பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில்  12,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதா?

Misleading அரசியல் இலங்கை | Sri Lanka



2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில்  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட Permit நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள் 23, பிரதி அமைச்சர் 29 என இதுவரை உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 53 ஆகும்.

எனவே மீதமுள்ள 172 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்குறிப்பிட்ட பணம் செலவிடப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில், ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 72.674 மில்லியன் ரூபாய்கள் வாகனம் வாங்குவதற்காக அரசினால் செலவழிக்கப்பட போகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்ட permit களின் படி, வாகனங்கள் கொள்வனவு செய்யப்படும் பணமானது பாராளுமன்ற உறுப்பினராலேயே  செலவழிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது அதுவும் அரசினால் செலவழிக்கப்பட போகிறது.

ஆக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாகனங்களை வாங்க அரசே வழி செய்கிறது.

குறிப்பு:

இது கொள்கை ரீதியாக பிழையாகத் தென்பட்டதால் வெளியிடப்பட்ட விமர்சனமே ஒழிய அரசுக்கு எதிரானது அல்ல. என தெரிவிக்கப்பட்டு இன்று (10) பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் பலரும் தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்துள்ளமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

FB | Archived

Fact Check (உண்மை அறிவோம்)


எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை (2025.11.07) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடக பதிவுகளில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 12,500 மில்லியன் ரூபா உண்மையில் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய நாம் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை ஆராய்ந்து பார்த்தோம். 

அதில் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் திட்ட யோசனைகளின் கீழ், அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேவையான இயந்திரங்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன் கீழ், அரசாங்க நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இயந்திர உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் அரசாங்கத்திற்குச் சொந்தமான தற்போதுள்ள வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இன்மை, தற்போதுள்ள பெரும்பாலான வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் பழமையானவை முதலான காரணிகள் காரணமாக அவற்றை பழுதுபார்ப்பதற்காக அதிக செலவுகளை ஏற்க நேரிட்டுள்ளது. இந்நிலைமை அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு தடையாக அமைந்துள்ளது. இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு, அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை இதற்காக ஆரம்பத்தில் ரூபா 12,500 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது  பொதுவாக அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான பொதுவான முன்மொழிவு மாத்திரமே தவிர அது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அர்த்தமல்ல.

Link 

அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சருமான  நளிந்த ஜயதிஸ்ஸ

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பிரதான ஊடகமொன்றில் தவறான புரிதலுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளதனால், அது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.

அவரது விளக்கம் பின்வருமாறு

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை

வாகனங்கள், வாகன அனுமதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சலுகைகள் குறித்து வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்பு அனுபவித்த தேவையற்ற சலுகைகளை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த செயல்முறையின் நோக்கம் நியாயம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவதாகும் என்றும் அவர் கூறினார்.

அரச வாகனத் தொகுதியை புதுப்பிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான அடிப்படை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் திரும்பப் பெறும் அடிப்படையில் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படும் என்றும், அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களையும் வாங்குவதற்கு 12,500 மில்லியன் ரூபாய் அடிப்படைத் தொகையை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அமைச்சுகளிடம் வாகனங்கள் இல்லையென்றால், அமைச்சுக்கு ஒரு வாகனம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த முடிவுக்கான காரணம், தற்போதுள்ள அரச வாகனங்களை பழுதுபார்க்கும் செலவு மிகப்பெரிய அளவில் அதிகரித்ததே ஆகும். மேலும், 2020 ஆம் ஆண்டில் அரச வாகனங்களை பழுதுபார்க்கும் செலவு ஏழு பில்லியன் ரூபாயாக இருந்தது என்றும், இந்த செலவு 2025 ஆம் ஆண்டில் 25 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் திருப்பித் தர வேண்டிய கெப் வாகனங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook

மேலும் வாகன அனுமதிச் சீட்டு (permit) வழங்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். புதிய permit வழங்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெளிவாகக் கூறினார். தற்போதுள்ள permitகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது சுமார் 20,000 வாகன permitகள் இருப்பதாகவும், அவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் வாகனச் சந்தை திறப்பு குறித்தும் குறிப்பிட்டார். வாகனச் சந்தை திறக்கப்பட்டதன் காரணமாக, அக்டோபர் 30 ஆம் திகதி வரை வாகனங்களுக்கான LCக்கள் 193 மில்லியன் டொலர்கள் அளவுக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இல்லாத வகையில் பாரிய செலவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முழுமையான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இங்கே காணலாம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வரியில்லா வாகன உரிமங்களை வழங்கும் நடைமுறை, குறிப்பாக நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும், வரி செலுத்துவோரின் செலவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றம் சாட்டப்படுவதாகவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தித் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் யாருக்கும் வரியில்லா வாகன உரிமங்களைப் பெறவோ அல்லது வழங்கவோ மாட்டாது என்று உறுதியளித்திருந்தனர். முந்தைய உரிமங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு பணம் மற்றும் இலாபத்திற்காக விற்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய தேசிய மக்கள் சக்தி, ஆடம்பர வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிதி, பொதுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க சுகாதார சேவைகள் அல்லது பிற பொதுத் தேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.

வரி இல்லாத உரிமங்களுக்குப் பதிலாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான வாகனங்களை அதிகாரப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் அவற்றைத் திருப்பித் தர வேண்டும் என்றும் தேசிய மக்கள் கட்சி முன்மொழிந்தது. சர்ச்சைக்குரிய உரிமத் திட்டம் இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதே இந்த அணுகுமுறையின் நோக்கம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2026 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த சனிக்கிழமை (08) நடைபெற்றது. வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் 15 முதல் 17 நாட்களுக்கு நடைபெறும், மேலும் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும். பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, வரவு செலவுத் திட்ட காலத்தில் ஒவ்வொரு நாளும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன கொள்வனவு உள்ளடங்களாக, இந்த ஒதுக்கீட்டில் அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்யவதும் அடங்கும் என்பதுவும் கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில்  12,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதா?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *