
இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி உள்ளிட்ட சர்வதேசத் தரப்பினர் சான்றிதழ் வழங்கியுள்ளதாக, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பீ. சரத் தெரிவித்திருந்த கருத்துக்கள், பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தன.
எனவே உண்மையில் இலங்கை தெற்காசியாவின் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடா என்பதையும், அது குறித்து உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சான்றளித்துள்ளனவா என்பது குறித்தும் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் இலங்கை தற்போது தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக மாறியுள்ளது என தெரிவித்து கடந்த 14 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
அதேபோல, சில பிரதான ஊடகங்களும் ‘தெற்காசியாவின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் இலங்கை பொருளாதாரம் என உலக வங்கி கூறுகிறது’ என்ற தலைப்பில் செய்திகளை வெளியிட்டிருந்தன. இருப்பினும், அந்தச் செய்தி அறிக்கையின் உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, உலக வங்கியின் புதிய தரவுகளின்படி, தலா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP per capita) வளர்ச்சி வீதத்தில், தெற்காசியாவில் முதலிடத்தைப் பிடிக்க இலங்கை முன்வந்துள்ளது என்பதேயாகும். 2024 ஆம் ஆண்டில் 4,545 டொலராக இருந்த தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி, நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஆம் ஆண்டளவில் 5,002 டொலராக அதிகரித்துள்ளதாகவும், இதன்போது மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைப் பின்தள்ளி இலங்கை பிராந்தியத்தில் முன்னிலையில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
2026 ஜூலை 01 ஆம் திகதி முதல் 2027 ஜூன் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில், இலங்கை தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள மிக முக்கியமான வகைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் என்னவென்றால், பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக, 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒருமுறை “உயர்-நடுத்தர வருமானம் கொண்ட” (Upper-Middle-Income) நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளமையாகும். 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு கைத்தொழில் நடவடிக்கைகள், சேவைத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துடன், 2025 இல் 5% உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்ததன் காரணமாகவே, இலங்கை மீண்டும் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. (World Bank – 2026-2027 income classifications)
உலக வங்கியின் வகைப்பாட்டின்படி, ஒரு நாடு ‘உயர்-நடுத்தர வருமானம் கொண்ட’ (Upper-Middle-Income) நாடாக வகைப்படுத்தப்படுவதற்கு, அதன் தலா வருமானம் 4,636 – 14,375 டொலர் எல்லைக்குள் இருக்க வேண்டும். உலக வங்கியின் வகைப்பாட்டின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கை 4,670 டொலர் பெறுமதியை அடைந்து, அந்த எல்லையின் குறைந்தபட்ச பெறுமதிக்கு சற்று மேலாகச் சென்று, குறித்த பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகைப்படுத்தலுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் ‘உயர்-நடுத்தர வருமானம் கொண்ட’ நிலையில் இரண்டு நாடுகள் மட்டுமே உள்ளன, அவை இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகும். World Bank – Country & Lending Groups

World Bank | Archived Link மேலதிய விபரங்களுக்கு Link | Link
கவனிக்க வேண்டிய விடயம்: தலா மொத்த தேசிய வருமானம் (GNI per capita) என்பது ஒரு நாட்டில் வாழும் சராசரி நபர் ஒரு வருடத்தில் உழைக்கும் வருமானத்தைக் காட்டும் குறியீடாகும். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வலிமையை மக்கள் தொகைக்கு ஏற்ப அளவிடுவதற்காக உலக வங்கி பயன்படுத்தும் மிக முக்கியமான அளவுகோல் இதுவாகும். இது ஒரு நபரின் உண்மையான தனிப்பட்ட சம்பளம் அல்ல; நாட்டின் மொத்த வருமானம் மக்கள் தொகைக்கு இடையே சமமாகப் பகிரப்பட்டால் ஒருவருக்குக் கிடைக்கும் சராசரி பெறுமதி மட்டுமே.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் தலா மொத்த தேசிய வருமானத்தின் (GNI per capita) சதவீத வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், தெற்காசியாவில் முதலிடத்தை இலங்கை பெற்றுள்ளது.
| நாடு (Country) | 2024 (USD) | 2025 (USD) | நிகர வளர்ச்சி (Net Growth) | வளர்ச்சி விகிதம் (Growth Rate) |
| இலங்கை (Sri Lanka) | $3,870 | $4,670 | +$800 | +20.67% |
| மாலைதீவு (Maldives) | $11,540 | $12,950 | +$1,410 | +12.22% |
| பூட்டான் (Bhutan) | $3,910 | $4,310 | +$400 | +10.23% |
| இந்தியா (India) | $2,550 | $2,760 | +$210 | +8.24% |
| நேபாளம் (Nepal) | $1,480 | $1,570 | +$90 | +6.08% |
| பாகிஸ்தான் (Pakistan) | $1,430 | $1,500 | +$70 | +4.90% |
| பங்களாதேஷ் (Bangladesh) | $2,820 | $2,840 | +$20 | +0.71% |
உத்தியோகப்பூர்வ ஆதாரங்கள்: World Bank – GNI per capita, Atlas method (current US$), NY.GNP.PCAP.CD
அட்லஸ் (Atlas) முறையின்படி, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் தலா மொத்த தேசிய வருமானத்தின் (GNI per capita) சதவீத வளர்ச்சி விகிதத்தில் இலங்கை (20.67%) தெற்காசியாவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இதன் பொருள் இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்பது அல்ல.
வருமான வகைப்பாடு என்பது வருமான மட்டத்தைக் காட்டும் ஒரு குறியீடு மட்டுமே தவிர, அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது பொதுவான வாழ்க்கைத்தரம் குறித்த விரிவான மதிப்பீடு அல்ல என்பதனை உலக வங்கியின் அபிவிருத்தி தரவுத் தொகுதி (Development Data Group) தெளிவாகக் குறிப்பிடுவது
இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அல்ல
இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்று உலக வங்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை. அதேபோல், முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட உலக வங்கி தரவுகளின் அடிப்படையில், இலங்கையைத் தெற்காசியாவின் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாகவோ அல்லது மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவோ அழைக்க முடியாது.
மேற்கூறிய வகைப்படுத்தலானது, ஒரு தனிநபர் பெறும் தலா மொத்த தேசிய வருமானத்தை (GNI per capita) அடிப்படையாகக் கொண்டதே தவிர, பொருளாதாரம் வளரும் வேகத்தை (GDP Growth Rate) அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு இந்தியாவாகும்.
உலக வங்கி தனது சமீபத்திய பிராந்திய பொருளாதார பகுப்பாய்வுகளில், ‘தெற்காசியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியமாகவும், அதன் முக்கிய உந்துசக்தியாக இந்தியாவும் உள்ளது’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தெற்காசியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள பிரதான பொருளாதாரங்களுக்கு மத்தியில், மிக வேகமாக வளர்ந்து வரும் பிரதான பொருளாதாரங்களில் (major economy) இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. World Bank – India among fastest-growing economies

இலங்கை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்த 5% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை உலக வங்கி ‘மிக வேகமான அபிவிருத்தி’ என்று குறிப்பிடவில்லை, மாறாக, வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீண்டும் வழமைக்குத் திரும்புவது (Economic recovery) என்றே குறிப்பிடுகிறது. மேலதிக தகவல்களுக்கு Link | Link | Link
உலக வங்கியின் (World Bank) சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, தெற்காசிய நாடுகளின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதம் (Real GDP Growth Rate)
உத்தியோகப்பூர்வ ஆதாரங்கள்: World Bank – GDP growth (annual %), NY.GDP.MKTP.KD.ZG | World Bank – Global Economic Prospects, South Asia (Jan 2026)
| நாடு (Country) | WDI 2025 (%) | GEP எதிர்வுகூறல் (%) | தற்போதைய நிலை |
| பூட்டான் (Bhutan) | 8.0% | 7.0% | நீர்மின் திட்டங்களால் பிராந்தியத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் (சிறிய பொருளாதாரம்) |
| இந்தியா (India) | 7.6% | 7.2% | உலகின் மிக வேகமாக வளரும் பிரதான பொருளாதாரம்; பிராந்தியத்தின் உந்துசக்தி |
| மாலைதீவு (Maldives) | 6.3% | 4.2% | சுற்றுலாத்துறையின் மீட்சி; ஆதாரங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகம் என்பதால் திருத்தப்படலாம் |
| இலங்கை (Sri Lanka) | 5.0% | 4.6% | நெருக்கடிக்குப் பிந்தைய வலுவான மீட்சி (மிக வேகமானது அல்ல) |
| நேபாளம் (Nepal) | 4.4% | 4.6% | சேவை மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்தாலும், அரசியல் அபாயம் நிலவுகிறது |
| பாகிஸ்தான் (Pakistan) | 3.7% | — | சவால்களுக்கு மத்தியில் படிப்படியான மீட்சி (2025 ஜூலை முதல் SAR பிராந்தியத்திலிருந்து நீக்கம்) |
| பங்களாதேஷ் (Bangladesh) | 3.5% | 3.7% | அரசியல் மாற்றம் மற்றும் பலவீனமான முதலீடுகளால் மந்தநிலை |
அனைத்து பெறுமதிகளும் உலக வங்கியின் அதிகாரப்பூர்வ தரவுகளாகும். “WDI 2025” நிரல் = World Development Indicators (NY.GDP.MKTP.KD.ZG, ஜூலை 13, 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது); “GEP எதிர்வுகூறல்” நிரல் = Global Economic Prospects, ஜனவரி 2026. 2025 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகள் மதிப்பீடுகள் (estimates) ஆகும், இவை திருத்தத்திற்கு உட்பட்டவை.
முக்கிய முடிவு: WDI தரவுகளின்படி பூட்டான் முன்னிலையில் இருந்தாலும், GEP எதிர்வுகூறல்களின்படி இந்தியா முன்னிலையில் உள்ளது. இருப்பினும், எந்தவொரு உலக வங்கி ஆதாரத்தின்படியும், இலங்கை பிராந்தியத்தில் மிக வேகமான வளர்ச்சியைக் காட்டும் நாடு அல்ல என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தத் தரவுகளின் மூலம், பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா, தெற்காசியப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி, உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது என்பது தெளிவாகிறது. பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகியவை மிகச்சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் என்பதால், அவற்றின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் உயர் மட்டத்தில் காணப்படுகின்றன.
பொருருளியல் பேராசிரியர் வசந்த அத்துகோரள
இது தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக நாம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைப் பேராசிரியர் வசந்த அத்துகோரள அவர்களிடம் வினவினோம். அவர் இது குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார்.
“இல்லை. உலக வங்கி இலங்கையைத் தெற்காசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடு அல்லது பொருளாதாரம் என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை. அதுதான் முதலாவது விடயம்.
இரண்டாவது, இது கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்டது. உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி என்பது ‘உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின்’ (Real GDP) வளர்ச்சியை மட்டும் குறிக்கும். உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் வளர்ச்சி 7% ஐத் தாண்டும்போது இலங்கையினுடையது 5% ஆக மட்டுமே இருந்தது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், இலங்கையைத் தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இனங்காண முடியாது.
ஆனால், நாம் ‘தலா மொத்த தேசிய வருமானத்தை’ (GNI per capita) எடுத்துக்கொண்டால், அங்கு இரண்டு கருத்துருக்கள் உள்ளன. தலா மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இலங்கை கணக்கிடும் போது, கடந்த ஆண்டு அது 3,253 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஆனால், உலக வங்கி ‘அட்லஸ்’ (Atlas) முறையைப் பயன்படுத்தி தலா மொத்த தேசிய வருமானத்தைக் கணக்கிடுகிறது. நாடுகளுக்கிடையிலான பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி நிலைகளை உள்ளடக்கி, நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய வகையிலேயே அவர்கள் இதைக் கணக்கிடுகிறார்கள்.
அட்லஸ் முறையின்படி, 2024 இல் எமது வருமானம் 3,870 டொலர்களாக இருந்தது. அது 2025 இல் 4,670 டொலர்களாக உயர்கிறது. அதாவது 21% வளர்ச்சி. ஒரே ஆண்டில் இலங்கையின் தலா மொத்த தேசிய வருமானம் சுமார் 800 டொலர்களால் அதிகரித்துள்ளது. 2024 உடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் அதிகரிப்பு சுமார் 8% மட்டுமே. பூட்டான் 11%, இலங்கை 21%, மாலைதீவு 12%, நேபாளம் 6%, பாகிஸ்தான் 5%. அந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது இலங்கை முன்னிலையில் உள்ளது. அதாவது, அட்லஸ் முறையிலான தலா மொத்த தேசிய வருமான வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே இலங்கை முன்னணியில் உள்ளது. அது 21% வளர்ச்சியைப் காட்டுகிறது.
எனவே, தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் நாடு இலங்கை என்று கூறினால் அது தவறு. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடு என்று இலங்கையைக் கூறினாலும் அது தவறு. ஆனால், தெற்காசியாவில் தலா மொத்த தேசிய வருமானத்தில் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்த நாடு இலங்கை என்று குறிப்பிட்டால் அது சரியானது. இதுதான் இங்குள்ள தெளிவு.”
மேலும், உலக வங்கியின் புதிய நாட்டு வகைப்படுத்தலின்படி, இலங்கை ‘மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக’ (Upper-Middle Income) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா ‘கீழ்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே’ (Lower-Middle Income) உள்ளது. ஆனால், தெற்காசியா மற்றும் உலகம் முழுவதிலும் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியாவையே உலக வங்கி அடையாளம் கண்டுள்ளது. இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு குறித்து பேராசிரியர் வசந்த அத்துகோரள அவர்களிடம் வினவினோம். அவர் கூறியதாவது:
“உலக வங்கி நாடுகளை வகைப்படுத்துவது தலா மொத்த தேசிய வருமானத்தின் அடிப்படையில்தான். அதாவது, நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை அந்நாட்டின் மக்கள்தொகையால் வகுக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால், அது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. மக்கள்தொகை அதிகமாக இருப்பதால், அவர்களின் தலா மொத்த தேசிய வருமானம் குறைந்த மட்டத்தில் உள்ளது.
உதாரணமாக, 2024 இல் இந்தியாவின் தலா மொத்த தேசிய வருமானம் 2,550 டொலர்கள். இலங்கையினுடையது 3,870 டொலர்கள். 2025 இல் இந்தியாவின் வருமானம் 2,760 டொலர்களாக இருக்கும்போது, இலங்கையினுடையது 4,670 டொலர்களாக உயர்கிறது. 2025 வகைப்படுத்தலின்படி இலங்கை ‘மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக’ உலக வங்கியால் அடையாளப்படுத்தப்பட்டது.
உலக வங்கியின் அளவுகோல்படி, ஒரு நாட்டின் தலா மொத்த தேசிய வருமானம் 4,636 முதல் 14,375 டொலர்களுக்கு இடையில் இருந்தால், அந்த நாடு ‘மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக’ கருதப்படும். இலங்கையின் வருமானம் 4,670 டொலர்களாக இருப்பதால் நாம் அந்தப் பிரிவில் வருகிறோம். இந்தியாவின் மக்கள்தொகை மிக அதிகம் என்பதால், தலா வருமானம் குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால் அது கீழ்-நடுத்தர வருமான மட்டத்தில் உள்ளது. என கூறினார்.
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடென்றோ அல்லது மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடென்றோ கூறுவது தவறானது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. தெற்காசியாவிலேயே மிக வேகமாக முன்னேறும் நாடு இலங்கை என்று உலக வங்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை.
தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி, அப்பிராந்தியத்திலேயே மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் காட்டுவது இந்தியாவாகும். தெற்காசியாவிலும் உலகிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரதான பொருளாதாரம் இந்தியாவே ஆகும். பூட்டான் நாடும் இலங்கையை விட அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் காட்டினாலும், அது மிகவும் சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும்.
எவ்வாறாயினும், உலக வங்கியின் புதிய வகைப்படுத்தல்களின்படி, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில், தெற்காசிய நாடுகளிலேயே தலா மொத்த தேசிய வருமானத்தில் (GNI per capita) அதிக வளர்ச்சியைப் பதிவு செய்த நாடாக மாறியதன் மூலமே இலங்கை ‘மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக’ தரமுயர்த்தப்பட்டது. இந்தச் செய்தியின் ஊடாக, இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் நாடு என்ற தவறான முடிவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க முடிகிறது. இலங்கை அண்மையில் பெற்ற இந்த வகைப்படுத்தல் உயர்வுக்கு தலா மொத்த தேசிய வருமானத்தின் வளர்ச்சியே காரணமாக அமைகிறதே தவிர, இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தி அல்லது பொதுவான வாழ்க்கைத்தரம் குறித்த விரிவான மதிப்பீடு அல்ல என்பது தெளிவாகின்றது.


