திஸ்ஸ விகாரை காணியை இரண்டாக பிரிப்பதற்கு திட்டம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!

Insight இலங்கை | Sri Lanka

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக அண்மைக் காலங்களில் சமூகத்தில் பெரும் பேசுபொருளாக மாறிய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று  திஸ்ஸ ரஜமகா விகாரை காணியை இரண்டாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் எமது தெளிவுபடுத்தல் கீழே தரப்பட்டுள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook |Archived Link 

யாழ்ப்பாண வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமகா விகாரை காணியை இரண்டாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை திட்டம்; புத்த சாசனத்திற்கு எதிரான மிலேச்சத்தனமான அடிப்படைவாதச் செயலைக் கண்டிக்கிறோம். யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமகா விகாரைக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலப்பரப்பை, பிரதேச சபையின் அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னிச்சையாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை எடுத்துள்ள தீர்மானத்தை, சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் என்ற ரீதியில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.” எனும் வாசகங்களுடன் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு இவ்வாறு பகிரப்பட்டிருந்தது.

மேலும் குறித்த பதிவுகள் சிங்கள மொழியிலேயே பகிரப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Explainer (விளக்கமளித்தல்) 

யுத்தம்  முடிவுக்கு வந்த பின்னர், போரினால் சேதமடைந்த திஸ்ஸ விகாரையை மீண்டும் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனுடன் இணைந்ததாக, அண்மைக் காலங்களில் அந்த விகாரை மற்றும் அதன் காணி உரிமை தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய நிலைமைகள் ஏற்பட்டிருந்தன. விகாரை அமைந்துள்ள நிலமானது தனிப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமானது எனக் கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரி பலமுறை கோரிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. Link | Link | Link 

யாழ்ப்பாண திஸ்ஸ ரஜமகா விகாரை நிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை திட்டமிட்டுள்ளது என தெரிவித்தே மேற்குறிப்பிட்ட பதிவு சமூக ஊடகங்களிலி பகிரப்பட்டிருந்தது. திஸ்ஸ ரஜமகா விகாரைக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலப்பரப்பை, பிரதேச சபையின் அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னிச்சையாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், இது தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் திஸ்ஸ ரஜமகா விகாரையின் விகாராதிபதியிடம் கையளிக்கப்பட்ட கடிதம் ஒன்றும் அந்தப் பதிவுடன் இணைத்துப் பகிரப்பட்டிருந்தது. அந்த கடிதம் பின்வருமாறு

Facebook 

அந்த கடிதத்தை நாம் ஆராய்ந்த போது அதில், விகாரைக்குச் சொந்தமான 21 ஏக்கர் காணியைப் பிரிப்பது தொடர்பான எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்கவில்லை.

தையிட்டியில் திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்படும் போதும் அதன் பாதுகாப்பு எல்லைகள் அடையாளப்படுத்தப்படும் போதும், இந்த ‘பவானி வீதி’ விகாரை வளாகத்திற்குள் உள்ளடங்கும் வகையில் வேலிகள் மற்றும் தடைகள் இடப்பட்டுள்ளதாக பிரதேச சபை கருத்து தெரிவித்துள்ளது. ‘பவானி வீதி’ என்பது தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவிற்கும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கும் உத்தியோகபூர்வமாகச் சொந்தமான ஒரு பொது வீதியாகும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை சுட்டிக்காட்டுகின்றது.

2026 ஏப்ரல் 28 ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சுகிர்தன் அவர்களின் தலைமையில், அரச நில அளவையாளர்களைக் கொண்டு விகாரை நிலத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள பவானி வீதியின் எல்லைகளை உத்தியோகபூர்வமாக அளவீடு செய்து அடையாளப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய, 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் தையிட்டி தெற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 59(1) பிரிவின் கீழ், பவானி வீதியை மறித்து இடப்பட்டுள்ள எல்லை வேலிகள் மற்றும் தடைகளை 2026 மே 11 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றி வீதியைத் திறந்துவிடுமாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விகாரை நிலத்தின் உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலனைக்காக அன்றைய தினத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.Link

சிங்கள அமைப்புகளின் ஒன்றியம்

இது தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்காக, மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவை வெளியிட்ட சிங்கள அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்கவிடம் நாம் வினவினோம். இதன்போது அவர் குறிப்பிட்டதாவது:

இந்தக் கடிதம் மல்லாகம் பிரதேச சபையின் தவிசாளரினால் யாழ்ப்பாண திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதமாகும். இந்தக் கடிதம் கிடைத்த பின்னர், விகாரைக்குச் சொந்தமான நிலத்தின் நடுவே வீதி அமைப்பதற்கான முயற்சிகள் குறித்து விகாராதிபதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி இன்று (11) அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலம் விகாரைக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த நீண்டகால வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த நிலத்தில் வீதி ஒன்று இருந்ததாகக் கூறி, அதனை அளவீடு செய்து பிரித்தெடுக்கப் போவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு அந்த வீதி பிரிக்கப்பட்டால், விகாரைக்குச் சொந்தமான காணி இரண்டாகப் பிளவுபடும்.

ஒரு பிரதேச சபையினால் வீதி அமைக்கப்படும்போது அதற்குரிய நடைமுறைகள் உள்ளன. அது மாகாண சபை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு செயற்பாடாகும். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, அத்தகைய நடைமுறைகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட வீதி எதுவும் அவ்விடத்தில் இல்லை. வீதி இருந்ததற்கான சான்றாக அவர்கள் காட்டும் சில மின் கம்பிகள் குறித்து ஆராய்ந்தபோது, அவை யுத்த காலத்தில் இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபை

தொடர்புடைய கடிதம் மற்றும் அதன் பின்னணிச் சம்பவம் குறித்து மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சுகிர்தன் அவர்களிடம் நாம் வினவினோம். இதன்போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உரிமையின் கீழ் உள்ள தையிட்டி பவானி வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லை அடையாளங்களை அகற்றுவதற்கும், அந்த வீதி எல்லை தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியிடம் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த வீதி தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக 2026.05.11 அன்று திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி முன்னிலையாகவில்லை. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அது குறித்த தீர்மானம் மே மாதம் 21 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.”

மேலும், விகாரைக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை இரண்டாகப் பிரிக்கும் முயற்சி நடப்பதாகப் பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பலாலி பொலிஸ் நிலையம்

சம்பவத்துடன் தொடர்புடைய விகாரையானது பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்டது என்பதாலும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் குறித்த கடிதத்தின் பிரதி பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பப்பட்டிருந்ததாலும், நாம் இது குறித்து பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவினோம்.

இதன்போது வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லைகள் தொடர்பாக திஸ்ஸ விகாரைக்கு பிரதேச சபையினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தற்போது தேசிய சபைஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நீதவான் அவர்கள் இது தொடர்பான தீர்ப்பை மே 21 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன் பின்னரே எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க முடியும். என குறிப்பிட்டார்.

பிராந்திய செய்தியாளர்கள்

இது தொடர்பாக மேலும் உறுதிப்படுத்துவதற்காக அப்பகுதியின் பிரதேச ஊடகவியலாளர்களிடமும் வினவினோம். இதன்போது, திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை பிரதேச சபையின் அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னிச்சையாகப் பிரிக்கும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்லைகளை அகற்றுமாறு பிரதேச சபையினால் திஸ்ஸ விகாரையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பான நீதித்துறை நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த நீதிமன்றத் தீர்ப்பு மே 21 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என குறிப்பிட்டனர்.

அதற்கமைய, வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லைகளை அகற்றுவதற்காகவே திஸ்ஸ விகாரைக்கு பிரதேச சபையினால் எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. குறித்த பிரச்சினை தொடர்பாக தற்போது நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, விகாரைக்குச் சொந்தமான நிலத்தைப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை முயற்சிப்பதாக சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ்வாறு தன்னிச்சையாகப் பிரிக்க முயற்சிப்பதாகவோ அல்லது அந்த நிலத்தின் ஊடாகப் பொது வீதி ஒன்று அமைந்துள்ளதாகவோ எம்மால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இது தொடர்பாக வினவுவதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும், இதுவரை அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் ‘தையிட்டி பவானி’ வீதி தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு மே மாதம் 21 ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பு கிடைத்த பின்னர் இக்கட்டுரையை புதுப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Result Stamp

Title: திஸ்ஸ விகாரை காணியை இரண்டாக பிரிப்பதற்கு திட்டம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!

Fact Check By: Suji Shabeedharan

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *