
INTRO :
அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே குறித்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):

அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க #சுதுமலை_அம்மன் கோயிலை இடிக்குமாறு #மணிவண்ணன் வழக்குத்தாக்கல்.
ஏன் இந்த சமூக அக்கறை அனுமதியின்றி கட்டப்பட்ட #தையிட்டி விகாரைக்கு வரவில்லை?கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் என தெரிவித்து குறித்த பதிவு 2026.07.28 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு மணிவண்ணன் வழக்குத் தாக்கல் செய்திருப்பாராயின் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளையும் காணமுடியவில்லை.
எனினும் நாம் இது குறித்து தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது சுதுமலை அம்மன் கோயிலில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும்,
குறித்த ஆலயத்தின் மூலஸ்தானம், கோபுரம் மற்றும் தேர்முட்டி ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைய கட்டடங்கள் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உரிய கட்டட அனுமதியின்றி ஆலயக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறி, அவற்றை இடித்து அகற்றுமாறு கோரி முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் என தெரிவித்து சில இணையதள செய்திகள் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.
எனவே நாம் சுதுமலை கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கு தொடர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தோம்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன்
இந்த சம்பவத்தில் பிரதானமாக யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அவர்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்று அனுமதியின்றி கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் ஆலயத்தை இடிக்குமாறு உண்மையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளாரா என்பதனை அறிய நாம் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது தான் இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்பதனை எம்மிடம் குறிப்பிட்டார். அவ்வாறெனில் இந்த சம்பவத்தில் மணிவண்ணன் வழக்குத்தாக்ல் செய்ததாக பகிரப்படும் பதிவுகளுக்கு காரணம் என் என்பது தொடர்பிலும் நாம் அவரிடம் வினவினோம்.
சுதுமலை அம்மன் ஆலயம் என்பது பல வரலாற்று சிறப்புகளை கொண்ட ஒரு ஆலயமாகும். அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த கோயிலின் ஒரு சில பகுதிகள் கடந்த ஆண்டு செப்படம்பர் மாதம் உடைக்கப்பட்டு அங்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்காக வழக்கு தொடர வேண்டும் எனவும் சுதுமலை கோயிலை அண்டிய பிரதேசத்தில் வாழும் ஒரு பகுதி மக்கள் வந்து தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிடடார்.
இதனையடுத்து கோயில் கட்டிங்கள் இடிக்கப்படுவது கோயில் நிர்வாகத்தினால் எடுக்கப்படும் முடிவு என்பதனால் அது தொடர்பில் வழக்கு தொடர முடியாது எனவும் ஆனால் புதிதாக கட்டப்படும் கட்டடம் உரிய அனுமதியை பெற்று கட்டப்படவில்லை என்பதனால் அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் எனவும் குறித்த மக்களிடம் மணிவண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பாக கோயிலின் கோபுரம், தேர்முட்டி ஆகியவை இன்னும் இடிக்கப்படவில்லை. ஆகவே இனியும் அவை இடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதுவே இந்த மக்களின் கோரிக்கையாக அமைந்திருந்தது. ஆகவே நான் வழக்கு தொடர்ந்த மக்களின் சாரபில் ஆஜரான ஒரு சட்டத்தரணி மாத்திரமே தவிர, நான் அந்த வழக்கை தொடர்ந்ததாக பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மேற்குறிப்பிட்ட பதிவில் தெரிவித்ததனைப் போன்று தையிட்டி விகாரை குறித்து வினவிய போது, தையிட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக உரிமையாளர்கள் முன்வந்து வழக்குத் தாக்கல் செய்யத் தயாராக இருந்தால், அந்த வழக்கை முன்னெடுக்கத் தானும் தயாராக உள்ளதாக மணிவண்ணன் அவர்கள் குறிப்பிட்டார்.
மானிப்பாய் பிரதேச சபை
எனவே இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் அதாவது உண்மையில் சுதுமலை கோயிலில் கட்டப்படும் புதிய கட்டடங்களுக்கான உரிய அனுமதி கிடைக்கப்பெற்றதா மேலும் பழைய கட்டடம் ஒன்றை இடிப்பதற்கு அனுமதி பெற வேண்டுமா என்பது தொடர்பில் நாம் மானிப்பாய் பிரதேச சபையை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது சுதுமலை கோயில் நிர்வாகம் புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி கோரி தற்போது விண்ணப்பித்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆகவே இன்னும் அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர்கள் புதிய கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பது எப்படி எனவும் பழைய கட்டடத்தை இடிப்பதற்கு அனுமதி பெற வேண்டுமா என்பது தொடர்பிலும் நாம் அவர்களிடம் தொடர்ந்து வினவினோம்.
இதன்போது ஆமாம் கோயில் நிர்வாகம் புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்காக அனுமதி கோரியிருந்தாலும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்கள் தற்போது அந்த நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதென்பது அனுமதியற்ற செயல் என அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் ஒரு கட்டத்தை இடிப்பதற்கு பிரத்தியேக அனுமதிகள் கோரப்படுவதில்லை, காரணம் பழைய கட்டடம் இருக்கும் இடத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கே அனுமதிகள் கட்டாயம் கோரப்பட வேண்டும் ஆகவே அவ்வாறு அனுமதி வழங்கப்படும் பட்டசத்தில் பழைய கட்டடத்தை இடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். காரணம் அப்போது தான் அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட முடியும். ஆனால் பழைய கட்டடம் அமைந்துள்ள இடத்தினில் புதிய கட்டடம் ஒன்றை அமைக்க அனுமதி கோரும் பட்டசத்தில் அதற்கான சரியான ஆதாரங்களை உரிய தரப்பினர் சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும் எனவும் மானிப்பாய் பிரதேச சபை தெரிவித்தது.
சுதுமலை கோயில் நிர்வாகம்
நாம் இந்த சம்பவம் தொடர்பில் சுதுமலை கோயில் நிர்வாகத்தை தொடர்புகொண்ட போது அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை ஆகவே அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் தகவல்களுடன் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
நாம் இந்த சம்பவம் தொடர்பில் சுதுமலை பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம். இதன்போது அனுமதியற்று கட்டப்பட்ட சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், இந்த கோயிலை இடித்து அங்கு புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்பது உண்மை அந்த கட்டுமானத்திற்கு எதிராக அப்பிரதேசத்தின் சில மக்களால் தொடரப்பட்ட வழக்கின் சட்டத்தரணியாக அந்த மக்கள் சார்பில் மணிவண்ணன் அவர்கள் ஆஜராகினார். என்பதுதான் உண்மையே தவிர அந்த வழக்கை மணிவண்ணன் தான் தாக்கல் செய்தார் என பகிரப்படும் தகவல் தவறானது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சுதுமலை பிரதேச மக்கள்
எனவே இந்த சம்பவம் தொடர்பில் நாம் சுதுமலை பிரதேச மக்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது “ நீங்கள் கேட்பது போல இந்த வழக்கை மணிவண்ணன் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. அந்த பிரதேசத்தின் சில மக்கள் தான் எஞ்சியிரும் கோயிலின் கோபுரம் மற்றும் தேர்முட்டி ஆகியன இனியும் இடிக்கப்படக் கூடாது என இந்த வழக்கை தாக்கல் செய்தனர். இந்த கோயில் எங்களுக்கு பல வரலாற்று சிறப்புமிக்க நினைவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது ஆகவே இது இடிக்கப்படக்கூடாது. மேலும் தற்போது இடிக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்களும் உரிய அனுமதியை பெற்று நடப்பவை அல்ல” என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட அறிவிப்பின் பிரதி எமக்கு பிரதேச மக்கள் ஊடாக கிடைக்கப்பெற்றது. அதில் மனுதாரர்களின் பெயர்களில் மணிவண்ணன் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. குறித்த பிரதி பின்வருமாறு

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அனுமதியற்று கட்டப்பட்ட சுதுமலை அம்மன் கோயிலை இடிக்குமாறு யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது. மாறாக உரிய அனுமதிகள் பெறாமல் ஆரம்பிக்கப்பட்ட கோயில் கட்டட நிர்மாணப்பணிகளுக்கு எதிராகவும் எஞ்சியுள்ள கோயில் கோபுரம் மற்றும் தேர்முட்டி ஆகியவற்றை இனியும் இடிக்க கூடாது என அந்த பிரதேச மக்களாலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் குறித்த மக்களுக்கு சார்பாகவே சட்டத்தரணியான மணிவண்ணன் அவர்கள் ஆஜராகியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


