு இடையே உள்ள தூரம் 500 மைல்கள் (800 கிலோமீட்டர்களுக்கு மேல்) ஆகும். இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் தொடங்கியதால், ஒரு சாதாரண மனிதனால் ஒரே நிமிடத்தில் (புகைப்படங்களில் காணப்படுவது போல் போட்டியின் 10:32 வது நிமிடத்தில்) இந்த இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. 

அந்தப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ வீடியோ காட்சிகளை மீண்டும் பரிசோதிக்கும் போது, சம்பந்தப்பட்ட நிமிடங்களில் இன்ஃபான்டினோ மைதானத்தில் இல்லை என்பது நிரூபணமாகிறது. 

துனிசியாவுக்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான போட்டி 

ஜப்பானுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போட்டி 

2026 ஜூன் 25 ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி காட்சிகளை (Fox Sports Replay) மீண்டும் பரிசோதித்துப் பார்த்தபோது, ஐவரி கோஸ்ட் – குராக்கோ போட்டியின் போது இன்ஃபான்டினோ உண்மையாகவே அன்றைய தினம் அந்த மைதானத்தில் இருந்திருப்பது தெரியவந்தது. 

இதற்கமைய, எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட முதல் புகைப்படமானது, 2026 ஜூன் 25 ஆம் திகதி நடைபெற்ற ஈக்வடோர் – ஜெர்மனி போட்டியின் போது இன்ஃபான்டினோ இருந்த காட்சியைக் காட்டவில்லை; மாறாக, அதற்கு 10 நாட்களுக்கு முன்பு, அதாவது 2026 ஜூன் 15 ஆம் திகதி  நடைபெற்ற ஈரான் – நியூசிலாந்து போட்டியின் போது தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் (Fox Sports) இன்ஃபான்டினோவின் உண்மையான தோற்றமாகும். அந்தப் பழைய போட்டியின் வீடியோவிலிருந்து இன்ஃபான்டினோ அமர்ந்திருக்கும் பகுதியை (ஸ்கிரீன்ஷாட் ஆக) எடுத்து, பின்னர் அதன் மேலே உள்ள ஸ்கோர் போர்டை (Scoreboard) கிராபிக்ஸ் மூலம் மாற்றி, அதனை “ஜெர்மனி மற்றும் ஈக்வடோர்“ இடையேயான போட்டி போல போலியாகத் தயாரித்துள்ளனர். 

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page | Twitter Page | Instagram |  Google News Channel  |TikTok | Youtube


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: 2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர்பில் பகிரப்பட்ட போலியான தகவல்கள் என்ன?

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *