முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் விஜேராமவில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்றபோது அவர்கள் எடுத்துச்சென்ற உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்டதாக தெரிவித்து தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim 1:
மஹிந்த ராஜபக்ஷவிற்காக கொண்டுவரப்பட்ட தயிர் உள்ளிட்ட உணவுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகரசபை குப்பை லொரியில் வீசப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்ததாக தகவலொன்று கடந்த 2025.08.21 ஆம் திகதி “இரி” எனும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 2:
எங்களுக்கு முழு கொழும்பும் சுற்றிக்காட்டப்பட்டது… பஸ் வீட்டிற்கே வந்தது. இளநீர் குலை குருநாகலில் இருந்து வழங்கப்பட்டது. ஓலையில் சுற்றப்பட்ட இனிப்புப் பண்டங்கள் கடவத்த சுவீட் ஹவுஸினால் வழங்கப்பட்டது. உணவு மற்றும் தண்ணீருடன் ஒவவொருவருக்கும் 5000 ரூபா வழங்கப்பட்டது. நாம் தாமரை கோபுரத்தையும் பார்வையிட்டோம். மஹிந்த அவர்களை சந்தித்தோம். திஸ்ஸகுட்டி அவர்களுக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். என மஹிந்தவை பார்வையிட வந்த ஒருவர் தெரிவித்தாகவும் மற்றும் அது HIRU TV NEWS இல் ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவித்தே இந்த பதிவானது கடந்த 20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
Claim 1 (Fact Check):
மேற்கண்ட சமூக ஊடகப் பதிவில், முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்தக் கருத்தை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் இது குறித்து நாம் வினவினோம்.
இதன்போது இது முற்றிலும் தவறான தகவல் எனவும், மக்கள் அன்புடன் கொண்டு வந்த உணவுப் பொருட்களை மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் தூக்கி எறிய மாட்டார் என்றும் அவர் கூறினார். மேலும், மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஊடகப் பேச்சாளராக இருப்பதால், தான் வெளியிடாத ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டதாகக் கூறுவதன் மூலம் இது பொய்யான தகவல் என மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அதேபோல், இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கூறப்படும் IRI News பேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற எந்தச் செய்தியையும் காணமுடியவில்லை.
மேலும் இது குறித்து IRI News பேஸ்புக் பக்கத்தின் நிர்வாகியிடம் நாம் வினவியபோது, அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற எந்தப் பதிவையும் தாங்கள் வெளியிடவில்லை என்றும், இது அவர்களின் வடிவம் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான பதிவு என்றும் எங்களுக்கு உறுதிப்படுத்தினார்.
அதேபோல், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு, இந்தப் பதிவு தவறானது என தெரிவித்து ‘X’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தது.
Claim 2 (Fact Check):
மேலே உள்ள இரண்டாவது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த ஒருவர் வெளியிட்ட அறிக்கையானது, அன்றைய தினம் ஹிரு செய்திகளில் ஒளிபரப்பப்பட்டதா என்பதை நாம் ஆராய்ந்தோம்.
கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி இரவு ஒளிபரப்பான செய்தியில், மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, எந்தவொரு நபரும் அவ்வாறான கருத்தை தெரிவிப்பதனை காட்டுத் செய்திகள் வெளியாகியிருக்கவில்லை.
தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் உள்ள நபர் தெரிவித்த கருத்துடனான செய்தியொன்று அததெரண செய்திகளில் ஒளிபரப்பாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
அந்தப் புகைப்படத்தில் இருந்த நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் தேர்தல் அமைப்பாளர் கே. விஜேவீர என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், மேற்கண்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று அவர் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது உறுதியானது.
இது குறித்த மேலதிக தகவல்களை உறுதிப்படுத்த, அனுராதபுர அமைப்பாளர் விஜேவீரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவினோம்.
இதன்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தான் ஒருபோதும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும், அநுராதபுரத்தில் உள்ள மக்கள் வீடுகளுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த வீடுகளில் அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை எடுத்துச் செல்வது வழக்கம் என்பதால், மக்கள் மஹிந்த அவர்களை பார்க்க முன்கூட்டியே தயாராக இருந்ததாகவும், அந்தப் பொருட்கள் மக்களால் கொண்டு வரப்பட்டவையே தவிர அவை மற்றையவர்களால் வழங்கப்பட்டவை அல்ல என்றும் அவர் கூறினார்.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பார்வையிடுவதற்காக வந்த ஆதரவாளர்கள் எடுத்துச்சென்ற உணவுப்பொருட்ககள் குப்பையில் வீசப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:மஹிந்த ராஜபக்ஷவை பார்க்க வந்த ஆதரவாளர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்டதா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
