நெலுவையில் கணவன் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

Insight சமூகம் | Society

உறுதிப்படுத்தப்படாத மற்றும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்த சில தகவல்கள் வெளியிடப்படுவதன் மூலம் சமூகத்தில் பாரிய குழப்பநிலைகள் ஏற்படுகின்றன. அத்தகைய தகவல் வெளியீடுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனினும், மனிதக் கொலை போன்ற  சம்பவங்கள் தொடர்பில் முறையாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பிரதான ஊடகங்களே வெளியிடும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. மேலும், அவை அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்படும் போது, அவை மிகவும் வேகமாக சமூகத்தில் பரவுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

அவ்வாறு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த நெலுவ பகுதியில் இடம்பெற்ற மூன்று குழந்தைகளின் தாயின் கொலை சம்பவம் தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் மனைவியின் #தலையை #அறுத்து எடுத்துச்சென்று,

அவருடன் #தகாத #தொடர்பில் இருந்த நபரின்,வீட்டு #முற்றத்தில் வைத்த கணவன்..!

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, குறித்த பெண்ணுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபர், இன்று வெள்ளிக்கிழமை (20) உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். என தெரிவிக்கப்பட்டு 2026.02.20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சமூக ஊடகங்களில் பலரும் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

மேலும் Hiru News இந்தச் செய்தியை, “மரணத்தில் முடிவடைந்த தகாத உறவு” என்ற தலைப்பின் கீழ், சம்பவத்துடன் தொடர்புடைய காட்சிகளையும் இணைத்து வெளியிட்டிருந்தது.

Facebook

மேலும் தகாத உறவில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவன் என்ற தலைப்பில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையையும் காணமுடிந்தது.Link | Link | Link

பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய காரணம் தகாத உறவு என நம்பி கருத்துகளை வெளியிட்ட பலருக்கிடையில், இது தகாத உறவின் அடிப்படையில் இடம்பெற்ற கொலை அல்ல எனவும் பலர் கருத்து தெரிவித்திருந்தமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

பெரும்பாலான பிரதான ஊடகங்களில் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்ததுடன், தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடக வலைத்தளங்களின் மூலமும் அதனைப் பகிர்ந்திருந்தன.

20ஆம் திகதி அதிகாலை நேரத்தில், குறித்த நபர் (கணவர்) தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும், பின்னர் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மனைவியின் தலையை அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று போட்டதாகவும் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மூன்று குழந்தைகளின் தாயான இந்தப் பெண்ணின் மரணத்திற்குக் காரணம், கணவர் வீட்டிற்கு சென்றபோது மனைவி வேறு ஒருவருடன் இருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. Link | Link 

மேலும், சில ஊடக அறிக்கைகளில் குடும்பத் தகராறு இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த குடும்பத் தகராறிற்குக் காரணம் மனைவியின் தகாத உறவு என இச்செய்தி அறிக்கைகள் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

இதனையடுத்து, பெண்ணின் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து மேலதிகமாக உறுதிப்படுத்திக் கொள்ளவதற்காக பொலிஸ்  ஊடகப் பிரிவு இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்தோம்.

பொலிஸ் அறிக்கையின் படி, ஹப்பிட்டிய பகுதியில் 32 வயதுடைய ஒரு பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்பத் தகராறு தீவிரமடைந்ததே இந்தக் கொலைக்கான காரணமாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குறித்த கொலைக்கு காரணம் மனைவியின் தகாத உறவு என, குறித்த குற்றச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

நெலுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

பிரதான ஊடகங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குறித்த பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்களின் உண்மை பின்னணியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நெலுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவினோம்.

இதன்போது தகாத உறவு காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதாக பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என அவர் எம்மிடம் தெரிவித்தார்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் முன்னாள் இராணுவ உறுப்பினராவார் என்றும், அவர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக அவர் சந்தேகித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும், பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

பிராந்திய ஊடகவியலாளர்

பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பாக பிராந்திய ஊடகவியலாளர் சிலரிடமும் நாம் தகவல் உறுதிப்படுத்தலை மேற்கொண்டோம்.

இதன்போது சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தக் கொலைக்கு காரணம் தகாத உறவு அல்ல என தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவர் முன்னாள் இராணுவ சேவையில் இருந்தவர் என்றும், தற்போது அவர் ஒரு வகையான மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் நபராக இருப்பதாகவும், குறித்த பெண் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தகவல்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

நெலுவ, ஹப்பிட்டிய பிரதேசவாசிகள்

சில பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பெண்ணின் கொலைக்கான காரணம் தகாத உறவா என்பது குறித்து, கிராமவாசிகளிடமிருந்தும் தகவல்களைத் திரட்டினோம்.

இதன்போது ஒரு நபர் தெரிவித்ததாவது, குறித்த பெண்ணை தனக்கு சுமார் 14 ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவர் எந்த நபருடனும் தகாத உறவில் இருக்கவில்லை என்றும் கூறினார். பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல கூட அவரது கணவர் அந்த பெண்ணுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும் கணவரின் துன்புறுத்தல்களின் கீழ் தான் இந்த சகோதரி வாழ்ந்து வந்தார். மூன்று குழந்தைகளுக்காகவே அவர் இந்த துயரத்தை சகித்துக் கொண்டார். எல்லா துன்பங்களையும் அனுபவித்தபின் தான் அவர் உயிரிழந்தார். ஆயிரம் சதவீதம் உறுதியாகச் சொல்லுகிறேன் — இந்த சகோதரிக்கு யாருடனும் தகாத உறவு இருக்கவில்லை.”

இதேவேளை, சந்தேகிக்கப்படும் கணவர் இராணுவ சேவையில் இருந்தபோது காது பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவர் என்றும், பின்னர் அவர் இராணுவ சேவையை விட்டு வெளியேறியதாகவும் மற்றொரு நபர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையானவராக இருந்ததாகவும் கூறப்பட்டது.

“போதைப்பொருள் பயன்படுத்தாத நேரங்களில் மிகவும் நன்றாக நடந்து கொள்வார். ஆனால் சிறிதளவு போதைப்பொருளை எடுத்தாலும் முற்றிலும் மாறிப்போய்விடுவார் — ஒரு பேயைப் போல மாறிவிடுவார். தகாத உறவு பற்றிய கதைகள் முற்றிலும் ஆதாரமற்ற பொய்கள். என கிராமவாசிகள் குறிப்பிட்டனர்.

நெலுவ பிரதேச சபை உறுப்பினர் கனிஷ்க்க எதிரிசிங்க

பிரதேச சபை உறுப்பினர் கனிஸ்க்க எதிரிசிங்கா, கொலைச் சம்பவம் தொடர்பாக நம்முடன் கருத்து தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் கொலை தகாத உறவு காரணமாக நிகழ்ந்ததாக பரவும் அனைத்து தகவல்களும் முழுமையாக பொய் என அவர் குறிப்பிட்டார்.

சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் அவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலமான அவரது தாயாரின் இறுதிச் சடங்குகள் அந்த வீட்டில் நடைபெற்ற போதும், அந்த நேரத்திலும், கொலை செய்யப்பட்ட பெண்ணை வெளியே வர விடாமல், சம்பந்தப்பட்ட நபர் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார் எனவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை கொண்டுசென்று வைக்கப்பட்ட வீட்டின் நபர்

மனைவியைக் கொன்று தலையை விட்டுச் சென்ற வீட்டில் உள்ள நபரும் தனது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் தனது தாய், தந்தை மற்றும் குழந்தையுடன் வீட்டில் வசிப்பதாகவும், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறினார். தனது தாயார் முதலில் முற்றத்தில் தலையைப் பார்த்ததாகவும், முற்றத்தில் ஹெல்மெட் போன்ற ஒன்று இருப்பதாகக் தன்னிடம் கூறியதாகவும் அதன் பின்னரே தான் வந்து பார்த்ததாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும், பின்னர் அந்த நேரத்தில் கிராமத்திற்கு வந்த பொலிஸாரிடமும் தனது முற்றத்தில் ஒரு தலை இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், அந்தப் பெண்ணைக் கொலை செய்த நபர் குடிபோதையில் இருந்த போது  நடந்த ஒரு சிறிய சம்பவத்தின் காரணமாக தன் மீது கோபம் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

நெலுவ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில், 32 வயதுடைய பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்தமைக்கான காரணம் தொடர்பாக ஊடகங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் சரியானவை அல்ல. சில ஊடகங்கள் இந்தக் கொலைக்கு காரணம் பெண்ணின் தகாத உறவு என கூறினாலும், விசாரணை நடத்தும் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் மேலும், மனநலக் கோளாறுக்காக சிகிச்சை பெறும் கணவருக்கு மனைவி குறித்து சில சந்தேகங்கள் இருந்தது உண்மை தான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் தலை வேறு வீட்டின் முற்றத்தில் இருந்தது, கணவரில் மனைவி தொடர்பான சந்தேகம் இருப்பது, அல்லது குடும்பத்தில் சில தகராறுகள் இருந்திருப்பது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, பெண்ணுக்கு தகாத உறவு இருந்ததாகவும், கொலை அந்த உறவுக்காக நடந்ததாகவும் கூறி சமூகத்தில் பகிரப்படுவது எவ்வளவு  நெறிமுறை தவறான செயல் என்பதனை அனைவரும் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியமாகும்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: நெலுவையில் கணவன் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

Written by: Suji Shabeedhran

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *