முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்கு பாதிப்பை தடுக்கலாமா?

False சமூகம் | Society

இலங்கையில் தற்போது டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் பின்னணியில், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பல்வேறு முறைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், இம்முறைகளில் பெரும்பாலானவை டெங்கு நோயை  உண்மையாகவே கட்டுப்படுத்தக்கூடியவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அதில் முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்வதன் மூலம் டெங்கு நுளம்புகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளலாம்  என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

எனவே அதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Archived Link

சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறிப்பில், டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் முழங்காலுக்குக் கீழே பாதங்கள் வரை தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும் என்றும், டெங்கு நுளம்புகளால் முழங்காலுக்கு மேல் பறக்க முடியாது என்றும் ஒரு செய்தி  திருப்பதி சாய் சுதா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பி. சுகுமார் (Dr. B. Sukumar) என்பவரது பெயரில் பகிரப்பட்டு வருகின்றது. தேங்காய் எண்ணெய் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி (antibiotic) என்றும் இந்த செய்தியைப் பரப்புவது பல உயிர்களைக் காக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Fact Check (உண்மை அறிவோம்)

ஆங்கிலத்தில் கையால் எழுதப்பட்ட பரிந்துரையாக பகிரப்படும்  இந்தச் செய்தி, இந்தியாவின் திருப்பதியில் உள்ள ‘சாய் சுதா’ (Saisudha) மருத்துவமனையின் வைத்தியர்  பி. சுகுமார் (B. Sukumar) என்பவரின் பரிந்துரை என பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே நாம் இது குறித்து ஆய்வினை மேற்கொண்ட போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உண்மையில் ‘சாய் சுதா மருத்துவமனை‘ என்ற பெயரில் ஒரு மருத்துவமனை உள்ளது என்பதுவும் அங்கு சுகுமார் என்ற பெயரில் ஒரு மருத்துவர் பணிபுரிகிறார் என்பதுவும் கண்டறியப்பட்டது. ஆனால்  வட்ஸ்அப் உள்ளிட்டசமூக வலைதளங்கள் ஊடாகப் பகிரப்படும் இந்தத் தகவல்கள் உண்மையில்  அவர் பரிந்துரைத்தவையா என்பது குறித்து எமது ஃபேக்ட் கிரஸண்டோ இந்தியக் குழுவினர் அவரிடம் வினவியிருந்தனர். 

இதன்போது தாம் ஒரு எலும்பியல் நிபுணர் (orthopedist) என்று குறிப்பிட்ட அவர், இவ்வாறான எந்தவொரு முறையையும் டெங்கு நோயைத் தடுப்பதற்கான வழிமுறையாகத் தாம் பரிந்துரைக்கவில்லை என்றும், பல ஆண்டுகளாகத் தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி இவ்வாறான போலியான பதிவுகள் பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்குவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் மருத்துவர் சுகுமார் குறிப்பிட்டார். 

மேலும் டெங்கு நோய் பரவல் தொடர்பாக எதிர்காலம் அச்சமூட்டுவதாக அமையலாம் என்று உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டியிருந்தது. குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமானதாக மாறக்கூடும் என்பதையும் அவர்கள் சரியாகவே கணித்திருந்தனர். 

மேலும், உலக சுகாதார நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, டெங்கு நோயைக் கடத்தும் நுளம்புகளுக்கு (Aedes aegypti) 400 மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சாதாரண நிலையில் டெங்கு நுளம்புகளுக்கு தரை மட்டத்திலிருந்து சுமார் 50 அடி உயரம் வரை பறக்கும் திறன் உள்ளது. இதனாலேயே, அடுக்குமாடி குடியிருப்புகளிலும் டெங்கு நோயாளிகள் பதிவாகின்றனர். 

எனவே, முழங்காலுக்குக் கீழே உள்ள உயரத்திற்கு மாத்திரமே  டெங்கு நுளம்புகள் பறக்கும் என்று சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படும் கூற்று பொய்யானது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. 

தேங்காய் எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியாக (antibiotic) செயல்படுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை.

லோரிக் அமிலத்தின் வழிப்பொருளான ‘மோனோலாரின்’ (Monolaurin) சில நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. லோரிக் அமிலம் தேங்காய் எண்ணெயின் ஒரு அங்கமாக இருப்பதால், தேங்காய் எண்ணெயும் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாகக் கருதப்படலாம் என்று சமூக வலைதளப் பதிவுகள் மூலம் பரப்பப்பட்டு வரலாம். இருப்பினும், தூய தேங்காய் எண்ணெயிலோ அல்லது பிரித்தெடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெயிலோ இத்தகைய பண்புகள் இல்லை என்பது ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

The Conversation 

மேலும் மோனோலாரின் (Monolaurin) பிரித்தெடுப்பதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுக்களுக்கு எதிராகச் செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சேர்மம் தொற்றுக்களுக்கு எதிராக திறம்படப் போராடக்கூடிய ஒரு சேர்மமாக அறியப்படுகிறது. இருப்பினும், தேங்காய் எண்ணெயில் இந்தச் சேர்மத்தை நேரடியாகக் காண முடியாது. தேங்காய் எண்ணெயில் உள்ள லோரிக் அமிலத்தைப் பயன்படுத்தியே இது பிரித்தெடுக்கப்படுகிறது. எலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், தேங்காய் எண்ணெய் தொற்றுக்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. Link

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு

இது குறித்து  நாம் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரிடம் வினவியிருந்தோம். இதன்போது முழங்காலுக்குக் கீழே தேங்காய் எண்ணெய் தடவி டெங்கு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படும் பதிவுகளில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் தற்போது டெங்கு தொடர்பாகப் பல தகவல்கள் பகிரப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றில் சில விடயங்களை மேலும் சிந்தித்து ஆராய வேண்டியுள்ளதாகவும், சில தகவல்கள் தவறானவை என்றும் தெரிவித்தார். 

இலங்கையில் டெங்கு நோய் பரவல்

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (19) மாத்திரம் புதிதாக 2,652 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 162 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்தும் அதிக அவதானமிக்க வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும் பதிவாகியிருந்த நிலையில், ஜூலை மாதத்தின் கடந்த 19 நாட்களில் மாத்திரம் 20,666 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், இவ்வருடத்தில் டெங்கு நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாகாண மட்டங்களில் அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 40,009 நோயாளர்கள் (52.61%) பதிவாகியுள்ளனர். மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,910 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 15,110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். Link

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்கு பாதிப்பைத் தடுக்கலாம் என்று பரப்பப்படும் தகவல், இந்திய மருத்துவர் ஒருவரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திப் பகிரப்படும் போலியான பதிவு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நோயை கடத்தும் நுளம்புகள் முழங்கால் மட்டத்தை விட அதிக உயரத்திற்குப் பறக்கக்கூடியவை. தற்போது கண்டறியப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மைகளின்படி, தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியாது. இதனைத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Result Stamp

Title: முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்கு பாதிப்பை தடுக்கலாமா?

Written By: Suji Shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *