
குழந்தைகளின் அறிவுத் திறன் முழுமையாகவே தாயிடம் இருந்து கிடைப்பதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
அம்மா புத்திசாலித்தனம்!
IQ-வில் அம்மாவின் மரபணுக்களுக்கு அதிக பங்கு ஏன்?
ஒரு குழந்தையின் அறிவாற்றல் (Intelligence) அவர்களின் அம்மாவின் மரபணுக்களுடன் தான் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது!
கேம்பிரிட்ஜ் மற்றும் உல்ம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புத்திசாலித்தனத்துக்கு காரணமான மரபணுக்கள் ‘X’ குரோமோசோமில் இருப்பதால் தான் இது நிகழ்கிறது எனக் கண்டறிந்துள்ளனர். பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் உள்ளன, ஆனால் ஆண்களுக்கு ஒரே ஒரு X குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக, தாயின் மரபணுக்கள் குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியில் வலுவான பங்கை வகிக்கின்றன!
அதே சமயம், சுற்றுச்சூழல் காரணிகள் (சத்தான உணவு, ஆரம்பக் கல்வி, தாயுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்பு) ஆகியவை அறிவாற்றலை நிச்சயம் பாதிக்கின்றன என்றாலும், IQ மரபியலில் தாயிடமிருந்து வரும் காரணிகளே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
உங்கள் குழந்தைகளுடன் ஒரு வலுவான பிணைப்பை வளர்த்துக் கொள்ளுங்கள்!
மேலும் இந்த தகவலானது கடந்த ஜூலை மாதத்திலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
அறிவுத்திறன் என்பது பல மரபணுக்களின் செயற்பாட்டால் தீர்மானிக்கப்படும் (Polygenic) – அது தாயிடம் அல்லது தந்தையிடம் மாத்திரம் இருந்து வருபவை அல்ல
நவீன மரபணு அறிவியல் காட்டுவது, அறிவுத் திறன் என்பது பல மரபணுக்களின் தாக்கத்தால் உருவாகும் ஒரு பண்பாகும், மேலும் அது தாய் மற்றும் தந்தை இருவரிலிருந்தும் பெறப்படும் ஆயிரக்கணக்கான மரபணுக்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறது. Genome-Wide Association Studies (GWAS) மூலம் அறிவுத் திறமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான மரபணு மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மாறுபாடுகள் தாயிடமிருந்து மட்டும் பெறப்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. Nature Reviews Genetics இதழில் வெளியான The New Genetics of Intelligence ஆய்வும், அறிவுத் திறன் தாய் அல்லது தந்தையிடமிருந்து மாத்திரமே வருவது அல்ல, சிறிய தாக்கத்தைக் கொண்ட பல மரபணுக்களின் கூட்டுத் தாக்கத்தால் உருவாகும் ஒன்றாகும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. எனவே, அறிவுத்திறனை நிர்ணயிக்கும் மரபணுக்கள் தாயிடமிருந்து மட்டுமே கிடைக்கின்றன என்பதற்கு இதுவரை அறிவியல் ஆதாரம் இல்லை.
இரட்டைக் குழந்தைகள் மற்றும் தத்தெடுத்த குழந்தைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுவது, அறிவுத் திறன் ஒரு அளவுக்கு மரபுரிமையாகும் என்பதையும், வயது மற்றும் சூழல் காரணிகளைப் பொறுத்து மரபணுக்களின் தாக்கம் சுமார் 40–80% வரை இருக்கும் என்பதையும் குறிப்பிடுகிறது.
- குழந்தை பருவத்தில் – மரபணு தாக்கம் சுமார் 20%
- சிறுபிள்ளை / பாடசாலை பருவத்தில் – சுமார் 40%
- முதிர்வயதில் – 60–80% வரை
மீதமுள்ள பகுதி சத்துணவு, கல்வி வாய்ப்புகள், வீட்டின் சூழல், மன அழுத்தம் மற்றும் பெற்றோர்–குழந்தை உறவு போன்ற சுற்றுப்புறச் சூழல் காரணிகளால் வடிவமைக்கப்படுகிறது. இக்காரணிகள் அறிவுத் திறனை உயர்த்தவும் குறைக்கவும் முடியும்.
எனவே, அறிவுத்திறன் என்பது பாலினக் க்ருமோசோம்களுடன் தொடர்புடைய பண்பு அல்ல என்பதுடன் குழந்தையின் அறிவுத் திறன் தாயின் மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பது அறிவியல் ஆதாரமற்ற கூற்று என்பது தெளிவாகின்றது.
X குரோமோசோமைப் (Chromosome) பற்றிய தவறான விளக்கம்
சமூக ஊடகங்களில் பரவி வரும் சில பதிவுகளில், தாயிடம் இரண்டு X குரோமோசோம்கள் இருப்பதும் தந்தையிடம் ஒரு X குரோமோசோம் மட்டுமே இருப்பதும் காரணமாக, குழந்தையின் முழுப் அறிவுத் திறனும் தாயிடமிருந்து பெறப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. மூளையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் சில மரபணுக்கள் X குரோமோசோமில் இருப்பது உண்மை என்றாலும், அறிவுத்திறன் தாயிடமிருந்து மட்டும் மரபாக வருகிறது என்பதனை அது குறிப்பிடவில்லை.
MedlinePlus மரபணு அறிவியல் விளக்குவதாவது, அறிவுத் திறன் உருவாகுவது சாதாரண (autosomal) குரோமோசோம்களிலும், பாலினக் குரோமோசோம்களிலும் உள்ள மரபணுக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் முறையால் என்பதை ஆகும். அதாவது, அறிவுத்திறனை தீர்மானிப்பதில் தந்தை மற்றும் தாய் இருவரின் மரபணுக்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
மேலும், “X (X-inactivation) எனப்படும் செயல்முறையால் பெண்கள் தங்கள் இரு X குரோமோசோம்களையும் முழுமையாகச் செயலில் உள்ள வடிவில் குழந்தைக்கு வழங்க முடியாது. இதனால், குழந்தை தாயிடமிருந்து ‘இரட்டை’ X குரோமோசோம் தாக்கத்தைப் பெறும் என்ற கருத்து அறிவியல் ரீதியாக தவறானது.
அதே நேரத்தில், தாயின் X-சார்ந்த மரபணுக்கள் தந்தையின் autosomal மரபணுக்களை விட அதிக தாக்கம் செலுத்துகின்றன என்ற கூற்றை ஆதரிக்கும் எந்த அறிவியல் சான்றும் இதுவரை கிடைக்கவில்லை.KQED வெளியிட்டுள்ள அறிக்கையிலும், “அறிவுத்திறன் தாயிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது” என்பது மரபியல் செயல்முறைகளை தவறாகப் புரிந்துகொண்டு பரப்பப்படும் தவறான கருத்து என குறிப்பிடப்படுகிறது.
இதன்மூலம் X குரோமோசோமை அடிப்படையாகக் கொண்டு அறிவுத்திறன் தாயிடமிருந்து மட்டுமே ஒரு குழந்தைக்கு கழிடைக்கிறது என்று கூறுவது அறிவியல் ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பது தெளிவாகின்றது.
தாயின் மற்றும் குழந்தையின் IQ நிலைகளில் தொடர்பு இருக்கலாம் – ஆனால் அதற்கு முழுமையாக மரபணு காரணமல்ல
சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது, ஒரு தாயின் IQ நிலை மற்றும் குழந்தையின் IQ நிலை இடையில் வலுவான தொடர்பு காணப்படக்கூடும் என்பதாகும். 12,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட கிளாஸ்கோ ஆய்வில், தாயின் IQ நிலை குழந்தையின் IQ ஐ கணிப்பதற்கான ஒரு வலுவான சுட்டிக்காட்டியாக செயல்படுகிறது என வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் The Independent குறிப்பிடுவதாவது, இந்த தொடர்பு தூய்மையான மரபணு காரணிகளை மட்டுமல்லாமல், தாயின் கல்வி நிலை, வீட்டில் உள்ள கல்விச் சூழல், கர்ப்பகால பராமரிப்பு, தினசரி செயற்பாடுகள் மற்றும் குழந்தையின் ஆரம்பப் பருவ உந்துதல் போன்ற சுற்றுப்புறச் சூழல் காரணிகளையும் பிரதிபலிக்கிறது என்பதாகும்.
ஆராய்ச்சியாளர்கள் மேலும் வலியுறுத்துவதாவது, இத்தகைய தொடர்பு இருப்பதாகக் காணப்படுவது, குழந்தையின் அறிவுத் திறன் தாயிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது என்பதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது. குழந்தையை கவனித்து வளர்க்கும் நபரின் பங்கும் குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தாயுடன் உருவாகும் பிணைப்பும் மூளையின் வளர்ச்சியும் – இது மரபணுக்குரியது அல்ல, சுற்றுப்புறச் சூழல் சார்ந்த ஒன்று
தாய் மற்றும் குழந்தை இடையிலான வலுவான உளவியல் பிணைப்பு, குழந்தையின் நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் என்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன. இந்நிகழ்வுகள் உண்மையானவை என்றாலும், அது நல்ல சுற்றுப்புறச் சூழல் காரணிளால் ஏற்பட்டவையே தவிர தாயின் மரபணுக்கள் காரணமாக அல்ல, என்பதை அறிவியல் விளக்குகிறது.
உதாரணமாக, ஒரு ஆய்வில், தாயின் அன்பு, அணுகுமுறை மற்றும் குழந்தையுடன் கொண்டிருக்கும் தினசரி தொடர்புகள் இவை அனைத்தும் குழந்தையின் நினைவாற்றல் மற்றும் கற்றலுடன் தொடர்புடைய மூளை பகுதி (hippocampus) வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால் இந்த முன்னேற்றம் தாயின் குரோமோசோம்களாலோ, அல்லது மரபணுக்களாலோ நேரடியாக ஏற்படுவது அல்ல. மாறாக, தாய் வழங்கும் அன்பு, பாதுகாப்பு, உணர்ச்சி ஆதரவு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் மூலமாகவே என்பதனை அறியமுடிகின்றது.
குழந்தையின் அறிவுத்திறன் தாயிடமிருந்து மட்டுமே பெறப்படுகிறது என்ற கருத்திற்கு அறிவியல் ஆதாரம் இல்லை
குழந்தையின் அறிவுத்திறன் தாயிடமிருந்து மாத்திரமே கிடைக்கிறது என்ற கருத்தை, அறிஞர்கள், மரபணு நிபுணர்கள் மற்றும் அறிவியல் எழுத்தாளர்கள் அனைவரும் மறுத்துள்ளனர்.சில பிரபலமான கட்டுரைகள் எலிகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை ஆராய்ச்சியை தவறாகப் புரிந்துகொண்டு பகிரப்பட்ட ஒரு தகவலே என Forbes பத்திரிகை குறிப்பிட்டுள்ளது, அதேபோல UC Davis பல்கலைக்கழகம் மற்றும் பல சர்வதேச அறிவியல் நிபுணர்கள் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகளும் வலியுறுத்துவதாவது, குழந்தையின் அறிவுத் திறன் என்பது தாய் அல்லது தந்தை ஒருவரின் மரபணுவின் விளைவு மட்டுமல்ல. மாறாக, இருவரிடமிருந்தும் பெறப்படும் மரபணுக்கள் மற்றும் பல்வேறு சுற்றுப்புறச் சூழல் காரணிகள் ஒன்றிணைந்து செயல்படும் போது தான் குழந்தையின் அறிவாற்றல் வடிவமைக்கப்படுகிறது.
அதனால், “அறிவுத் திறன் தாயிடமிருந்து மாத்திரமே பெறப்படுகிறது” என்ற கருத்திற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதும் தெளிவாகிறது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஒரு குழந்தையின் அறிவுத்திறன் முழுவதும் தாயிடமிருந்தே பெறப்படுகிறது என்ற கூற்று தவறானதாகும் என்பதுடன் அறிவுத்திறன் என்பது தாய், தந்தை இருவரிடமிருந்து பெறப்படும் ஆயிரக்கணக்கான மரபணுக்களின் தாக்கத்தையும், கல்வி, உணவு, பராமரிப்பு போன்ற முக்கிய சுற்றுப்புறச் சூழல் காரணிகளையும் ஒருங்கிணைத்து உருவாகும் ஒரு பண்பாகும். இதனால், தாயின் மரபணு அல்லது தாய் தொடர்பான சூழல் காரணிகளே குழந்தையின் முழுமையான அறிவுத்திறனையும் தீர்மானிக்கின்றன என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை என்பதுவும் கண்டறிப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:ஒரு குழந்தைக்கு அறிவுத்திறன் முழுமையாக தாயிடமிருந்து மாத்திரமா கிடைக்கின்றது?
Fact Check By: Suji ShabeedhranResult: Misleading


