
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முத்திரைகளில், ஒரு முத்திரையில் புலி ஒன்றின் உருவம் இருப்பதாகவும், அது விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் புகைப்படப் பதிவுகள் பகிரப்பட்டிருந்தன.
எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):


கடவுச்சீட்டுகளில், இலங்கைக்கு வருகை தரும் போது (Arrival) புலி ஒன்றின் உருவமும் பொறிக்கப்பட்ட முத்திரை பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும், அது பற்றி சமூக ஊடகங்களில் கலந்துரையாடல் ஒன்று உருவானது குறித்தும் பதிவிடப்பட்டிருந்தது.
இவ்வாறு விலங்குகளைப் பயன்படுத்தி முத்திரையிடுவது எப்போது முதல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் இந்த அடையாளங்களைப் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவின் மூலம் மேலும் வினவப்பட்டிருந்தது. இதன் காரணமாக, இது குறித்து ஆராய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்.
Fact Check (உண்மை அறிவோம்)
சமீபத்தில் கடவுச்சீட்டுகளில் பயன்படுத்தப்பட்ட வருகை மற்றும் புறப்பாடு முத்திரைகளை பரிசோதித்த போது, மேலே குறிப்பிட்டவாறு இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களின் பயணிகள் வருகை முனையத்தில் வருகை முத்திரையாக (Arrival Stamp) நீல நிறத்தில் சிறுத்தை ஒன்றின் உருவமும், புறப்பாடு முனையத்தில் புறப்பாடு முத்திரையாக (Departure Stamp) பச்சை நிறத்தில் மயில் ஒன்றின் உருவமும் கொண்ட முத்திரைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த முத்திரை குறித்து 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட சமூக ஊடக தளமான Reddit இல் இவ்வாறு பதிவிடப்பட்டிருந்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கடவுச்சீட்டுகளுக்கு இவ்வாறு பயன்படுத்தப்படும் முத்திரைகள், சமீபத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தால் அது குறித்து பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும் என்பதால் நாங்கள் இது குறித்து தேடுதல் ஒன்றை மேற்கொண்டோம். எனினும், அவ்வாறானதொரு செய்தி வெளியாகியிருப்பதை காண முடியவில்லை.
அதற்கமைய, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் முத்திரைகளுடனான புகைப்படங்களை நாம் Reverse Image தேடலுக்கு உட்படுத்தினோம்.
இதன்போது 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான பல செய்தி அறிக்கைகளில் புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. சர்வதேச தரத்திற்கு அமைய, போலி நகல்களை உருவாக்க முடியாதவாறு, பாதுகாப்பு உத்திகளைப் பயன்படுத்தியும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் இரண்டு புதிய முத்திரைகளை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்ததாக இவ்வாறு செய்திகள் வெளியாகியிருந்தன.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி (01) நள்ளிரவு 00.00 மணி முதல், முதன்முறையாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அன்றைய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அவர்கள் குறிப்பிட்டிருந்ததாக Mawbima செய்தி வெளியிட்டிருந்தது. Archived Link
1948 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய முத்திரையை பல மோசடி நபர்கள் போலி நகல்களாக தயாரித்து பயன்படுத்திய சம்பவங்கள் பதிவாகியிருந்தமையே இந்த புதிய முத்திரைகளை அறிமுகப்படுத்துவதற்கு பிரதான காரணியாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த புதிய முத்திரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் ஏனைய சர்வதேச விமான நிலையங்களிலும் இந்த புதிய முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதி வரை பயன்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு முத்திரைகள் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
நாங்கள் இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் வினவியபோது, உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலையாக, போலி பயண ஆவணங்களைத் தயாரிப்பதைத் தடுத்தல், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு குறிகாட்டியாகப் பயன்படுத்துதல் மற்றும் அதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல் போன்ற பிரதான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் இத்தகைய பாதுகாப்பு முத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கையானது, வருடம் முழுவதும் தீவிரமான மாற்றங்கள் இல்லாத மிதமான காலநிலை மாறுபாடுகளைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் மனதைக் கவரும் பல்லுயிர்த்தன்மை மற்றும் இயற்கைக்காட்சிகளுடன் அது மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. எனவே, 2024 ஜூன் மாதம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு முத்திரைகளுக்குள், சிறுத்தை (Leopard) மற்றும் மயில் (Peacock) போன்ற இலங்கைக்கே உரித்தான மற்றும் பிரபலமான விலங்குகளை உள்ளடக்குவதன் மூலம், இந்த ஈர்ப்பை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
குற்றவியல் புள்ளிவிபரங்களின்படி, இலங்கை மனித கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் குற்றங்களுக்கான ஒரு மூல நாடாக (source country) விளங்குவதாகவும், அது ஒரு இலக்கு நாடாக (destination) மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற போதிலும், இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, நாட்டிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்குமான முத்திரைகள் தரப்படுத்தப்பட்ட மற்றும் ஈர்க்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்தது.
2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முத்திரையில் அடங்கியுள்ள பச்சை, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய ஈரமான மை (wet ink) சேர்க்கையானது, அச்சிடும் தொழில்நுட்ப முறைகள் மூலம் மறுவடிவமைப்பு செய்யப்படும் பொதுவான போலி தயாரிப்பு உத்திகளில் இருந்து பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும், புற ஊதாக் கதிர்களுக்கு எதிர்வினையாற்றும் மை (Ultraviolet reactive ink), தனித்துவமான எழுத்து வடிவங்கள் (fonts) மற்றும் சிறப்பு எழுத்துக்களை உள்ளடக்குவதன் மூலம் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பல்வேறு உலகளாவிய முத்திரைகள் குறித்து ஆய்வு செய்து, நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு என தனித்துவமான நுழைவு மற்றும் புறப்பாடு முத்திரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்கள், மை பயன்பாடு, அடையாளக் குறியீடுகள், வடிவங்கள் மற்றும் எழுத்து பாணிகள் உட்பட பல நாடுகளின் நுழைவு மற்றும் புறப்பாடு முத்திரைகள் குறித்த நீண்டகால முழுமையான ஆய்வின் மூலமே இந்த பரிந்துரைகளை வெற்றிகரமாக உருவாக்க நடவடிக்கை எடுத்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முத்திரைகள்
2019 ஆம் ஆண்டளவில், இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த முத்திரையிடும் உபகரணங்களின் பௌதீக மற்றும் இயந்திரவியல் நிலைமைகளும் அவற்றின் வடிவமைப்புகளும் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்திருந்தன. இந்த வீழ்ச்சியானது பாதுகாப்புத் தரங்களுக்கு மாத்திரமன்றி, உத்தியோகபூர்வ அங்கீகாரங்கள் (endorsements) ஊடாக நாட்டின் தேசிய அடையாளத்தை திறம்பட பிரதிபலிப்பதற்கும் ஒரு சவாலாக அமைந்திருந்தது.
இதற்கு தீர்வாக, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பயணிகள் கப்பல்களுக்கான புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு முத்திரை தொகுப்பொன்றை வடிவமைத்து மேம்படுத்தும் முதன்மை நோக்கத்துடன், திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரின் கீழ் 2019.05.31 அன்று நியமிக்கப்பட்ட குழுவொன்றின் கீழ் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
ஆரம்பக் கட்டத்தில், சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்ட முன்னணி நாடுகளினால் பயன்படுத்தப்படும் குடிவரவு முத்திரைகள் குறித்து இந்த குழுவினால் ஒரு கருத்தியல் மற்றும் ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, சுற்றுலாத்துறையில் பெரிதும் தங்கியிருக்கும் ஒரு நாடு என்ற வகையில், சர்வதேச தரத்திற்கு இணங்க இலங்கையும் தனது முத்திரைகளை நவீனமயமாக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. இது போன்ற விரிவான விபரங்களை வழங்கி, இந்த முத்திரைகள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். அந்தப் பிரிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
விமான நிலையப் பிரிவு (Airport Category)
வருகை முனையம் (Arrival Terminal): இலங்கைச் சிறுத்தை (Panthera pardus kotiya):
இது இலங்கைக்கே உரித்தான சிறுத்தை இனத்தின் ஒரு துணை இனமாகும் (subspecies). அத்துடன், 2020 ஆம் ஆண்டு முதல் IUCN சிவப்பு பட்டியலில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள உயிரினமாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கம்பீரமான விலங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரதான ஈர்ப்பு மையமாக விளங்கி வருகின்றது.
அதற்கமைய, மேலே குறிப்பிட்டுள்ள முத்திரையின் மூலம் பிரதிபலிக்கப்படுவது, இலங்கைக்கே உரித்தான சிறுத்தை இனத்தின் ஒரு துணை இனமான இலங்கைச் சிறுத்தை (Panthera pardus kotiya) என்பது தெளிவாகின்றது.
புறப்பாடு முனையம் (Departure Terminal): மயில் (Pavo cristatus):
இலங்கையின் வறண்ட வலையத்தில் பரவலாகக் காணப்படும் இப்பறவை, தீவின் கலாசார பாரம்பரியம், மத மரபுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் 2023/05/09 அன்று இந்த முன்மொழிவுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர், இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, கடும் சர்வதேச தரங்களுக்கு அமைய 2024 ஜூன் 1 ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் கலைநயமிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு முத்திரைகள்
சீஷெல்ஸ் – வருகை மற்றும் புறப்பாடு (விமான நிலையம்): கோகோ டி மெர் (Coco de Mer – Lodoicea maldivica) என்பது சீஷெல்ஸின் பிரஸ்லின் (Praslin) மற்றும் கியூரியஸ் (Curieuse) தீவுகளுக்கு மாத்திரம் உரித்தான ஒரு அரிய வகை பனை மரமாகும்.

மாலைத்தீவு – வருகை மற்றும் புறப்பாடு (விமான நிலையம்): குறியீடுகள் – பவளப்பாறைகள் (Coral Reef) மற்றும் சூரியன் (Sun)

சிலி – வருகை மற்றும் புறப்பாடு (விமான நிலையம்): குறியீடுகள் – லாமா விலங்கு (Lama the Animal) மற்றும் இன்கா குறியீடுகள் (Inka Symbols)

கனடா – வருகை (கனடா வருகையின் போது மாத்திரமே முத்திரைகளைப் பயன்படுத்துகிறது): குறியீடு – மேப்பிள் இலை (Maple Leaf)

நியூசிலாந்து – வருகை (நியூசிலாந்து வருகையின் போது மாத்திரமே முத்திரைகளைப் பயன்படுத்துகிறது) – குறியீடு – ஒலிவ் இலை (Olive Leaf)

தாய்வான்: வருகை மற்றும் புறப்பாடு: குறியீடுகள் – தாய்வான் எழுத்துக்கள் மற்றும் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்கா: 2025 ஆகஸ்ட் 01 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட, ஒரு “பெண் சிங்கத்தின்” (Lioness) பாதுகாப்பு உருவத்தைக் கொண்ட, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான தென்னாப்பிரிக்காவின் புதிய குடிவரவு முத்திரைகள்.
குறியீடு: பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பெண் சிங்கத்தின் உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏனைய நாடுகளும் குடிவரவு மற்றும் குடியகல்வின் போது தமது முத்திரைகளுக்காக பல்வேறு அடையாளங்களைப் பயன்படுத்துகின்றன என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இலங்கையின் புதிய முத்திரை எனக் குறிப்பிட்டு, கடவுச்சீட்டில் புலி அடையாளம் இடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பே பிரதிபலிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதிய முத்திரை என சுட்டிக்காட்டப்பட்டிருந்த இந்த முத்திரையானது, சர்வதேச தரத்திற்கு இணங்க, பல வருடங்களாக உயர் பாதுகாப்பு முத்திரைகளாக திட்டமிடப்பட்டு, 2024 ஜூன் 1 ஆம் திகதி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. அதற்கமைய, இது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தது என்பது உறுதி செய்யப்படுகின்றது.
அதேபோன்று, மேலே குறிப்பிட்டுள்ள முத்திரையின் மூலம் பிரதிபலிக்கப்படுவது இலங்கைக்குக்கே உரித்தான சிறுத்தை இனத்தின் ஒரு துணை இனமான இலங்கைச் சிறுத்தை (Panthera pardus kotiya) என்பதும், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக புலி அடையாளத்தைப் பயன்படுத்திய ஒரு முத்திரை அல்ல என்பதுவும் தெளிவாகின்றது.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில், இலங்கைக்கு வருகை தந்தமையை சான்றளிப்பதற்காகவே இந்த முத்திரை பயன்படுத்தப்படுகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


