எதிர்காலம் நிச்சயமற்றது, அடுத்த 3 மாதங்களை கணிக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்தாரா?

Misleading சமூகம் | Society

கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link 

வாக்களித்த மக்களிடம் வரையறை இல்லாமல் வரிகளை அதிகரித்து கஐானாவை நிரப்பி விட்டோம் என எகத்தாளம் இட்ட அநுர அரசு மக்களின் வாழ்வாதார பின்னடைவை மறைத்து தாம் பொருளாதாரத்தில் மீண்டதாக அறிக்கை விட்ட சில மாதங்களின் பின்னர் இருப்பதையும்  ஹேக்கர் களவெடுத்ததாக கூறினர்  கஐானா காலியாக மத்திய வங்கி ஆளுநர் திடீர் சிவப்பு எச்சரிக்கை விடுகிறார்.

என்னடா நடக்கு ??????? என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது கடந்த 2026.05.18 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

அதேபோன்று பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

FB 

Fact Check (உண்மை அறிவோம்)

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மேற்கண்ட பதிவுகளுக்குக் காரணமான பின்னணி என்னவென்று ஆராய்ந்த போது, கடந்த மே 13ஆம் திகதி மத்திய வங்கி அதிகாரிகள் கலந்துகொண்ட நிதிக்குழு கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூற்றே இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதைக் காண முடிந்தது. இந்நிகழ்வு குறித்து பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததுடன், உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற நிலைமை தொடருமானால் நாடு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும், தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்கள் குறித்து கணிப்பது கடினம் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்ததாக பின்வருமாறு செய்திகள் வெளியிட்டிருந்தன. Link | Link 

இருப்பினும், உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டே இவ்வாறு கணிக்கப்பட்டது என்பது மேற்கண்ட சமூக ஊடகப் பதிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக, இது தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மாத்திரம் மத்திய வங்கி ஆளுநரால் செய்யப்பட்ட ஒரு கூற்று என்பதைப் போன்றே அதில் காண்பிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, இது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தின் வீடியோ காட்சியை நோக்கி எமது அவதானத்தைச் செலுத்தினோம்.

நிதிக்குழு கூட்டத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்கள்

இங்கு, பிரதானமாக  2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு மீது கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், உலகளாவிய ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும் அது 5% மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியையும், தனிநபர் வருமான அதிகரிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அத்துடன், பணவியல் கொள்கை உத்திகள், பணவீக்க இலக்குகள் மற்றும் சாதனை அளவிலான தொழிலாளர் பணவனுப்பல்கள் மூலம் வெளிநாட்டுத் துறையை வலுப்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் இதன்போது கலந்துரையாடினர்.

அதேபோன்று, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எண்ணெய் விலைகளில் ஏற்படும் தாக்கம் மற்றும் NDB வங்கியில் இடம்பெற்ற பாரியளவிலான உள்நாட்டு மோசடி உள்ளிட்ட தீர்மானமிக்க சவால்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. மேலும், நிதி ஸ்திரத்தன்மை, வங்கிகளை ஒன்றிணைப்பதன் அவசியம் மற்றும் புதிய திவால்நிலை மற்றும் நொடிப்புநிலை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து குழு மதிப்பீடு செய்ததுடன், நாட்டின் பணவியல் கொள்கை தொடர்பான வெளிப்படைத்தன்மையையும், மத்திய வங்கி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தியது.

எதிர்கால பொருளாதாரம் தொடர்பான மத்திய வங்கியின் கணிப்பு

அதேபோன்று, எதிர்கால பொருளாதாரம் குறித்து இலங்கை மத்திய வங்கி ஆளுநரும், மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சந்திரநாத் அமரசேகர அவர்களும் தெரிவிக்கையில், பிரதானமாக உலகளாவிய ரீதியில் எண்ணெய் இறக்குமதி விலைகள் அதிகரிப்பதன் காரணமாக, நிதி உள்வரவுகளை விட வெளிச்செல்லுகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையின் நடப்புக் கணக்கில் (Current Account) பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், பணவீக்கத்தில் பெரும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது பிரதானமாக செலவு உந்துதல் (Cost-push) பணவீக்கமாகவே இங்கு அடையாளப்படுத்தப்பட்டது.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் அவர்கள் இங்கு கலந்துரையாடும் காலப்பகுதி 2026 நிதி ஆண்டும் அதனையொட்டிய காலப்பகுதியுமாகும். அத்துடன், குறிப்பாக தற்போதைய உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை காரணமாக, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான முன்கணிப்புச் சுற்றுகளுக்குள்ளேயே மத்திய வங்கி இயங்கி வருவதாகவும், எதிர்காலம் என்பது மிகவும் எதிர்பார்க்க முடியாத ஒன்று எனவும் அவர் இங்கு தெரிவித்துள்ளார்.

“எதிர்கால நிலைமை மிகவும் நிச்சயமற்றது. விடயங்கள் மிக வேகமாக மாறி வருவதால்” குறுகிய மூன்று மாத காலத்திற்கு அப்பால் “ஒரு உறுதியான பார்வையுடன் முன்கணிப்பு செய்வது மிகவும் கடினம்” என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிச்சயமற்ற தன்மைக்கு முக்கிய காரணம், தற்போது நிலவும் மத்திய கிழக்கு மோதலின் கணிக்க முடியாத தன்மையும், உலகளாவிய எண்ணெய் விலையில் அதன் கடுமையான தாக்கமும் ஆகும் என மத்திய வங்கி ஆளுநர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். அத்துடன், போர் மூன்று மாதங்களுக்குள் முடிவுக்கு வந்து உலகளாவிய சூழ்நிலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற எதிர்வுகூறலின் அடிப்படையிலேயே மத்திய வங்கியின் ஆரம்ப பொருளாதார முன்கணிப்புகள் கட்டியெழுப்பப்பட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும், உலகளாவிய எண்ணெய் இருப்புக்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாலும், சூழ்நிலைகள் தொடர்ந்து மாறி வருவதாலும், மத்திய வங்கி தனது எதிர்காலக் கணிப்புகளை தொடர்ந்து திருத்த வேண்டியேற்பட்டுள்ளது. இந்த நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும் எரிசக்தி நெருக்கடியின் தீவிரத்தை எடுத்துரைப்பதற்காக, 700 பில்லியன் டொலர் இருப்புக்கள் இருந்தபோதிலும், எண்ணெய் நுகர்வை தீவிரமாக சேமிப்பதற்காக இந்தியாகூட சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை அவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

2026 பெப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்ததன் காரணமாக, 2026ஆம் ஆண்டில் பணவீக்கத்திற்கு எதிராக உருவெடுத்துள்ள சில முக்கிய சவால்கள் குறித்து பின்வருமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

  • உடனடி பணவீக்க அதிகரிப்பு: தற்போது நிலவும் மோதல்கள் ஏற்கனவே பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இதன் காரணமாக 2026 மார்ச் மாதத்தில் 2.2% ஆகக் காணப்பட்ட பணவீக்கம், 2026 ஏப்ரல் மாதத்தில் 5.4% வரை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
  • எரிசக்தி விலைகளால் ஏற்படும் செலவு உந்துதல் நெருக்கடி: இம்மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதுடன், அதிகாரிகள் இதனைப் பிரதானமாக ஒரு செலவு உந்துதல் (Cost-push) பணவீக்கமாகவே விவரிக்கின்றனர்.
  • பணவீக்க இலக்குகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்: தற்போதைய கணிப்புகளின்படி, பணவீக்கத்தை 5% என்ற இலக்கில் பேண எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது மத்திய கிழக்கு போர் தற்காலிகமானதாக அமையும் என்றும், போர் முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என்ற எதிர்வுகூறல்களின்  மீதே முழுமையாகத் தங்கியுள்ளது.
  • நீண்டகால நெருக்கடிக்கான ஆபத்து: எண்ணெய் இருப்புக்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன், இந்நிலைமை செப்டம்பர் மாதத்திற்கு அப்பாலும் தொடருமானால் உலகளாவிய ரீதியில் தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்தை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போரும் உயர் எண்ணெய் விலைகளும் நீண்ட காலத்திற்குத் தொடருமானால், பணவீக்கம் 5% என்ற இலக்கை விட கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடும்.

இருப்பினும், மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு நிச்சயமற்ற தன்மை குறித்து தெரிவித்தது தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்றோ அல்லது நாட்டின் அரசாங்கம் எடுத்த முடிவுகளினால்தான் என்றோ இங்கு குறிப்பிடப்படவில்லை. அடுத்த சில மாதங்கள் குறித்தான கணிப்பீடு, மத்திய கிழக்கின் போர்ச் சூழல் மற்றும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் ஆகிய காரணிகளை மட்டுமே கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இதன்போது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் விளக்கிய மத்திய வங்கி ஆளுநர், தனது கூற்றை தவறான முறையில் அறிக்கை செய்த சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தவறான வழிநடத்தக்கூடிய தலைப்புச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சரியான தகவல்களை வெளியிடுமாறு, கடந்த 18 ஆம் திகதி மத்திய வங்கியில் நடைபெற்ற “வருடாந்த பொருளாதார மீளாய்வு 2025” பற்றிய பொது மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

Facebook 

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எமது ஆய்வின் அடிப்படையில், எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்ததைப் போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில், அவர் மேற்கொண்ட கூற்று சமூக ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்டு வந்துள்ளது என்பதனை அறியமுடிந்துள்ளது.

மேலும் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ள பொருளாதார நிலைமை இலங்கையையும் பாதித்துள்ளது எனவும், இதன் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு அப்பால் பொருளாதாரம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதுடன் அதனை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அல்லது தற்போதைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற முடிவுகளினால் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் வகையிலான எந்தவொரு கூற்றையும் மத்திய வங்கி ஆளுநர் இதன்போது தெரிவிக்கவில்லை என்பதுவும் கண்டறியப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: எதிர்காலம் நிச்சயமற்றது, அடுத்த 3 மாதங்களை கணிக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்தாரா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *