இலங்கையின் முன்னணி பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கிலப் பாடசாலை ஆசிரியை ஒருவர், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஆடை வடிவமைப்புப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு, புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே அந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஆசிரியைக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்ப்பு!
நாட்டின் முன்னணிப் பிரபல மகளிர் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியை ஒருவர், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஆடை வடிவமைப்புப் (Fashion Show) போட்டியொன்றில் பங்கேற்றுள்ளார்.
அங்கு அவர் இருதுண்டு நீச்சல் உடையில் (Bikini) அப் போட்டியின் ஒரு நிகழ்வில் தோன்றியமை தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நடத்தை ஆசிரியர் தொழிலுக்குப் பொருத்தமற்றது என்றும், இது பாடசாலை மாணவிகளை தவறான வழிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும் கூறி, அப் பாடசாலையின் ஏனைய ஆசிரியைகள் சிலர் அதிபருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓர் ஆசிரியையின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தொழில்முறை கண்ணியம் என்பதை விட, இது தெளிவாகப் பொறாமையினால் எழுந்த ஒன்றா? என தெரிவித்து குறித்த பதிவு நேற்று (2026.07.21) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.


Fact Check (உண்மை அறிவோம்)
இந்தப்பதிவுகள் வெளியிடப்பட்ட போதிலும், இதில் உத்தியோகபூர்வ மூலங்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை என்பதும், இவ்வாறானதொரு சம்பவம் உண்மையாகவே இந்நாட்டு பாடசாலை ஆசிரியை ஒருவர் தொடர்பில் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும் என்றாலும், அத்தகைய தகவல்களை எங்குமே காணமுடியவில்லை. இதனால், இந்நாட்டைச் சேர்ந்த ஆசிரியை எனக் கூறப்படும் அவர், பேஷன் டிசைன் மாடல் போட்டியில் கலந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படங்களை நாங்கள் Reverse Image தேடலுக்கு உட்படுத்தினோம்.
புகைப்படத்தில் இருப்பது குவாத்தமாலாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்
அங்கு சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களைக் கொண்ட பேஸ்புக் குறுகிய காணொளி ஒன்றை எம்மால் காண முடிந்தது. அந்தக் காணொளியில் காட்டப்படுவது இந்நாட்டு சமூக வலைதளங்களில் நம்நாாட்டு என கூறப்பட்ட பெண் ஆவார். ஆனால், அக்காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, நமது அழகி மோன்ஜாப் பிளாங்கா 2026-2027 (Monja Blanca 2026-2027), அவரது பெயர் ஜேம் ஸ்டெஃபனி ஹெர்னாண்டஸ் ரீனா (Jaem Stephanie Hernández Reina) எனவும், பிரதேசம் சான் ஜுவான் சாமெல்கோ (San Juan Chamelco) எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், அதே பேஸ்புக் கணக்கில், இந்த பெண் குறித்த போட்டி தொடர்பில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஸ்பானிஷ் (Spanish) மொழியில் பேசும் காணொளி ஒன்றையும் காண முடிந்தது.
இதன்போது அவர் தனது சொந்த ஊரையும் அடையாளத்தையும் குறிப்பிடுவதுடன், தான் ஆல்டா வெராபாஸ் (Alta Verapaz) பகுதியின், குறிப்பாக சுதேசி கலாச்சாரம் நிலவும் சான் ஜுவான் சாமெல்கோ (San Juan Chamelco) நகரத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.
25 வயதான அவர், ரபேல் லாண்டிவார் பல்கலைக்கழகத்தில் (Universidad Rafael Landívar) சமூக சேவைத் துறையில் தொழில்நுட்பக் கல்வியும் பட்டமும் பெற்றுள்ளதுடன், தனது பிரியமான சான் ஜுவான் சாமெல்கோ நகரத்திற்குப் புகழைத் தேடிக்கொடுத்து, அதனைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது பிரதான நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அவர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் (Guatemala) சான் ஜுவான் சாமெல்கோ பகுதியைச் சேர்ந்த இளம் பெண் என்பதை வெளிப்படுத்துகிறார்.
அத்துடன், இப் பெண்ணின் பேஸ்புக் கணக்கைப் பரிசோதித்தபோது, அவர் மேற்படி போட்டியில் கலந்துகொண்ட வேறு சந்தர்ப்பங்கள் தொடர்பான காணொளிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. Link | Link | Link
சமூக வலைத்தளங்களில் மலேசியாவில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட போட்டி எது?
2026 ஜூலை 11 ஆம் திகதி குவாத்தமாலாவின் ஆல்டா வெராபாஸ் (Alta Verapaz) மாகாணத்தின் கோபான் நகர சபையால் (Municipalidad de Coban) ஒழுங்கமைக்கப்பட்ட “நுவெஸ்ட்ரா பெலேசா மோன்ஜா பிளாங்கா 2026-2027” (Nuestra Belleza Monja Blanca) எனும் அழகிப் போட்டிக்கு ஜேம் ஸ்டெஃபனி கலந்துகொண்டுள்ளாரே தவிர, சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்படுவது போல் இது மலேசியாவில் நடைபெற்ற போட்டியல்ல.
இந்தப் போட்டி குவாத்தமாலாவின் தேசிய மலரான “மோன்ஜா பிளாங்கா” (வெள்ளை ஓர்க்கிட் மலர்) என்ற பெயரைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது.
கோபான் நகர சபை மற்றும் ஆல்டா வெராபாஸ் நகர சபை இணைந்து, 17 நகர சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஒரு பிரதிநிதியை இந்த அழகிப் போட்டிக்கு விண்ணப்பிக்குமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. Link
இந்தப் போட்டிக்கு ஆல்டா வெராபாஸ் மாகாணத்திற்குச் சொந்தமான நகர சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 இளம் பெண்கள் கலந்துகொண்டிருந்ததுடன், அதில் இறுதிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 6 போட்டியாளர்களில் ஜேம் ஸ்டெஃபனி ஹெர்னாண்டஸ் ரீனாவும் ஒருவர் ஆவார். இறுதி 6 பேரைப் பிரதிநிதித்துவப்படுத்திய பகுதிகள் பின்வருமாறு:
- லிஸ்பெட் மரியா அலெஜாண்ட்ரா ரமிரெஸ் லீமா (Lisbeth María Alejandra Ramírez Lima) – கஹாபொன் (Cahabón) நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், அவரே இந்த அழகிப் பட்டத்தை வென்றார்.
- மரியா டெ லொஸ் ஏஞ்சலஸ் டெ லா க்ரூஸ் கெஜ் (María de los Ángeles de la Cruz Quej) – சாந்தா க்ரூஸ் வெராபாஸ் (Santa Cruz Verapaz).
- ஜொசலின் அலெக்சாண்ட்ரா கொய் டெனி (Joselyn Alexandra Coy Teni) – கோபான் (Cobán).
- அட்ரியானா சாரா இ பாஸ் முñoz (Adriana Sarahí Paz Muñoz) – ப்ரே பார்தொலொமே டெ லாஸ் காசாஸ் (Fray Bartolomé de las Casas).
- ஜேம் ஸ்டெஃபனி ஹெர்னாண்டஸ் ரீனா (Jeyme Stefanyh Hernández Reina) – சான் ஜுவான் சாமெல்கோ (San Juan Chamelco).
- மியா பெலென் கார்சியா கால் (Mia Belén García Caal) – லா டின்டா (La Tinta).
இதற்கமைய, இந்த அழகிப் போட்டி குவாத்தமலா நாட்டிற்குள் நடத்தப்பட்ட ஒரு அழகிப் போட்டி என்பதுடன், வேறு எந்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது மேலும் உறுதியாகிறது.
அத்துடன், நகர சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டிக்கான பிரதிநிதிகள் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டுள்ளதன் மூலம், அவர் ஒரு பாடசாலை ஆசிரியை அல்ல என்பதும் உறுதியாகிறது.
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவுக்கு அடிப்படையாக அமைந்த, பிகினி உடையில் இந்தப் போட்டியாளர்களின் தோற்றம் குறித்து வெளியிடப்பட்ட புகைப்படப் பதிவு இங்கே.
குவாத்தமாலாவின் அல்டா வெராபாஸ் மாகாணத்தில் உள்ள சான் பெட்ரோ கார்ச்சா (San Pedro Carcha) பிரதேசத்தை மையமாகக் கொண்ட உள்ளூர் சுதந்திர டிஜிட்டல் ஊடகப் பக்கம் ஒன்றில், இந்தப் போட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டபோது, ஜேம் ஸ்டெஃபனி ஹெர்னாண்டஸ் ரீனா பற்றிய காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
இறுதிப் போட்டி 2026 ஜூலை 11 ஆம் திகதி கோபானில் அமைந்துள்ள INJUD அல்லது INJAV விளையாட்டு வளாக மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டதுடன், இது சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
கஹாபொன் (Cahabón) நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய லிஸ்பெட் அலெஜாண்ட்ரா ரமிரெஸ் லீமா இந்த மகுடத்தை வென்றுகொண்டதுடன், அவருக்கு முந்தைய ஆண்டின் (2025-2026) அழகியான சிண்டி கேப்ரியேலா ரொசாலெஸ் (Sindy Gabriela Rosales) உத்தியோகபூர்வமாக மகுடம் சூட்டி கௌரவித்தார்.
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியை மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஆடை வடிவமைப்புப் போட்டி ஒன்றிற்குச் சென்று பிகினி உடையில் தோன்றியதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானவையாகும். குவாத்தமாலாவின் 17 நகர சபைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட உத்தியோகபூர்வ அழகிப் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட அந்நாட்டைச் சேர்ந்த ஜேம் ஸ்டெஃபனி ஹெர்னாண்டஸ் ரீனா (Jeyme Stefanyh Hernández Reina) எனும் போட்டியாளரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி, சமூக ஊடகப் பயனர்களைத் திசைதிருப்பும் நோக்கில் இலங்கையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தான் இவர் என பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.


