
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள இறக்காமம் பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒரு “மௌலவி” (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின.
ஆன்மீக வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரே இத்தகைய பாதக செயலில் ஈடுபட்டாரா என்ற அதிர்ச்சியும் ஆத்திரமும் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், உண்மையில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு மௌலவியா? அல்லது ஒரு மார்க்கத்தின் புனிதமான பட்டம் இங்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது, ஃபேக்ட் கிரஸண்டோ நடத்திய ஆய்வு விரிவாக விளக்குகிறது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் 14 சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இறக்காமத்தைச் சேர்ந்த 21 வயது மௌலவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நேற்று (2026.06.01) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.




Fact Check (உண்மை அறிவோம்)
இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் நாம் முதலில் கவனம் செலுத்தினோம்.
இதன்போது 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எரகம (இறக்காமம்) பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், பின்னர் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, அவர் ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.Link | Link
அதேபோன்று பொலிஸ் ஊடகப் பிரிவும் இறக்காமத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் மௌலவி ஒருவர் கைது செய்யப்பபட்டு நீதவான் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளை
மேலும் இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் “மௌலவி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானதாகும் எனவும் குறித்த சந்தேக நபர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் பட்டம் பெற்ற ஒரு மௌலவி அல்ல, மேலும் அவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தாய்ச் சபையிலோ அல்லது இறக்காமம் கிளைச் சபையிலோ அங்கத்தவரும் அல்ல என்பதை எமது சபை உறுதிப்படுத்துவதுடன் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம். என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளையினால் ஒரு ஊடக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

எனவே நாம் அது குறித்து மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளையை தொடர்பு கொண்டு, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் மௌலவி அல்ல என தெரிவிப்பதற்கான காரணத்தை வினவினோம்.
இதன்போது, இஸ்லாம் மார்க்க முறைப்படி ஒருவர் மௌலவியாக வேண்டுமெனில் அவர் முறையாக 6 – 7 வருடங்கள் மதரசா கல்வியை தொடர்ந்து அனைத்து பரீட்சைகளிலும் தேர்ச்சிப்பெற்று 7 வருடங்கள் தங்களின் தொழுகை கடமைகளை முழுமையாக நிறைவுசெய்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சான்றிதழை பெற்ற ஒருவர் மாத்திரமே மௌலவியாக முடியும் என்பதனை தெரிவித்தனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட நபர் 2 வருடங்கள் கூட முழுமையான மதரசா கல்வியை தொடராமல் பாதியில் இடைநிறுத்திய நபர் அவ்வாறான ஒருவரை ஒருபோதும் மௌலவி என்று கூறமுடியாது என்பதனையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இஸ்லாமிய மார்க்க முறைப்படி 7 வருட மதரசா கல்வியை நிறைவுசெய்த ஒருவர் இறுதிப் பரீட்சையில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவரையும் இஸ்லாம் மார்க்க சட்டத்திட்டங்களின் படி மௌலவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் குறித்த நபர் பயின்ற பிபில பிரதேசத்தில் உள்ள சலாஹியா இஸ்லாமியக் கல்லூரியில் இது குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னரே நாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளோம் என்பதனையும் அவரகள் உறுதிப்படுத்தினர்.
எனினும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலும் குறித்த சநதேகநபர் மௌலவி என்றே சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது தொடர்பில் நாம் வினவினோம். இதன்போது, இந்த விடயம் அறிந்தவுடன் அது குறித்து ஆராய்ந்து நாம் அனைத்து ஊடகங்கள் மற்றும் பொலிஸிற்கும் இது குறித்த அறிவித்தல்களை அனுப்பிவிட்டோ ஆனால் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் இன்னும் அது மாற்றப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.
குறித்த நபர் ஏதேனும் பள்ளிவாசல்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளரா என்பது தொடர்பில் எமக்கு இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளையின் நிர்வாகத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பயின்ற சலாஹியா இஸ்லாமியக் கல்லூரி
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளை தெரிவித்தமைக்கமைய குறித்த சந்தேகநபர் பயின்ற பிபில பிரதேசத்திலுள்ள சலாஹியா இஸ்லாமியக் கல்லூரியை தொடர்பு கொண்டு குறித்த சந்தேகநபர் இஸ்லாமிய மார்க்க கல்வியை இங்கு பயின்றாரா என்பதனை நாம் வினவினோம்.
இதன்போது கைதான சந்தேகநபர் 2016 ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் இணைந்ததாகவும் ஆனால் மௌலவியாவதற்கு முழுமையாக 7 வருடங்கள் கல்வி பயில இருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பறவிருந்த இரண்டு ஆண்டுகள் நிறைவில் நடைபெறும் இறுதி பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னரே, கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாக குறிப்பிட்டனர்.
முறையாக 7 வருட கல்வியை நிறைவு செய்து இறுதி பரீட்சையில் தேர்ச்சிப் பெறாத ஒருவரை ஒருபோதும் மௌலவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இறக்காமம் பொலிஸ் நிலையம்
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் உண்மையில் மௌலவியா என்பது தொடர்பில் நாம் இறக்காமம் பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு வினவினோம். இதன்போது குறித்த சந்தேகநபர் தப்பிச்சென்று கடந்த 20 ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் தற்போது நீதவான் உத்தரவின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதனை தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேகநபர் மௌலவி எனவும் அவர் வானேகமுவ பிரதேசத்தின் பள்ளிவாசலில் உள்ள இஸ்லாமிய மதத்தலைவர் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார் எனவும் குறிப்பிட்டனர்.
எனினும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளையினால் அவர் மௌலவி அல்ல என ஒரு அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளமை தொடர்பில் நாம் இறக்காமம் பொலிஸில் வினவியபோது, அது அவர்களின் தனிப்பட்ட தேவைக்காக கூறும் விடயம் எனவே தாம் கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இறக்காமம் பிரதேச ஊடகவியலாளர்கள்
மேலும் நாம் இந்த விடயம் தொடர்பில் இறக்காமம் பிரதேச ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த சந்தேகநபர் மௌலவி அல்ல எனவும் அவர் இறக்காமத்தில் கொலணி குடியிருப்பு அமைப்பை கொண்ட ஒரு சிறிய பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலில் உதவியாளராகவே இருந்துள்ளார் எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் குறித்த சந்தேகநபர் மௌலவியாவதற்கான முறையான இஸ்லாமியக் கல்வியை முழுமையாக நிறைவுசெய்யாமல் மதரசாவில் இருந்து இடைநடுவில் யாருக்கும் அறிவிக்காமல் வெளியேறியவர் எனவும் குறிப்பிட்டனர்.
வானேகமுவ பிரதேசத்தின் பள்ளிவாசல்
பொலிஸார் குறிப்பிட்டதனைப் போன்று குறித்த சந்தேகநபர் வானேகமுவ பிரதேச பள்ளிவாசலில் மதத்தலைவராக செயற்பட்டாரா என்பது தொடர்பில் அறிய அந்த பளிளவாசலை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் எமக்கு அந்த பள்ளிவாசல் சார்ந்த நிர்வாகத்தினரை அடையமுடியவில்லை ஆகவே அவர்களின் தொடர்பு கிடைத்தவுடன் அவர்கள் தெரிவித்த கருத்துடன் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
இலங்கையின் பிரபல இஸ்லாமிய தேசிய பாடசாலை ஒன்றின் இஸ்லாமிய சமயக் கல்விக்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரின் கருத்து
இஸ்லாமிய மதச் சட்டத்தின்படி மௌலவி ஆவதற்கான வழிமுறைகள் தொடர்பில் நாம் இலங்கையின் பிரபல இஸ்லாமிய தேசிய பாடசாலை ஒன்றின் இஸ்லாமிய சமயக் கல்வி ஆசிரியர் ஒருவரிடம் வினவினோம். இதன்போது இஸ்லாமிய மதச் சட்டத்தின் படி இலங்கையில் 6 – 7 ஆண்டுகள் வரையான முழுமையான மதக்கல்வி, தொழுகைகள் என்பவற்றை நிறைவுசெய்து 7 ஆண்டுகள் நிறைவில் நடைபெறும் இறுதிப் பரீட்சையில் சித்திபெற்றவருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலாமா மற்றும் இலங்கை கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழக்கப்படும் அந்த சான்றிதழை முறையாக பெற்ற ஒருவருக்கு மாத்திரமே மௌலவியாக முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளின்படி, சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஒரு ஆன்மீக மற்றும் சன்மார்க்க அறிஞராக விளங்குபவரே மௌலவி (ஆலிம்) என அழைக்கப்படுகிறார். இஸ்லாமிய சட்டத்துறையையும், அதன் விழுமியங்களையும் ஆழமாகக் கற்றுத் தேறுவதே இதற்கான அடிப்படைப் படிமுறையாகும்.
இலங்கையில் மௌலவி பட்டப்படிப்பு மற்றும் அதன் நடைமுறைகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் பேணப்பட்டு வருகின்றன. இதுகுறித்த முழுமையான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
மௌலவி ஆவதற்கான அடிப்படைப் படிமுறைகள் (இஸ்லாமிய நெறிமுறை)
பொதுவாக, இஸ்லாமிய மரபில் ஒரு நபர் மௌலவியாக உருவாவதற்குப் பின்வரும் பாடத்திட்டங்களையும் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்:
- அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கலை: குர்ஆனைத் தஜ்வீத் (முறையான உச்சரிப்பு) உடன் ஓதுதல், அதன் தப்ஸீர் (விரிவுரை) மற்றும் நபியவர்களின் பொன்மொழிகள் (ஹதீஸ்) மற்றும் அதன் கலைகளை (உஸூலுல் ஹதீஸ்) கற்றல்.
- அரபு மொழித் தேர்ச்சி: அரபு இலக்கணம் (நஹ்வு, ஸர்ஃப்) மற்றும் அரபு இலக்கியம் (பலாகா) ஆகியவற்றில் முழுமையான புலமை பெறுதல்.
- இஸ்லாமிய சட்டவியல் (Figh): இஸ்லாமிய சட்டக் கலை மற்றும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளை (உஸூலுல் பிக்ஹ்) பயிலுதல்.
- அகீதா (கோட்பாடு): இஸ்லாமியக் கொள்கை மற்றும் இறையியல் சார்ந்த தெளிவைப் பெறுதல்.
இலங்கையில் இது எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றது?
இலங்கையில் மௌலவி பட்டம் வழங்குவது அரபுக் கல்லூரிகள் (மத்ரஸாக்கள்) மூலமாகவே பிரதானமாக நடைபெறுகின்றது. இலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரியான பேருவலை பாரி அரபுக் கல்லூரி (1884 இல் நிறுவப்பட்டது), மஹரகம கபூரியா அரபுக் கல்லூரி, அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி போன்றவை இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
இலங்கையில் இம்முறைமை பின்வரும் நிலைகளில் கடைபிடிக்கப்படுகிறது:
சேர்க்கைக்கான தகுதிகள்
மாணவர்கள் பொதுவாக 14 முதல் 16 வயதிற்குள் (தரம் 9 அல்லது க.பொ.த சாதாரண தரம் – O/L முடித்த பின்) அரபுக் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
- நேர்முகப் பரீட்சை மூலம் குர்ஆன் ஓதும் திறன், நன்னடத்தை மற்றும் அடிப்படை மார்க்க அறிவு என்பன சோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுவர்.
கல்விக்காலம் மற்றும் பாடத்திட்டம்
- இலங்கையில் மௌலவி பட்டப்படிப்பு என்பது பொதுவாக 7 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒரு வதிவிடக் (Residential) கற்கை நெறியாகும்.
- ஆரம்பக் கட்டத்தில் அரபு மொழியும், பின்னர் இஸ்லாமிய சட்டக் கலைகளும் (கிதாப் பிரிவு) போதிக்கப்படும்.
- அண்மைக்காலமாக, மௌலவிமார்கள் பல்லின சமூக அமைப்பிற்குள் வாழப் பழகுவதற்காக அரபு, தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளும், கணிதம், கணினி அறிவியல் போன்ற பொதுப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
இலங்கையில் இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது? (சட்ட மற்றும் அரச அங்கீகாரம்)
இலங்கையில் மௌலவி பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒருவர், சமூகத்திலும் அரசாங்கக் கட்டமைப்பிலும் அங்கீகரிக்கப்படுவதற்குப் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன:
பரீட்சைத் திணைக்களத்தின் ‘அல்-ஆலிம்’ (Al-Alim) பரீட்சை
அரபுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் “அல்-ஆலிம்” (Al-Alim) சான்றிதழ் பரீட்சைக்கு தோற்ற வேண்டும். இது க.பொ.த உயர்தரத்திற்கு (A/L) இணையான ஒரு தகைமையாகக் கருதப்படுகிறது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பதிவு
மௌலவி பட்டம் பெற்ற பின்னர், அவர்கள் இலங்கையின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் (Department of Muslim Religious and Cultural Affairs) தங்களை ஒரு மௌலவியாகப் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் சான்றிதழையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) அங்கீகாரம்
இலங்கை முஸ்லிம் உலமாக்களின் உச்ச சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் மௌலவிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வர். இது அவர்களுக்குரிய மார்க்கத் தீர்ப்பு (பத்வா) வழங்கும் தகுதியையும், சமூக அங்கீகாரத்தையும் பலப்படுத்துகிறது.
சுருக்கமாகக் கூறினால், இலங்கையில் பாரம்பரிய இஸ்லாமியக் கல்வி முறைமை கெடாமல், அதேநேரம் நாட்டின் சட்டக் கட்டமைப்பு மற்றும் கல்வித் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவே ஒரு மௌலவியை உருவாக்கும் நடைமுறைகள் தற்போதும் மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. Link | Link
குறிப்பு: மேற்குறிப்பிட் விடயங்களின் அடிப்படையில் பொலிஸ் அறிக்கையில் குறித்த சந்தேகநபர் மௌலவி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இறக்காமம் பிரதேச கிளை அதனை மறுத்து அதற்கான காரணங்களை தெரிவித்துள்ளது. எனினும் இந்த சந்தேகநபர் மௌலவியா, இல்லையா என்பது தொடர்பில் சரியான முடிவிற்கு வருவதற்கு போதிய ஆதரங்கள் தேவைப்படும் பட்சத்தில், அது குறித்து தொடர்ந்து கிடைக்கும் ஆதாரங்களுடன் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


