
INTRO :
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகவும், அதற்காக ஆண்டுக்கு 3 கோடியே 30 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சில பிரதான ஊடகங்களும், சமூக ஊடகப் பதிவுகளும் தெரிவித்திருந்தன. இதன் மூலம் வெளிநபர்களுக்கு கூட ஜனாதிபதி மாளிகைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டிருந்தன.
எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):



Fb| Archive | FB | Archive | Fb | Archive
குறித்த பதிவில் ஜனாதிபதி மாளிகைகளில் 3000க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.07.25 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
வெளிநபர்களுக்கு தங்குமிட வசதி வழங்கப்படவில்லை – ஜனாதிபதி ஊடகப் பிரிவு
பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கவில்லை என்றும், அது முற்றிலும் பொய்யான செய்தி என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டடங்களில் பாதுகாப்புப் பிரிவு, ஊடக மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்தனரே தவிர, எந்தவொரு அதிகாரியும் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அண்மையில் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கை அதாவது தணிக்கை அறிக்கையில் உண்மையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது தொடர்பில் நாம் பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் – 2025 ஜனாதிபதி செயலக வருடாந்த செயற்திறன் அறிக்கை மற்றும் தணிக்கை அறிக்கை என்பவற்றை பரிசோதித்தோம்.
தணிக்கை அறிக்கையில் உண்மையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின் “(இ) ஜனாதிபதி மாளிகை பராமரிப்புச் செலவுகள்” என்ற தலைப்பின் கீழ் ரூபா 32,982,675 செலவும், 3,089 பேர் தங்கியிருந்தமையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அத்துடன், 7 மாளிகைகளுக்கான தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக ரூபா 32,982,675 செலவிடப்பட்டிருந்ததாகவும், மேலும் கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை மாளிகைகளில் குறித்த ஆண்டில் எந்தவொரு கூட்டமோ அல்லது தங்குதலோ மேற்கொள்ளப்படாத போதிலும், தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக ரூ. 2,447,754 மொத்தச் செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் செயற்திறன் அறிக்கையில், ஜனாதிபதி மாளிகை பராமரிப்புச் செலவுகளின் கீழ் “தங்கியிருந்த நபர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தமையினாலும், அதில் அரசாங்கத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் என தெளிவாகக் குறிப்பிடப்படாத காரணத்தினாலேயே சமூகத்தில் இவ்வாறான தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், இந்த 3,089 அதிகாரிகளும் ஜனாதிபதி மாளிகையில்தான் தங்கியிருந்ததாக இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விளக்கத்திற்கமைய, ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டடங்களில்தான் பாதுகாப்புப் பிரிவு, ஊடக மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அங்கு தங்கியிருந்தனரே தவிர, ஜனாதிபதி மாளிகைக்குள் தங்கியிருக்கவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறிப்பாக இந்தத் தணிக்கை அறிக்கையில் ஜனாதிபதி மாளிகை பராமரிப்புச் செலவுகள் உரிய முறையில் தெளிவுபடுத்தப்படாத காரணத்தினாலேயே ஊடகங்களும், பொதுமக்களும் இவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி மாளிகை பராமரிப்புச் செலவுகள் பற்றிய முழுமையான செய்தியும் பொய்யானது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியதாகக் தெரிவித்து, கணக்காய்வாளர் அறிக்கையில் உள்ளவாறே செய்திகளை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவுகளும் போலியானவை எனச் சில பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. அத்துடன், இது ஊடகங்களாலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட அவதூறுப் பிரசாரம் எனவும் சில சமூக ஊடக பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தன.


Facebook | Archived Link Facebook | Archived Link
மேலும் ஹிரு செய்தியின் (Hiru News) உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தைப் பரிசோதிக்கும்போது, அங்கு தணிக்கை அறிக்கைக்கு அமையவே செய்தி வெளியிடப்பட்டுள்ளதுடன், பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதிலும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, இதனை ஒரு போலியான செய்தி எனக் குறிப்பிட முடியாது. அத்துடன், குறித்த சமூக ஊடகப் பதிவின் ‘History’ பகுதியைப் பரிசோதிக்கும்போது, அவர்கள் அந்தச் செய்தியுடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதிலை புதுப்பித்தல் (Update) மாத்திரமே செய்துள்ளதுடன், வேறு எந்த திருத்தங்களும் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
இதற்கமைய, மேற்கண்ட பதிவுகள் முற்றிலும் போலியான செய்தி அல்ல என்பதுடன், கணக்காய்வாளர் நாயகத்தின் செயற்திறன் அறிக்கையில் ஜனாதிபதி மாளிகை பராமரிப்புச் செலவுகள் தொடர்பான பகுதி தெளிவற்ற முறையில் குறிப்பிடப்பட்டமையால் தவறான புரிதல் ஏற்பட்ட சந்தர்ப்பமாகும் என்பது தெளிவாகின்றது. அதாவது, வெளிநபர்கள் யாரும் தங்குமிட வசதியை பெறவில்லை என்ற பகுதி மாத்திரமே உண்மையானதாகும். ஜனாதிபதி மாளிகைகளில் யாரும் தங்காவிட்டாலும், பராமரிப்புக்காகச் செல்லும் செலவுகள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையின்படி ஊடகங்களாலும் சரியாகவே வெளியிடப்பட்டிருந்தன.
ஜனாதிபதி மாளிகைகளின் 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான உத்தியோகபூர்வ பராமரிப்புச் செலவுகள்
இங்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண பராமரிப்புச் செலவுகள் தனித்தனியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், 2023 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்காக மேற்கொள்ளப்பட்ட விசேட மூலதனச் செலவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் செயற்திறன் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் 8 ஜனாதிபதி மாளிகைகளுக்காக ரூபா 80,154,422 பராமரிப்புச் செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாளிகைகளில் 392 பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும், 16 சிவில் ஊழியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குறித்த மதிப்பாய்வு ஆண்டில் 16 சிவில் ஊழியர்களுக்காக ரூபா 13,741,080 சம்பளம் மற்றும் கெடுப்பனவுகள் அலுவலகத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் 12)

| வருடம் | செலவு விபரம் | தொகை (ரூபா) |
| 2023 | சாதாரண பராமரிப்புச் செலவுகள் ஜனாதிபதி செயலகத்தின் மொத்தச் செலவுகளுடன் உள்ளடக்கப்பட்டுள்ளது. | தனித்தனியாகக் குறிப்பிடப்படவில்லை |
| முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக இலங்கை கடற்படைக்குச் செலுத்தப்பட்ட தொகை | 18,336,135 | |
| குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மின்தூக்கி (Escalator/Lift) ஒன்று பொருத்தப்பட்டமை | 15,093,876 | |
| குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மின்உற்பத்தி இயந்திரம் (Generator) ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை | 4,885,844 | |
| முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்திற்கான விசேட மூலதனச் செலவுகளின் மொத்தம் | 38,315,855 | |
| 2024 | 8 ஜனாதிபதி மாளிகைகளின் மொத்த பராமரிப்புச் செலவு | 80,154,422 |
| மாளிகைகளில் சேவையாற்றிய 16 சிவில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் | 13,741,080 | |
| 2025 | 7 ஜனாதிபதி மாளிகைகளின் சாதாரண செலவுகள் (தொலைபேசி, மின்சாரம் போன்றவை) | 32,982,675 |
| பயன்பாட்டில் இல்லாத 3 மாளிகைகளின் (கதிர்காமம், மஹியங்கனை, பெந்தோட்டை) பராமரிப்புச் செலவுகள் | 2,447,754 | |
| 2025 மொத்த பராமரிப்புச் செலவு | 35,430,429 |
இந்த மூன்று ஆண்டுகளுக்கும் நேரடியான மற்றும் துல்லியமான ஒப்பீட்டை நடைமுறையில் மேற்கொள்வது கடினமாகும்; ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை அறிக்கைகளில் செலவுகள் காட்டப்படும் விதம் (சாதாரண பராமரிப்புச் செலவுகள், விசேட மூலதனச் செலவுகள் அல்லது குறிப்பிட்ட கட்டமைப்புகளுக்கு மட்டும் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் போன்ற காரணங்களால்) வேறுபடுகின்றன.
2023 ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளின் சாதாரண பராமரிப்புச் செலவுகள் அல்லது ஊழியர்களின் சம்பளம் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவை முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ரூபா 38,315,855 பெறுமதியான திருத்தப்பணிகள், மின்தூக்கி (Elevator) மற்றும் மின்உற்பத்தி இயந்திரம் (Generator) ஒன்றைக் கொள்வனவு செய்தல் போன்ற விசேட மூலதனச் செலவுகள் மாத்திரமே ஆகும்.
2024 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, 8 மாளிகைகளின் மொத்த பராமரிப்புச் செலவு (ரூபா 80,154,422) மற்றும் 16 சிவில் ஊழியர்களின் சம்பளம் தொடர்பான தரவுகள் (ரூபா 13,741,080) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், 2025 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 10 மாளிகைகளின் (பயன்பாட்டில் உள்ள 7 மற்றும் பயன்படுத்தப்படாத 3) பராமரிப்புக் கட்டணங்கள் (தொலைபேசி, மின்சாரம் போன்றவை) மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கான ஊழியர்களின் சம்பளச் செலவுகள் அதில் உள்ளடக்கப்படவில்லை.
ஆகவே, ஆண்டுதோறும் கணக்கிடப்பட்ட செலவினங்களின் வகைகள் (சாதாரண பராமரிப்பு, விசேட மூலதனச் செலவுகள், சம்பளம்) மற்றும் கருத்திற்கொள்ளப்பட்ட மாளிகைகளின் எண்ணிக்கைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுவதால், இந்த மூன்று ஆண்டுகளின் செலவுகளை ஒன்றுக்கொன்று நேரடியாகவும் துல்லியமாகவும் ஒப்பிடுவது கடினமானதாகும் .
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


