
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை (condoms) வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):


குறித்த பதிவில், இலவச பாடப்புத்தகங்கள் , இலவச சீருடைகள் , இலவச மதிய உணவு மற்றும் இலவச ஆணுறைகளை கூட வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது.
இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே அராசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்குவது தொடர்பில் ஏதேனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பிரதான ஊடகங்களில் செய்திகள் எதுவும் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
மேலும் கல்வி அமைச்சு அவ்வாறான ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனவா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த அறிக்கைகளும் கல்வி அமைச்சினால் வெளியிடப்படவில்லை என்பது உறுதியானது.
இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் Daily Mirror இணையதளத்தில் “பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாட்டை உட்சேர்ப்பதற்கு நடவடிக்கை” (Condom use to be included in school curriculum) என்ற தலைப்பில் வெளியான செய்தி கட்டுரை தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க ஒரு கலந்துரையாடலை நடத்தியதாகவும், சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், ஆணுறை பயன்பாடு, வெளிப்பாட்டிற்கு முந்தைய தடுப்பு (PrEP) மற்றும் வெளிப்பாட்டிற்கு பிந்தைய தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த முடிவின்படி, தேசிய கல்வி நிறுவனம் (NIE) 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு முறைகளைச் சேர்க்க உள்ளது. இதன் முக்கிய நோக்கம் பாடசாலை மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற மற்றும் அறிவியல் அடிப்படையிலான துல்லியமான தகவல்களை வழங்குவதாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அறிவியல், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகங்கள் HIV தடுப்புக்கான “பொறுப்பான பாலியல் நடத்தை” பற்றி மாத்திரமே குறிப்பிடுகின்றன என்றும், குறிப்பிட்ட உயிரியல் மருத்துவ தடுப்பு முறைகளை விவரிக்கவில்லை என்றும், இந்தத் தகவல் இல்லாததால், தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு போதுமான அளவு அறிவு இல்லை என்பதை தேசிய எய்ட்ஸ் சபை IEC, Advocacy மற்றும் Condom Promotion குழுவின் சமீபத்திய மதிப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் , இந்த புதிய முன்னேற்றங்களுக்கு கல்வி அமைச்சு இதுவரை எந்தவித சாதகமான பதில்களையும் வழங்கவில்லை என்று தெளிவாக அதில் கூறப்பட்டுள்ளது . Archived | Link
ஆனால், பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்
எனவே இந்தத் தகவலை உறுதிப்படுத்த, தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்கவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவினோம்.
சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சமீபத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP) மற்றும் பிந்தைய வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மாணவர்களுக்கு முறையாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததாகவும், அதன்படி தேசிய கல்வி நிறுவனம் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வயதுக்கு ஏற்ற, சான்றுகள் சார்ந்த அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் முன்மொழிந்தது, ஆனால் கல்வி அமைச்சு இதற்கு உடன்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டினார் .
இருப்பினும், அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைகளில் பாடசாலை மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்பட வேண்டும் என்று எந்த பரிந்துரையையும் செய்யவில்லை, மேலும் இது குறித்து முறையான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாத்திரமே பரிந்துரைத்தன. இருப்பினும், இது குறித்த தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகவும் அவர் கூறினார்.
கல்வி அமைச்சு
சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் நாம் கல்வி அமைச்சை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம், இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் முற்றிலும் தவறானது எனவும், அவ்வாறான எந்த தீர்மானங்களும் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லலை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் HIV மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) தடுப்பு நடவடிக்கைகளைக் கற்பிக்க, 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாட்டை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சிற்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
