அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்ததாக பகிரப்படும தகவல் உண்மையா? 

False இலங்கை | Sri Lanka

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு அந்த நிவாரணங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அஸ்வெசும நிவாரணத்தை வழங்க வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டுவருகின்றது.

மேலும் இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook  | Archived link 

7 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்பட்டமைக்கு அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாமையே காரணம் என்றும், தேர்தல் நெருங்கும் போது அதனை மீண்டும் வழங்க வேண்டியேற்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் குறிப்பிட்டதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டிருந்தது. 

Fact Check (உண்மை அறிவோம்)

7 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்பட்டமைக்கு அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாமையே காரணம் என்றோ அல்லது தேர்தல் நெருங்கும் போது அதனை மீண்டும் வழங்க வேண்டியேற்படும் என்றோ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் குறிப்பிட்டதாக எந்தவொரு நம்பகமான ஊடக அறிக்கையோ அல்லது உத்தியோகபூர்வ அறிவிப்போ வெளியிடப்படவில்லை.

மேலும், சமீபத்தில் பிமல் ரத்நாயக்க அவர்கள் தெரிவித்த கருத்து குறித்தும் நாங்கள் அவதானம் செலுத்தியதுடன், அவர் இவ்வாறானதொரு கூற்றை விடுத்ததாக கண்டறியப்படவில்லை.

அதேபோன்று, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டமானது நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நலன்புரி நன்மைகள் சபையினாலேயே (Welfare Benefits Board) நடைமுறைப்படுத்தப்படுகிறது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் இதற்குப் பொறுப்பான அமைச்சர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இது தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, பிமல் ரத்நாயக்கவின் ஊடகச் செயலாளரும் இந்தப் பதிவு முற்றிலும் தவறானது என்றும், அமைச்சர் இவ்வாறான எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும பயனாளிகள் ஒரு பகுதியினருக்கு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இருந்து அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படுவது ஏன்?

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இருந்து சுமார் 7 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு அந்த நிவாரணங்களை வழங்குவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த சமூக ஊடகப் பதிவுகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதற்கமைய, இந்த பயனாளிகளுக்கு அந்த நிவாரணங்களை வழங்குவது நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஆராய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.

ஒரு பகுதி பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவுகளை நிறுத்துவதானது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளின் பேரில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு கொள்கை ரீதியான செயல்முறையாகும். அஸ்வெசும என்பது நீண்ட காலத்திற்கான ஒரு நிரந்தர கொடுப்பனவு அல்ல, மாறாக பொருளாதார நிலைமைக்கு ஏற்ப மாறும் ஒரு வழிமுறையாகும். இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் 2023 ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. Link | Link | Link

அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தின் வறுமை மட்டத்தை அளவிடுவதற்காக 6 அளவுகோல்களும் 22 குறிகாட்டிகளும் பயன்படுத்தப்பட்டன. அதற்கமைய பயனாளிகள் 4 பிரதான வகைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இது பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே அறிந்துகொள்ளலாம்.

  • மிகவும் வறுமை: மிக மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் (மாதாந்தம் தலா ரூ. 15,000/- வீதம் 3 ஆண்டுகளுக்கு). பின்னர் இது ரூ. 17,500/- வரை அதிகரிக்கப்பட்டது.
  • வறுமை: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் (மாதாந்தம் தலா ரூ. 8,500/- வீதம் 3 ஆண்டுகளுக்கு). பின்னர் இது ரூ. 10,000/- வரை அதிகரிக்கப்பட்டது.
  • பாதிக்கப்படக்கூடியவர்கள் (அபாயத்திற்குட்பட்டவர்கள்): பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற குடும்பங்கள் (மாதாந்தம் தலா ரூ. 5,000/- வீதம்).
  • இடைக்காலத்தவர்கள் (மாறுதல் நிலையிலுள்ளவர்கள்): தற்காலிகமாக பொருளாதார உதவி தேவைப்படும் குடும்பங்கள் (மாதாந்தம் தலா ரூ. 2,500/- வீதம்).

அஸ்வெசும திட்டமிடப்பட்ட போதே “இடைக்காலத்தவர்கள்” மற்றும் “பாதிக்கப்படக்கூடியவர்கள்” ஆகிய இரு பிரிவினரும் குறுகிய கால நிவாரணப் பிரிவினராகவே அறிமுகப்படுத்தப்பட்டனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் ஸ்திரமடையும் வரை மட்டுமே இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப திட்டங்களின்படி பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான கொடுப்பனவுகள் 2025 டிசம்பருடன் முடிவடையவிருந்த போதிலும், பொருளாதார நிலமையைக் கருத்திற்கொண்டு அது 2026 ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தது. அந்த நீடிக்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைந்துள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளை நிறுத்துவதானது இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது:

  • முதலாம் கட்டம் (2025 ஏப்ரல்): “இடைக்காலத்தவர்கள்” பிரிவின் கீழ் நிவாரணம் பெற்று வந்த 315,000 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் 2025 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிறுத்தப்பட்டன.
  • இரண்டாம் கட்டம் (2026 ஜூன் முதல்): “பாதிக்கப்படக்கூடியவர்கள்” பிரிவில் இருந்த 425,000 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் 2026 ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், தற்போது நலன்புரி நன்மைகள் சபையினால் வருடாந்த தரவு புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மீண்டும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும் குடும்பங்கள் யாரேனும் இருப்பின், அவர்கள் தங்களது விபரங்களை உறுதிப்படுத்துவதன் மூலம் மீண்டும் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நிவாரணம் யாருக்கு தொடர்ச்சியாக கிடைக்கும்?

நலன்புரி நன்மைகள் சபை, இனிவரும் காலங்களில் “அஸ்வசும” நலன்புரி கொடுப்பனவுகளை “வறுமை” மற்றும் “மிகவும் வறுமையான” குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்த கொடுப்பனவுகளை 2027 ஜூன் மாதம் வரை மாத்திரமே வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. Link | Link

மேலும், அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய நலன்புரி நன்மைகள் சபை இது குறித்து விளக்கமளித்திருந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நிமல் கொடவலகெதர (தலைவர், நலன்புரி நன்மைகள் சபை) குறிப்பிடுகையில், அஸ்வசும என்பது பரந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதி மாத்திரமே எனவும், பயனாளர்களை தெரிவு செய்யும் போது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அல்லாமல், தரவு அமைப்பு (Data System) ஒன்றின் ஊடாக புள்ளிகளை வழங்கும் முறையே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல் அஷான் தர்ஷக (உதவி ஆணையாளர், நலன்புரி நன்மைகள் சபை) குறிப்பிடுகையில், அஸ்வசும திட்டத்தின் கீழ் காணப்பட்ட ‘இடைநிலை’ (Transitional) பிரிவினருக்கான கொடுப்பனவுகள் 2024 ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்ததுடன், ‘பாதிப்புக்குள்ளாகக்கூடிய’ (Vulnerable) பிரிவினருக்கான கொடுப்பனவுகள் 2024 ஜூன் மாதத்துடன் நிறைவடைகின்றன. இருப்பினும், இவர்களில் இன்னமும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு, புதிய தகவல்களை இற்றைப்படுத்தும் (Update) செயல்முறையின் ஊடாக மீண்டும் விண்ணப்பித்து தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ‘வறுமை’ மற்றும் ‘மிகவும் வறுமை’ ஆகிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் 2027 ஜூன் வரை தொடர்ச்சியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

 எனவே எமது ஆய்வின் அடிப்படையில், ஏழு லட்சம் குடும்பங்களுக்கான அஸ்வசும கொடுப்பனவு நிறுத்தப்பட்டதற்கு, அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாததே காரணம் என்றும், தேர்தல் நெருங்கும்போது அவர்கள் மீண்டும் அதனைத் தேடி வருவார்கள், அப்போது நாமும் அதனை மீண்டும் வழங்க வேண்டியிருக்கும்” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவு முற்றிலும் தவறானது என்பதுடன்  அஸ்வசும பயனாளர்களின் ஒரு பகுதியினருக்கு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இருந்து அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்துவது என்பது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்ததாக பகிரப்படும தகவல் உண்மையா?

Written By: Suji Shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *