
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதியன்று பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில், அவரது விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை படுகொலைகள், மத்திய வங்கி நிதி மோசடி, கடவுச்சீட்டு மோசடி டெண்டர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் போன்ற காரணங்களை முன்வைத்தே இந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது.
எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):


Fact Check (உண்மை அறிவோம்)
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஜூலை 16ஆமட திகதியன்று பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. Link | Link
2026 ஜூலை 16 ஆம் திகதியன்று திட்டமிடப்பட்டிருந்த பிரான்ஸ் விஜயத்தை ஒத்திவைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆனால், 2026 ஜூலை 16 அன்று திட்டமிடப்பட்டிருந்த இந்த விஜயத்தை ஒத்திவைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கையில் நிலவும் உள்நாட்டுத் தேவைகளே இதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் தீர்க்கமான உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி அவர்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியிருந்தன. Link | Link
இருப்பினும், எந்தவொரு ஊடக அறிக்கையிலும் பிரான்ஸ் அரசாங்கம் ஜனாதிபதியின் விசா விண்ணப்பத்தை நிராகரித்ததாகவோ அல்லது சிறைச்சாலை படுகொலைகள், மத்திய வங்கி நிதி மோசடி, கடவுச்சீட்டு மோசடி டெண்டர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்ததாகவோ குறிப்பிடப்படவில்லை.
மேற்படி விஜயத்திற்கான புதிய திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு, விஜயத்தை ஒத்திவைப்பது குறித்து பிரான்ஸ் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் பொருத்தமான ஒரு திகதியில் விஜயத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதுடன், அதற்காக புதிய திகதி ஒன்றை பிரான்ஸ் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இது ஜனாதிபதிக்கு பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பாகும்.
இது ஜனாதிபதிக்கு பிரான்ஸ் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பாகும், மேலும் இந்த அழைப்பு 2026 பெப்ரவரி மாதத்தில் விடுக்கப்பட்டது. இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் (AI Impact Summit) போது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின்போது இந்த அழைப்பு நேரடியாக விடுக்கப்பட்டது. Link
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
இது குறித்து நாம் மேற்கொண்ட விசாரணையின்போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகையில், இந்தியாவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் போது, பிரானஸ் ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்ததாகத் தெரிவித்தது. இதற்காக ஜூலை மாதத்தில் ஒரு திகதியையும் அவர்களே பரிந்துரைத்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக ஜனாதிபதி அவர்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டியது அவசியமென்பதால், இந்த விஜயத்தை இந்த ஆண்டின் இறுதிப் பகுதிக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜூலை மாதத்தில் ஜனாதிபதி அவர்களால் இந்த விஜயத்தில் கலந்துகொள்ள இயலாது என்பது ஜூலை மாதத்தின் ஆரம்பத்திலேயே தெளிவாகியிருந்ததாகவும், அதற்கமைய இந்த விஜயத்தை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் இம்மாதத்தின் ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், ஜூலை மாதத்தில் விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு பிரான்ஸிடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்திருந்தாலும், ஜூலை 16 ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் இத்தகைய விஜயம் ஒன்றில் கலந்துகொள்வார் என்பதை உறுதிப்படுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவு எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். திகதியை உறுதிப்படுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவு எந்தவொரு அறிக்கையையும் வெளியிடாத நிலையில், ஊடகங்கள் குறித்த தினத்தில் ஜனாதிபதி இத்தகைய விஜயத்தில் கலந்துகொள்வார் என செய்தி வெளியிட்டது கேள்விக்குரியது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்தப் பதிவு முற்றிலும் போலியானது என்றும், ஜனாதிபதியின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியது. இது பிரான்ஸிடமிருந்து கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பு என்பதால், இவ்வாறான நிலையில் ஒரு நாட்டின் ஜனாதிபதியின் விசா நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர்கள் மேலதிகமாகத் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஊடகச் செயலாளர்
இது குறித்து நாம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஊடகச் செயலாளரிடம் வினவியபோது, ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பிரான்ஸ் விஜயத்தை இந்த ஆண்டின் இறுதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார். இருப்பினும், இது விசா நிராகரிக்கப்பட்டதால் நடந்த ஒன்றல்ல என்றும், இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக ஜனாதிபதி அவர்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டியது அவசியமென்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை மேபச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் பிரான்ஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும், செய்திகள் தவறானவை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த விஜயம் விசா தொடர்பான சிக்கலால் ஒத்திவைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களின் உடன்படிக்கையின்படி, இரு தரப்பினருக்கும் வசதியான திகதி அல்லது காலப்பகுதி குறித்து எதிர்காலத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில சம்பவங்கள் காரணமாக மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்களுக்கு உள்ளாவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், நாட்டின் உள்நாட்டுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரான்ஸ் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் விஜயம் செய்யத் தயாராக இருந்த இலங்கை ஜனாதிபதியின் விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்ததாகக் கூறுவதற்கோ அல்லது அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்கோ தெளிவான அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு விசா நிராகரிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என்பதை, நாம் மேற்கொண்ட விசாரணையின்போது இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியது. இந்த விஜயத்திற்கான திகதியை மீண்டும் திட்டமிடுவதற்காக இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், எமது மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் பிரான்ஸ் உத்தியோகபூர்வ விஜயத்தின் பிரதான நோக்கங்கள் மற்றும் திட்டங்கள்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடனான சந்திப்பு இந்த விஜயத்தின் மிக முக்கியமான நிகழ்வாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இந்து பசுபிக் பிராந்திய மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது குறித்து அரச தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும்.
மேலும், இலங்கைக்கு வழங்கப்படும் GSP Plus வரிச் சலுகையைத் தொடர்ந்து நீட்டிப்பதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான பிரான்ஸின் இராஜதந்திர ஆதரவைப் பெறுவதும் இந்த விஜயத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். அதேபோல், உலகின் மிகப்பெரிய கடல்சார் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான CMA CGM நிறுவனத்தின் தலைவருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கொள்கலன் முனையங்கள் சார்ந்த முதலீடுகளை விரிவுபடுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
பிரான்ஸின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும், பிரான்ஸ் முதலீடுகளை இலங்கையை நோக்கி ஈர்ப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பிரான்ஸின் உதவி பெறும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவைப் பெறுதல் போன்ற இராஜதந்திர சந்திப்புகள் மூலம், இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகவும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் பிரான்ஸின் நேரடி பங்களிப்பைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. Link
ஒரு நாட்டின் அரச தலைவரின் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக விசா பெறும் செயல்முறை
சாதாரண இலங்கை பிரஜை ஒருவர் பிரான்ஸ் செல்ல விரும்பினால், ‘France-Visas’ என்ற உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாக ‘ஷெங்கன்’ (Schengen) குறுகிய கால விசாவுக்கு விண்ணப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட விசா மையத்தில் தனது உயிரியளவியல் (biometric) தரவுகளை வழங்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில் விசா மறுக்கப்பட்டால், அவருக்கு எழுத்துமூலமான மறுப்பு கடிதமும், மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
ஆனால், ஒரு நாட்டுத் தலைவர் (ஜனாதிபதி போன்றோர்) இந்தச் சாதாரண நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் உத்தியோகபூர்வ பயணங்களுக்கான நடவடிக்கைகள், இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையிலான ‘இராஜதந்திரக் குறிப்புகள்’ (Note Verbale) ஊடாகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன. தேவையான இராஜதந்திர விசாவை சம்பந்தப்பட்ட தூதரகம் நேரடியாகவே வழங்குகிறது.
ஒரு நாட்டுத் தலைவரின் உத்தியோகபூர்வ அல்லது அரச பயணமானது, அரச மற்றும் இராஜதந்திர மட்டங்களில் (ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ↔ எலிஸே அரண்மனை மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு) முன்கூட்டியே இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. பயணத் திகதிகள், தூதுக்குழுவினர் மற்றும் கையெழுத்திடப்பட வேண்டிய ஒப்பந்தங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டு நடவடிக்கைகள் என்பது அரசியல் இணக்கப்பாட்டிற்குப் பிறகு நடைபெறும் ஒரு முறையான செயல்முறையே தவிர, அதற்கு முன்னால் இருக்கும் ஒரு தடையல்ல.
ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், விருந்தளிக்கும் நாட்டுத் தலைவரே அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அவருக்கு விசா மறுக்கப்படுவது ஒரு பெரிய இராஜதந்திர நிகழ்வாகக் கருதப்படும். அத்தகைய சூழ்நிலையில், பிரான்ஸ் அரசாங்கம் அதனை பகிரங்கமாக அறிவித்து அதற்கான நியாயத்தை விளக்க வேண்டியிருக்கும். ஆனால், இதுவரை அத்தகைய எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தூதுக்குழு உறுப்பினரின் விசா” தொடர்பில் எதிர்க்கட்சி எழுப்பிய விடயம்
தூதுக்குழுவின் உறுப்பினருக்கு விசா நிராகரிப்பட்டமையினாலேயே, இவ்வளவு முக்கியமான அரச விஜயத்தை முற்றிலுமாக ரத்து செய்ய நேரிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். Link (இருப்பினும், இந்த விடயங்கள் குறித்து நாம் சுயாதீனமான சரிபார்ப்புகளை மேற்கொள்ளவில்லை.)
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், பிரான்ஸ் அரசாங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக பகிரப்படும் பதிவு தவறானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டமை இலங்கைத் தரப்பினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதை ஜனாதிபதி ஊடகப் பிரிவு, வெளிவிவகார அமைச்சரின் ஊடகச் செயலாளர் மற்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ஆகிய மூவருமே உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாக இருந்தமையால், சாதாரண விசா நிராகரிப்பு செயல்முறை இதற்குப் பொருந்தாது.
நாம் மேற்கொண்ட விசாரணையின்போது, ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு விசா நிராகரிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படும் தகவல்கள் தவறானது என்பதை இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகமும் உறுதிப்படுத்தியது. இந்த விஜயத்திற்கான திகதியை மீண்டும் திட்டமிடுவதற்காக இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், திட்டமிட்டபடி இந்த விஜயம் மேற்கொள்ளப்படாமைக்கான பிரதான காரணத்தை எம்மால் சுயாதீனமாக முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


