Metaவினால் பயனர்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட தரவுகளை  பயன்படுத்த புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளதா?

False சமூகம் | Society

நாம் வாழும் இந்த டிஜிட்டல் உலகில் சமூக ஊடக பாவனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் சமூக ஊடகங்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் பகிரப்படுவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறு பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் நாளை புதிய Facebook விதி (மெட்டா என்றும் அழைக்கப்படும்) தொடங்குகிறது என்பதை மறக்காதீர்கள். இது உங்கள் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது.

இன்றுதான் கடைசி நாள்!!!

60 Minutes நிகழ்ச்சியின்படி: Facebook Meta இப்போது பொது நிறுவனமாகிவிட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் இதுபோன்ற ஒரு குறிப்பை பதிவிட வேண்டும்.

நீங்கள் குறைந்தது ஒரு முறையாவது இத்தகைய அறிக்கையை வெளியிடாவிட்டால், உங்கள் 

புகைப்படங்கள் மற்றும் உங்கள் சுயவிவரத்தில் உள்ள ஸ்டேட்டஸ் அப்டேட்கள் உட்பட அனைத்து தகவல்களையும் பயன்படுத்த அனுமதி அளித்ததாக தொழில்நுட்பரீதியாக புரிந்துகொள்ளப்படும்.

நான் இதன்மூலம் அறிவிக்கிறேன்: Facebook அல்லது Meta எனது எந்த தனிப்பட்ட தரவுகளையும் பயன்படுத்த எனது அனுமதியை நான் வழங்கவில்லை. என குறிப்பிட்டு இன்று (11.05.2026) ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

மேலும் சமூக ஊடகங்களில் பலரும் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

FB | FB | FB

Fact Check (உண்மை அறிவோம்)

பயனாளர்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையை Meta நிறுவனம் பெற்றுக்கொள்வதாக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக, அந்த நிறுவனம் அல்லது சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதா என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம். இருப்பினும், அவ்வாறான செய்தி குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் காணப்படவில்லை. 

மெட்டாவின் உள்ளடக்கப் பயன்பாட்டுக் கொள்கைகள் (Content Usage Policy), ஒரு பயனர் பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது இணங்கும் அதன் சேவை விதிமுறைகள் (Terms of Service) மற்றும் தனியுரிமைக் கொள்கையின் (Privacy Policy) கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. பேஸ்புக் கணக்கில் ஒரு செய்தியை ‘copy-paste’ செய்து பதிவிடுவதன் மூலம் இந்த சட்டபூர்வமான ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் செயலியிலோ அல்லது வேறு எங்கும் காணக்கிடைக்கவில்லை.

“60 Minutes” நிகழ்ச்சி குறித்த அறிக்கை

இந்த வைரல் பதிவில், “60 Minutes” எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளதாகவும், பேஸ்புக் பயனாளர்களை இவ்வாறான ஒரு பதிவைப் பதிவிடுமாறு சட்டத்தரணிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், “60 Minutes” நிகழ்ச்சி இவ்வாறான ஒரு செய்தி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அத்துடன், பேஸ்புக் பயனாளர்கள் இவ்வாறான ‘copy-paste disclaimer’ பதிவுகளைப் பதிவிடுவது குறித்து எந்தவொரு சட்டத்தரணியும் பகிரங்க அறிவுறுத்தல்களை வழங்கியதற்கான பதிவுகளும் காணப்படவில்லை.

Meta புகைப்படங்களின் “உரிமம்” 

இந்த வைரல் செய்தியில், Meta நிறுவனம் உங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை “தனதாக்கிக் கொள்கிறது” அல்லது “பயன்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மெட்டாவின் உத்தியோகபூர்வ கொள்கைகளின்படி, பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் நீங்கள் பதிவிடும் அனைத்து உள்ளடக்கங்களின் உரிமையும் உங்களிடமே இருக்கும்.

இருப்பினும், சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகளுக்காக, நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மெட்டா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளீர்கள். ஆனால், இதன் பொருள் மெட்டா நிறுவனம் உங்கள் புகைப்படங்களை முழுமையாகத் தனதாக்கிக் கொள்கிறது என்றோ அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகளை விற்பனை செய்கிறது என்றோ அர்த்தமல்ல.

இவ்வாறான வதந்திகள் குறித்து மெட்டா நிறுவனம் ஏற்கனவே விளக்கமளித்துள்ளதுடன், இவ்வாறான ‘copy-paste’ பதிவுகளுக்கு எவ்வித சட்டபூர்வமான செல்லுபடியும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

Meta பேச்சாளர் தொிவித்த கருத்து

Fact Crescendo இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டது. இதன்போது, மெட்டாவின் பயன்பாட்டு விதிமுறைகளில் (Terms of Use) எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் புதிப்பிக்கப்படும் விதிமுறைகள் குறித்த தகவல்களை மெட்டா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பேஸ்புக் அல்லது Meta நிறுவனம் பயனாளர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரும் புதிய சட்டம் எதனையும் அறிமுகப்படுத்தவில்லை. “60 Minutes” நிகழ்ச்சியும் இது குறித்து செய்தி வெளியிடவில்லை என்பதுடன், பேஸ்புக் கணக்கில் இவ்வாறான ஒரு ‘disclaimer’ செய்தியை ‘copy-paste’ செய்து பதிவிடுவதன் மூலம் எவ்வித சட்டபூர்வமான தாக்கமும் ஏற்படாது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு தூண்டும் மற்றும் தகவல்களைப் பகிருமாறு கோரும் செய்திகள் குறித்து பயனாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும். சமூக ஊடகத் தளங்களின் கொள்கைகள் தொடர்பான தகவல்களை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: Metaவினால் பயனர்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்த புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளதா?

Fact Check By: Suji Shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *