
வெனிசுலா நாட்டில் கடந்த ஜுன் 24 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட மிக சக்கிவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களினால் 2,645 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,600 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
வெனிசுலா நாட்டின் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவு என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த காணொளியை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட காணொளியை நாம் ஆராய்ந்த போது அதில் நான்கு வெவ்வேறு காணொளிகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. ஆகவே நாம் அந்த நான்கு காணொளிகள் தொடர்பிலும் ஆய்வினை மேற்கோண்டோம்.
முதலாவது காட்சி
மேற்குறிப்பிட்ட காணொளியில் உள்ள முதலாவது காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, இந்த காணொளி 2023 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை அறியமுடிந்தது.
மேலும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதியன்று துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி எனக் குறிப்பிட்டு, இந்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இந்த காணொளி 2023 ஆம் ஆண்டு பல்வேறு தளங்களில் பகிரப்பட்டிருந்தது. Link | Link | Link
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதியன்று துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதியன்று துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, சான்லியுர்ஃபா (Sanliurfa) நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து விழும் காட்சி என குறிப்பிட்டு, மேற்குறிப்பிட்ட காணொளி சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான, துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், துருக்கி முழுவதும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சில வினாடிகளில் இடிந்து சிதிலங்களாக மாறின. இந்த நிலநடுக்கத் தொடரின் விளைவாக துருக்கி மற்றும் சிரியாவில் 55,000 இற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.Link | Link
அதனடிப்படையில் சமீபத்தில் வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கத்தின் காணொளி என பகிரப்பட்ட காணொளியானது, 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 ஆம் திகதியன்று துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது தெளிவாகின்றது.
இரண்டாவது காட்சி
இரண்டாவது காட்சி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த காணொளி Youtube பக்கமொன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
2025 மார்ச் 28 அன்று இன்ஸ்டாகிராம் பக்கமொன்றில் பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், CNN செய்திச் சேவைக்கு அமைவாக, பாங்காக்கின் சதுசக் பூங்காவில் (Chatuchak Park) இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் 50 பேர் இருந்ததாக அவசர விபத்து உதவி சேவைகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2025 மார்ச் 28 அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
குறித்த சம்பவமானது, 2025 மார்ச் 28 அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றின் மேல் தளத்தில் இருந்த கிரேன் (Crane) ஒன்று இடிந்து விழும் காட்சி என சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. கட்டிடம் கடுமையாக அதிர்வுக்குள்ளாகியதனால், அதன் மேல் தளத்தில் இருந்த நீச்சல் தடாகத்தின் நீர் கீழே கொட்டும் காட்சியும் அந்த காணொளியில் பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில், அந்த காணொளி சமீபத்தில் வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கத்தின் காணொளி அல்ல என்பதுடன், அது 2025 மார்ச் 28 அன்று மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதும் தெளிவாகிறது.
மூன்றாவது காட்சி
குறித்த காணொளியில் இணைக்கப்பட்ட மூன்றாவது காட்சி தொடர்பிலும் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.இதன்போது கடந்த ஜுன் மாதம் 8 ஆம் திகதி பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பிலிப்பைன்ஸின் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் காட்சி இது என்பதனை அறிய முடிந்தது.
இந்த நிலநடுக்கத்தால் குறித்த பாடசாலை வளாகத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவசரமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பிச் செல்லும் பரபரப்பான காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மின்டனாவோ பகுதியை கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த அனர்த்தத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நான்காவது காட்சி
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இறுதியாக இணைக்கப்பட்ட காணொளி தொடர்பிலும் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது இந்த காணொளியும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதியன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தாய்லாந்தின் பாங்காக் நகரிலும் பலத்த அதிர்வுகள் உணரப்பட்ட சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட காணொளி என்பதளை அறிய முடிந்தது. Link
அதனடிப்படையில் இந்த காணொளியும் வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பதுடன் அது கடந்த 2025 ஆம் ஆண்டு மியன்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாரிய அதிர்வுகள் பாங்காக் நகரிலும் உணரப்பட்டுள்ளது அந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியே இது என்பதுவும் தெளிவாகின்றது.
வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வெனிசுலா நாட்டில் கடந்த 2026 ஜூன் 24 ஆம் திகதியன்று அடுத்தடுத்து இரண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது அந்த நாட்டில் கடந்த 125 ஆண்டுகளில் பதிவான மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.
ஜூன் 24 அன்று வட-மத்திய வெனிசுலாவில் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கியுள்ளன.
- முதலாவது நிலநடுக்கம் (Foreshock): இது ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவானது.
- இரண்டாவது நிலநடுக்கம் (Mainshock): முதலாவது நிலநடுக்கம் ஏற்பட்டு 39 வினாடிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானது. இதுவே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.
- மையப்பகுதி (Epicenter): வெனிசுலாவின் யாராகுய் (Yaracuy) மாநிலத்திலுள்ள வெரோஸ் (Veroes) நகரை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் (Shallow earthquake) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு நிலவரங்கள்
இந்த இரட்டை நிலநடுக்கங்களால் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் (Caracas), யாராகுய், லா குவைரா (La Guaira), அராகுவா (Aragua) மற்றும் மிராண்டா (Miranda) உள்ளிட்ட பல மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
- உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்: தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2,645 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
- காணாமல் போனவர்கள்: பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இன்னும் கண்டறியப்படாமல் உள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- கட்டட சிதைவுகள்: சுமார் 58,000 முதல் 96,000 வரையிலான கட்டடங்கள் (வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட) முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
தற்போதைய நிலைமை மற்றும் மனிதாபிமான உதவி
- நெருக்கடி நிலை: வெனிசுலா நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ளன.
- மருத்துவமனை நெருக்கடி: காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகள் தங்களின் கொள்ளளவை மீறிச் செயல்பட்டு வருகின்றன.
- சர்வதேச உதவி: ஐக்கிய நாடுகள் சபை (UN), யுனிசெப் (UNICEF), உலக சுகாதார அமைப்பு (WHO) போன்ற சர்வதேச அமைப்புகள் வெனிசுலாவுக்கு அவசர கால உணவு, தூய்மையான குடிநீர், தற்காலிக கூடாரங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன. சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நிதி கோரப்பட்டுள்ளது. Link | Link | Link
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த ஜுன் 24 ஆம் திகதி வெனிசுலாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் வெவ்வேறு காலங்களில் வேறு நாடுகளில் இடம்பெற்ற நிலநடுக்கங்களின் போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


