
விமான நிலையத்தினால் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை என்ற வகையில், சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது. அந்தச் செய்தியில், பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பொது இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாவிக்கொத்துக்களை (Keychains) விற்பனை செய்யும் ஒரு குற்றக் கும்பல் இயங்கி வருவதாகவும், இந்தச் சாவிக்கொத்துக்களுக்குள் உங்கள் வீட்டிற்கோ அல்லது உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கோ பின்தொடர்வதற்கு (Track) உதவக்கூடிய கண்காணிப்பு சிப் (Tracking Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது அதனால் விழிப்புடன் இருக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் அவசரச் செய்தி. விமான நிலையம் அவசர எச்சரிக்கை, தயவுசெய்து படித்துப் பரப்பவும்.
காவல்துறைக்குக் கிடைத்த தகவலின்படி: பொது இடங்கள், விமான நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களில் அழகான சாவிக்கொத்துகளை விற்கும் ஒரு குற்றவாளிகள் கும்பல் உள்ளது. அவர்கள் சில நேரங்களில் தங்களை விற்பனை ஊக்குவிப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு, இலவச சாவிக்கொத்துகளை வழங்குகிறார்கள். இந்த சாவிக்கொத்துகள் எவ்வளவு அழகாகத் தெரிந்தாலும், தயவுசெய்து அவற்றை வாங்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம்.
இந்த சாவிக்கொத்துகளில், உங்களை உங்கள் வீட்டிற்கோ அல்லது உங்கள் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கோ பின்தொடர உதவும் ஒரு கண்காணிப்பு சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாவிக்கொத்துகள் மிகவும் அழகாக இருப்பதால், அவற்றை வாங்காமல் இருக்க முடியாது. அவற்றை ஏற்றுக்கொள்வது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே, அனைவரும் இந்தச் செய்தியைத் தங்கள் சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
அனைவரையும் எச்சரிக்கை செய்யுங்கள்.
நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள்
விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம், இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட்
சர்வதேச விமான நிலையம்
ஏஓசிசி டவர், 4வது தளம், டெர்மினல் 1பி, இந்தியா
அலுவலகம் : +91 22 26156832 / 26264672 / TV4900 / 4600 / 4400
மின்னஞ்சல் : +91 22 66851575
தயவுசெய்து இந்தத் தகவலை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பகிரவும். என தெரிவித்து கடந்த 2026.06.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை இலங்கையிலும் பலர் சமூக ஊடகங்களில் பகரிந்திருந்தமையை காணமுடிந்தது


Fact Check (உண்மை அறிவோம்)
இந்தச் செய்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில், இது நம் நாட்டு விமான நிலைய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இச்செய்தியின் இறுதியில் இந்தியாவின் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMIA) செயல்பாட்டு மையத்தின் (Operations Centre) முகவரியே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதில் வழங்கப்பட்டிருந்த தொலைபேசி எண்களும் இந்தியாவிற்குரிய தொலைபேசி எண்கள் என்பது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், இந்த எச்சரிக்கை செய்தி நம் நாட்டு விமான நிலைய அதிகாரிகளினால் வெளியிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் எழுந்ததால், இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம்.
மேலும், இது பொலிஸாரினால் வெளியிடப்பட்ட ஒரு செய்தி எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததால், அது குறித்தும் நாம் ஆராய்தோம் இவ்வாறானதொரு எச்சரிக்கையை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுப்பதாக இருந்தால், பொலிஸ் ஊடகப் பிரிவினால் அனைத்து ஊடகங்களுக்கும் பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அது அறிவிக்கப்படும். எனினும், எமது ஊடக நிறுவனம் உட்பட ஏனைய ஊடக நிறுவனங்களுக்கும் அவ்வாறானதொரு அறிக்கை கிடைக்கப் பெறாததால், இது குறித்து நாம் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவினோம்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
இதன்போது அத்தகையதொரு அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிடவில்லை என்பதையும், அவ்வாறான எந்தவொரு தகவலோ அல்லது சம்பவமோ பதிவாகவில்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். அத்துடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளும் இவ்வாறான சம்பவம் குறித்து எவ்வித முறைப்பாடுகளையும் பதிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்
பண்டாரநாயக்க விமான நிலைய ஊடகப் பிரிவிடமும் நாம் இது குறித்து வினவினோம். சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்ற எச்சரிக்கையை அவர்கள் பொதுமக்களுக்கோ அல்லது பொலிஸாருக்கோ விடுக்கவில்லை என்பதையும், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அவ்வாறானதொரு சம்பவம் நடந்ததாக எந்தவொரு தகவலோ அல்லது பதிவோ இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும், மேற்கண்ட பதிவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படத்தை நாம் ‘ரிவர்ஸ் இமேஜ்’ தேடலுக்கு உட்படுத்தியபோது, அப்புகைப்படம் Online Marketplace ஒன்றில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் புகைப்படம் என்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறாக சாவிக்கொத்துக்கள் மூலமாக கொள்ளையர் கும்பல் ஒன்று கண்காணிப்பு சிப்களை (Tracking Chips) பொருத்தி விற்பனை செய்வதாகக் கூறப்படும் எந்தவொரு தகவலும் இலங்கையில் இதுவரை பதிவாகதமையாலும், இதில் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தின் (CSMIA) முகவரியும் தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டிருந்ததாலும், இது இந்தியாவில் நடந்த ஒரு சம்பவமா என்பது குறித்தும் நாம் ஆராய்ந்த.
இப்பதிவுகள் போலியானவை என மும்பை விமான நிலையம் தெரிவிப்பு
இந்தச் செய்தியானது இந்திய சமூக வலைத்தளப் பயனாளர்களினால் 2013ஆம் ஆண்டிலிருந்து பகிரப்பட்டு வரும் ஒரு செய்தி என்பது கண்டறியப்பட்டதுடன், மும்பை விமான நிலையத்தினால் (CSMIA) அவ்வாறான எந்தவொரு அவசர எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்தச் செய்தி முற்றிலும் ஒரு வதந்தி (Hoax) என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. Archived Link
அந்தச் செய்தி உண்மையானது எனக் காண்பிப்பதற்காக, மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தின் (AOCC) முகவரியும் தொலைபேசி எண்களும் அதன் கீழே மோசடியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், மும்பை விமான நிலைய அதிகாரிகளினால் பொதுமக்களுக்கு இவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. Link | Link
வதந்தியின் ஆரம்பம் தென்னாப்பிரிக்காவில் தோன்றியது
இந்த வதந்தி முதன்முதலில் 2008ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலேயே ஆரம்பித்தது. அங்குள்ள எரிபொருள் நிறுவனம் ஒன்று, விளம்பர நடவடிக்கைகளுக்காக சூரிய சக்தியால் இயங்கும் (Solar) விசேட ‘LED’ சாவிக்கொத்துக்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கியிருந்தது. பின்னர், அவற்றுக்குள் ‘GPS’ மூலம் பின்தொடரக்கூடிய கண்காணிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த போலிப் பிரசாரம் உலகம் முழுவதும் பரப்பப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை செய்தி முதன்முதலில் 2008 ஆகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலேயே காணப்பட்ட போதிலும், அன்றிலிருந்து இச்செய்தி நாட்டுக்கு நாடு மாற்றியமைக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் (Versions) வெளிவந்துள்ளதாக ‘Snopes’ உண்மைக்கண்டறியும் நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், பொது இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாவிக்கொத்துக்களை (Keychains) விற்பனை செய்யும் ஒரு குற்றக் கும்பல் இயங்கி வருவதாகவும், உங்களை உங்கள் வீட்டிற்கோ அல்லது வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கோ பின்தொடர்வதற்கு (Track) உதவக்கூடிய கண்காணிப்பு சிப் (Tracking Chip) இந்தச் சாவிக்கொத்துக்களுக்குள் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதென, விமான நிலையத்தினால் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை என்றவாறு சமூக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான எந்தவொரு எச்சரிக்கையோ அல்லது சம்பவமோ பதிவாகவில்லை என்பதை இலங்கை பொலிஸாரும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த போலிச் செய்தியானது 2013ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பகிரப்பட்டு வந்த ஒரு போலிச் செய்தியை, மீண்டும் தற்போது நம் நாட்டில் பகிரப்படுகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியானது பொதுமக்களிடையே வீண் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு போலிச் செய்தி என்பதால், இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு வாசகர்களாகிய உங்களிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


