முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.
மேலும் இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)

குறித்த பதிவில் 3 இலட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு..! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
![]() | ![]() |
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பான உண்மை அறியும் நோக்கில் இது குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமயில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளதாக சில செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
மேலும் குறித்த செய்திகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள மற்றொரு இடத்தில் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என்று தெரிவித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Link| Link| Link
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
குறித்த ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதனை போன்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் ஏதேனும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது குறித்த அறிக்கை தொடர்பில் அராசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு

குறித்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்ததுள்ளது.
இந்தச் செய்தியை ஆராய்ந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள மற்றொரு இடத்தில் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் (வணிகம்), சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்கனவே தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் 2024ஆம ஆண்டு ஒக்டோபர் மாதம் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அந்த இடத்தில் உள்ள நீர் விநியோகத்திலிருந்து தண்ணீரைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு முன்னர், இந்த இடத்தில் நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இடத்தில் நீர்க் கட்டண நிலுவைத் தொகையை செலுத்துமாறு எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் பல சந்தர்ப்பங்களில் சபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர், இன்று, அவர்கள் அவ்விடத்திற்குச் சென்று நிலுவைத் தொகையை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். நிலுவைத் தொகையை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது, தற்போது குறித்த நீர் கட்டண நிலுவைத் தொகை ரூ. 429,000 ஆகும் என்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, இந்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே
மேலும் அது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகேவை நாம் தொடர்பு கொண்டு வினவியபோது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது எனவும் அவரின் இல்லத்திற்கு பின்னால் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கியிருந்த இடத்தின் நீர் விநியோகமே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த இடம் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துடன் தொடர்பற்றதாக காணப்பட்டாலும் அந்த இடத்திற்கான பராமரிப்புகள் இதுவரை காலமும் அசராங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அதற்கான நீர் கட்டணம் ஜனாதிபதி செயலகத்தினாலேயே செலுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஊடகப் பேச்சாளர் சிங்கள ஊடகமொன்றிற்கு இது குறித்து தெரிவித்த கருத்து பின்வருமாறு
சம்பந்தப்பட்ட இடத்திற்கான நீர்க்கட்டணம் சில மாதங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டவை எனவும் அப்போது அங்கு கிட்டத்தட்ட 160 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருந்ததாகவும் அதனால் இவ்வளவு பெரிய தொகை நீர்க்கட்டணத்தை பெறுவது சாதாரணமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தினால் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வீட்டின் நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டிஜிட்டல் ஊடக பணிப்பாளர் இசுரு அநுராத விஜயசிங்க
நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பகுதி இதுவரை காலமும் அராங்கத்தினால் பராமரிக்கப்பட்டதாகவும் அதற்கான நீர்க்கட்டணம் ஜனாதிபதி செயலகத்தினாலேயே செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுவதனால் நாம் அது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டிஜிட்டல் ஊடக பணிப்பாளர் இசுரு அநுராத விஜயசிங்கவை தொடர்புகொண்டு வினவினோம். இதன்போது அது தொடர்பான முழுமையான விபரங்களை ஆராய்ந்து தெரிவிப்பதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்
எனவே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவிடமிருந்து உரிய தகவல்கள் கிடைத்தவுடன் நாம் இந்தக் கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக பகிரப்படும் தகவல்கள் தவறானது என்பதுடன் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பின்னால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கியிருந்த இடத்தின் நீர் விநியோகமே நிலுவைத் தொகை செலுத்தப்படாமையினால் இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளமையும் தெளிவாகின்றது.
எனினும் குறித்த இடத்தின் பராமரிப்பு அரசாங்கத்தினால் மேற்கொள்ளபடுவதாகவும் அதற்கான நீர்கட்டணம் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் உரிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.