
INTRO:
‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பிரயாணத்தின் போது புதிய விடயம் என வீடியோவொன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பவரலாக பகிரப்பட்டு வந்தது. குறித்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்வது போன்ற விடயங்கள் காணப்பட்டன.
இது வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக புகையிரத திணைக்களம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேட திட்டம் என பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
புகையிரதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதா எனவும் இது தொடர்பிலான உண்மையை தன்மையை தெரிவிக்குமாறும் எம்மிடம் பலர் வேண்டுகோள் விடுத்ததனையடுத்து இதன் உண்மை நிலையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம்.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “
இலங்கை புகையிரதங்களில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் SPA மசாஜ் சேவை.
YouTubeஇல் பார்வையிட – https://youtube.com/shorts/v_OjQc8SV2A?si=Kvrdv3asYjdeGiOz
#LatestUpdates #NewsUpdate #srilanka ”இம் மாதம் 16 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (16.01.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இது தொடர்பான செய்திகள் எதுவும் பிரதான ஊடகங்களில் வெளிவந்துள்ளனவா என ஆய்வு செய்தோம். எனினும் வெளியுறவுத் துறை அமைச்சினால் இதுபோன்ற எவ்வித திட்டங்களும் முன்னெடுக்கப்படுதாக எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கவில்லை.
அதன் அடிப்படையில் நாம் இந்த வீடியோ தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட போது இந்த வீடியோவானது ஒரு ஆயுர்வேத வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட வீடியோ எனவும் குறித்த வைத்தியசாலையின் உரிமையாளரின் பெயருடனான ஒரு பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த வைத்தியசாலையின் உரிமையாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த நாட்டில் பெயர்போன ஒரு சுற்றுலா ஹோட்டலின் 50 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் 160 பல்கேரிய நாட்டினர் இந்த சுற்றுலாவில் இணைந்துள்ளதாகவும் பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு வரை இந்த திட்டத்திற்காக விசேட ரயில் சேவையொன்று பணம் செலுத்தி பெறப்பட்டுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்தினரால் பதிவு செய்யப்பட்ட விசேட நிபுணர்களினால் இந்த ஆயர்வேத மசாஜ் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கொள்ளப்படுதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறித்த நிபுணர்கள் தமது வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் அல்லவெனவும் அவர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேற்கூறப்பட்ட நிறுவனத்தினரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க புகையிரத திணைக்களத்திடம் பணம் செலுத்தி விசேட ரயில் சேவை பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சுற்றுலா பயணிகளின் தலை, கழுத்து முற்றும் தோற்பட்டை ஆகிய பகுதிகளில் மசாஜ் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த பயணத்தின் பின்னர் ரயில் வண்டி முற்றுமுழுதாக சுத்தம் செய்யப்பட்டு கிருமிகள் நீக்கப்பட்டு புகையிரத திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுதவாகவும் தெரிவித்தனர்.
குறித்த ஹோட்டல் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாம் இங்கு அந்நிறுவனத்தின் பெயரை குறிப்பிடப்படவில்லை.
இவ்விடயம் குறித்து புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என். ஜே இதிபொலவிடம் நாம் வினவிய போது, கடந்த 15 ஆம் திகதி பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றினால் பணம் செலுத்தி பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு வரை சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க புகையிரத வண்டி பெறப்பட்டது என்றும் எனினும் குறித்த மசாஜ் சேவை தொடர்பில் தமக்கு அறிவிக்கவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
புகையிரதங்களை பணம் செலுத்தி பெற்று கொள்ளமுடியும் என்பது அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் குறித்த சுற்றுலா நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சிடமும் இவ்விடயம் தொடர்பில் நாம் கேட்டபோது, இத்திட்டம் தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், புகையிரதத்தினுள் வெளிநாட்டு பயணிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாக வெளிவந்த வீடியோ இது ஒரு தனியார் நிறுவனத்தினால் விஷேட புகையிரத பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்டது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:புகையிரதத்தினுள் வெளிநாட்டு பயணிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாக வெளிவந்த வீடியோவின் உண்மை தெரியுமா..?
Fact Check By: Factcrescendo TeamResult: Misleading
