
INTRO:
அமெரிக்க தூதுவரை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான வதந்திகள் பரவி வருகின்றன. டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன் இலங்கையில் சமூக ஊடகங்களின் மூலம் ஜூலி ஜே சங் தொடர்பாக, பொய் பிரசாரங்கள் பரவி வருகின்றன.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. தூதுவர் சங்கை மீண்டும் உடனடியாக நாட்டிற்கு அழைக்க அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் குறித்த பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் உன்மைத் தன்மை குறித்து ஆராய்வதற்கு நாம் தீர்மானித்தோம்
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் இதுகுறித்து இலங்கையின் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்தோம். இருப்பினும் அவ்வாறான எந்தவித செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை
அமெரிக்க தூதுவர் சங்கின் தற்போதைய நிலை –
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் தொடர்ந்து சேவையாற்றுவதாகவும், அவர் திரும்பி நாட்டிற்கு அழைக்கப்படவில்லை எனவும் அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவர்களின் பதவிக்காலம்
அமெரிக்க தூதுவர்கள் பொதுவாக மூன்று ஆண்டுகள் தமது சேவையை மேற்கொள்வார்கள். இந்த நிலை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் மாற்றப்படலாம். தூதுவர் சங்கின் பதவிக்காலம் குறித்து சரியாக குறிப்பிடப்படவில்லை. எனினும் அவரின் பதவிக்காலம் இதுவரை நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் தனது பதவியை விட்டு விலகுவதாகக் கூறப்படவில்லை.
முன்னாள் தூதுவர்களான அதுல் கெஷாப் மற்றும் அலினா டெப்லிட்ஸ் ஆகியோர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்களாக மூன்று வருடங்கள் கடமையாற்றியுள்ளனர்.
ஜனாதிபதி ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்ட தூதுவர் ஜூலி சங், 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றி வருகிறார்.
எதிர்காலத்தில் புதிய தூதுவர் நியமனம்
கடந்த பெப்ரவரியில், இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராக Elizabeth K. Horst நியமிக்கப்படுவதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பைடன் அறிவித்தார். நியமனச் செயல்முறையானது வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் குழுவின் ஆய்வு, அதைத் தொடர்ந்து செனட் குழுவின் வாக்கெடுப்பு மற்றும் முழு செனட்டின் உறுதிப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாக அமையும். இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுவரை அந்த செயல்முறை முடிவடையவில்லை எனவும் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாக்கம்
நிர்வாக மாற்றங்களோடு தூதுவர் பதவிகளில் மாற்றங்கள் நிகழலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் அத்தகைய மாற்றங்களுடனான செயல்முறை மற்றும் அதன் காலசுழற்சி ஆகியவை வெள்ளை மாளிகை மற்றும் செனட் சபை மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் உடனடியாக பதவியை துறக்குமாறு வெள்ளை மாளிகையிடமிருந்தோ அல்லது அமெரிக்க செனட்டிலிருந்தோ தூதுவர் சங்கிற்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ள புதிய செனட், புதிய தூதுவர்களின் பெயர்களை எப்போது பரிந்துரை செய்யும் என்ற நிச்சயமற்ற நிலையில், தற்போதைய தூதுவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்கலாம் என்று கருதலாம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
அமெரிக்க தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய ஜனாதிபதி நியமனம் உள்ளிட்ட காரணங்களால் தூதுவர் ஜூலி சங் பதவி விலகுவார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் தவறானவை. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் தொடர்ந்தும் பதவிவகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங் திரும்ப அழைக்கப்பட்டாரா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading
