நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்தா?

Misleading மருத்துவம்

INTRO :
நூறு ரூபாயில் புற்றுநோயை தடுத்த உதவும் என சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” புற்று நோய் வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .

● சோற்றுக் கற்றாழை 400 கிராம்

● சுத்தமான தேன் 500 கிராம்

● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

■ தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

■ மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே….! “ என கடந்த வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி (10.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இது குறித்து எமது இந்திய தமிழ் பிரிவினர்  மூலிகை ஆராய்ச்சியாளர் எம்.மரிய பெல்சின் அவர்களை தொடர்புக்கொண்டு வினவியபோது, சிறுது கால அவகாசம் கேட்டு ஆய்வு செய்து இது தவறான தகவல் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘’ஓரளவுக்கு இந்த வைத்தியக் குறிப்பில் உண்மை இருக்கும் என நினைத்தேன். ஆனால், இதில் துளி கூட உண்மையில்லை. இது மக்களை தவறாக வழிநடத்தக்கூடியதாகும். இது முற்றிலும் தவறான தகவல். இதில் கூறப்படும் சிகிச்சை முறையை பின்பற்றி புற்றுநோய் குணமானது என எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் கிடைக்கவில்லை. அதனால், இதனை முழுவதுமாக நம்பி மக்கள் உயிரை பறிகொடுக்காமல், உரிய மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே நலம்,’’ எனக் குறிப்பிட்டார்.

நாம் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள  fr romano zago என்பவர் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட போது, இவர் எழுதிய Cancer Can Be Cured என்ற புத்தகம் ஒன்று அமெசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு உள்ளது.

fr romano zago வின் குறிப்புக்களை பயன்படுத்தி மருத்தினை தயாரிக்கும் விதம் குறித்து Saint Max Media ஒரு வீடியோ பதிவினையும் வெளியிட்டுள்ளது.

அதில் இந்த மருத்து குறித்து அவர்கள் எவ்விதமான கருத்தினையும் வெளியிடவில்லை எனவும், இந்த மருத்து அந்த புத்தகத்தினை எழுதியவர்களுக்கே பொறுப்பு என எச்சரிக்கை அறிவிப்பினை இட்டே தொடர்கிறது.

நாம் குறித்த கையேடு தொடர்பில் ஆய்வு செய்தபோது, இவை எல்லாம் சம்பந்தப்பட்ட நாடு அல்லது உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டவை கிடையாது.

வெறும் நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்து என பகிரப்படும் தகவலில் மருந்து தயாரிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்களே தவிர இது இன்னும் உத்தியோகப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்தா?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published.