
INTRO :
ஐரோப்பியாவில் அதிக வெப்பத்தினால் உருகிய டிராபிக் சிக்னல்கள் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ ஐரோப்பா வரலாற்றிலேயே காணாத அளவிலான கடுமையான வெப்ப அலை-உருகிய டிராஃபிக் சிக்னல்கள்
#europe #heatwave #trafficsignals #lankasrinews ” என கடந்த மாதம் 29 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (29.06.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
சமூகவலைத்தளங்களில் ‘வரலாறு காணாத வெப்பநிலை…உருகும் உயிர்கள்!’ என இம் மாதம் 03 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (03.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த போக்குவரத்து சமிக்ஞை உருகும் காணொளியை நன்கு அவதானித்த போது மூன்று வெவ்வேறான காணொளிகள் உள்ளடங்கி இருப்பது அவதானிக்க கிடைத்தது. முதலில் அதில் ஒரு காணொளியில் இருந்து சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, குறித்த காணொளியுடன் தொடர்பான புகைப்படங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வின்போது, 2022 ஆம் ஆண்டு ஒரு இணையத்தளம் இது தொடர்பாக மேற்கொண்ட உண்மை கண்டறியும் அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெற்றது. Link
குறித்த ஆய்வறிக்கை கட்டுரையின்படி, இது மிலான் நகரில் உள்ள ‘வியா பெர்காமோ’ (Via Bergamo) மற்றும் ‘வியாலே ரெஜினா மார்கெரிட்டா’ (Viale Regina Margherita) ஆகிய வீதிகள் சந்திக்கும் ஒரு சந்திப்பில் உருகிய நிலையில் இருக்கும் ஒரு போக்குவரத்து சமிக்ஞை விளக்கின் (traffic light) படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி அன்று, குறித்த போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர மோட்டார் சைக்கிள் (scooter) தீப்பற்றி எரிந்தது. அந்த மோட்டார் சைக்கிள் எரிந்ததால் ஏற்பட்ட கடும் வெப்பத்தின் காரணமாகவே இந்த போக்குவரத்து சமிக்ஞை விளக்கு உருகியதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தாலியின் மிலான் நகரில் ‘வியா பெர்காமோ’ (Via Bergamo) மற்றும் ‘வியாலே ரெஜினா மார்கெரிட்டா’ (Viale Regina Margherita) ஆகிய வீதிகள் சந்திக்கும் இடத்தினை கூகுள் மேப் உதவியுடன் கண்டறிந்து ஆய்வு செய்தபோது அதில் உள்ள கட்டிட அமைப்பும் இந்த காணொளியில் உள்ள கட்டிட அமைப்பும் ஒத்திருந்தமை கண்டறியப்பட்டது.
இரண்டாவது வீதி சமிக்ஞை காணொளி

இரண்டாவது காட்சியை கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது உட்படுத்தியபோது, இந்தச் சம்பவம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்தது என கண்டறியப்பட்டது.
வீடியோவில் காணப்படும் அந்தப் போக்குவரத்துக் சமிக்ஞை விளக்கு பெர்லினின் ‘Friedrichshain-Kreuzberg மாவட்டத்தில் உள்ளது என Deutsche Presse-Agentur (DPA) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2025 ஜூன் மாதத்தில், Wilde Renate என்ற டெக்னோ கிளப் (techno club) தீயில் அழிந்ததைத் தொடர்ந்து குறித்த சேதம் நிகழ்ந்துள்ளதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெர்மன் செய்தி நிறுவனங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தமை எமது ஆய்வின் மூலம் நாங்கள் கண்டறிந்தோம். குறித்த காணொளியில் தற்போது இணையத்தில் பகிரப்படும் காணொளியில் பின்னணியில் உள்ள அதே கட்டிடங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
கூகுள் மேப்பில் குறித்த இடத்தினை நாம் ஆய்வு செய்தோம்.
அதில் இருக்கும் வெள்ளை நிற கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள நில அமைப்புக்கள் தற்போது இணையத்தில் வைரலாகும் காணொளியில் உள்ளதும் ஒத்துபோகின்றது. அதற்கமைய இந்த சம்பவம் குறிப்பிட்ட இடத்தில் தான் இடம்பெற்றுள்ளமை இதன் மூலம் உறுதியாகின்றது.
மூன்றாவது வீதி சமிக்ஞை காணொளி

ஜூன் 23 அன்று இத்தாலிய செய்தி ஊடகமான ‘இல் பாக்கோ டா செட்டா’ (Il Baco da Seta) வெளியிட்ட அறிக்கை ஒன்றை நாங்கள் கண்டோம். அதன் படி, அதே நாள் மாலையில் இத்தாலியின் லுகாஞானோ (Lugagnano) பகுதியில் உள்ள பிரதான போக்குவரத்து சிக்னலில் (traffic light) நின்றுகொண்டிருந்த கார் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்களால் இந்தத் தீ விரைவாக அணைக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. செய்தி ஊடகம் இந்த அறிக்கையை வெளியிட்ட நேரத்தில், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
மேலும், இந்த செய்தி ஊடகம் ஜூன் 23 அன்று தனது பேஸ்புக் (Facebook) பக்கத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தது. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் காணப்படும் அதே இடத்தில் தீ விபத்து ஏற்படுவதை அந்த வீடியோவும் காட்டுகிறது.
பூனை வீதியில் ஓடுதல்

வட சீனாவில் ஒரு கடுமையான வெயில் நாளில், கொதிக்கும் தார் வீதியின் குறுக்கே ஒரு பூனை துள்ளிக்குதித்து ஓடிய காட்சியானது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 திகதி அன்று ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஷிஜியாஜுவாங் நகரில் படமாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

ஒரு கடையின் வெளியே வாழைப்பழங்கள் உருகி கீழே விழும் காட்சி

குறித்த வீடியோவின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளி கிடைக்கப்பெற்றது.
அதில் காணப்பட்ட குடையில் பொரிக்கப்பட்டிருந்த வசனத்தினை, Google Translate பயன்படுத்தி,ஆய்வு செய்தபோது இது சீனா மொழியில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். ஆகவே இது இந்த காணொளி ஐரோப்பாவைச் சேர்ந்தது அல்ல என்பது உறுதியானது.
வடிவம் மாறிய பல வாகனங்களின் முகப்புகள்

காணொளியில் காணப்பட்ட காரின் இலக்கத்தகடு மற்றும் காரின் பின்னால் இருந்த கடைகளின் பெயர் பலகையினையும் அவதானித்தபோது, அது ஐரோப்பிய நாட்டினை சேர்ந்தவை அல்ல என தெரியவந்தது.
மேலும் குறிப்பாக, மேலே உள்ள வாகன இலக்கத்தகடு “苏J” என்று தொடங்குகிறது, இது ஜியாங்சு மாகாணத்தின் யான்செங் நகரத்திற்கான உரிமத் தகடு குறியீடாகும். Link
அதிக வெப்பத்தினை தாங்குவதற்கு Potsdamer Platz பகுதியில் இருந்த மக்கள் மீது நீர்த்தாரை வாகனத்தினை பயன்படுத்தி நீரினை தெளித்த சம்பவம் உண்மையாக நடந்துள்ளமை கண்டறியப்பட்டது.
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் ஐரோப்பியாவில் அதிக வெப்பத்தினால் உருகிய டிராபிக் சிக்னல்கள் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

