
அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
“இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது போல” என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.04.02 ஆம் திகதி குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் சமூக ஊடகங்களில் பரவி வந்த இந்த காணொளி குறித்து நாம் ஆராய்ந்தபோது,இந்த காணொளி பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் எடுக்கப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள இடத்தையும் Google Maps இல் உள்ள இடத்தின் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த போது இவை , ஒரே இடம் தான் என்பது உறுதியானது.
Frame From Viral Video | Google Maps (near Parliament) |
இதேவேளை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கடந்த (04) ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார். அதற்கான பாதுகாப்பு பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளியே சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சில பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவு
இந்த காணொளி தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவை நாம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.
எனவே, நாம் இது தொடர்பில் பாராளுமன்ற பொலிஸ் நிலையத்திடம் வினவினோம் இதன்போது, ஏப்ரல் 2 ஆம் திகதி நடைபெற்ற போக்குவரத்து அணிவகுப்பு நுகேகொடை பொலிஸ் பிரிவின் மேற்பார்வையில் நடந்தமை உறுதி செய்யப்பட்டது, மேலும் நுகேகொடை பொலிஸ் நிலையமும் அதனை எமக்கு உறுதிப்படுத்தியது.
இந்த காணொளியை நாம் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி, அது குறித்து வினவினோம், இதன்போது இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தொடர்பாக நடத்தப்பட்ட பாதுகாப்புப் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும், கடந்த 2025.04.03 ஆம் திகதி, பொலிஸ் ஊடகப் பிரிவு இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது, அதில் இந்தியப் பிரதமரின் வருகை காரணமாக நடத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளே இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து இலங்கையிலுள்ள உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திடமும் நாம் வினவினோம், இதன்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கு பதிலளிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு செயல்படுத்தப்படும் சிறப்பு போக்குவரத்து திட்டம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்த விடயம் பின்வருமாறு.
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் செயற்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து திட்டம்.Link
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 5 ஆம் திகதி பத்தரமுல்ல அபே கம பகுதியில் உள்ள வீதியும் அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த காணொளி, பத்தரமுல்லை பாராளுமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள அபேகமவுடன் தொடர்புடைய வீதியையே காட்டுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த அரச விஜயத்தினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன. அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த விஜயம் பல முக்கியமான எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகினறது. Link | Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணியுடன் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்ட காணொளியானது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கும் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற ஒத்திகை நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பணித்தாரா?
Fact Check By: Suji ShabeedharanResult: Misleading
