
INTRO :
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டு அது தொடர்பான தெளிவூட்டல் அறிக்கை.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “யாழ் நாவற்குழியில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழா நிகழ்வின் போது நடாத்தப்பட்ட இசை நிகழ்வில் விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களைப் பாடியதாக தெரிவித்து பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த hip hop சங்கி என்ற பெயருடன் TikTok கில் பாடிவரும் ஒரு பாடகரே சாவகச்சேரிப் பகுதியில் வைத்து மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தொியவருகின்றது.
NPP அரசு வந்த பின் இவ்வாறு ஒரு பாடகர் கைது செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும்.” என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (04.06.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த மே 31 திகதியன்று (31.05.2026) சாவகச்சேரி, நவக்குளியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின் போது விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பாடியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சி, உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் ஜூன் 2 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இணையத்தில் பரவி வருகின்றமை போன்று சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சன் குறித்த இசை நிகழ்ச்சியில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக பாடல் பாடினாரா என ஆய்வினை மேற்கொண்டோம்.
இன்ஸ்டெகிராம் பக்கத்தில் அவரால் பகிரப்பட்ட குறித்த இசை பாடப்பட்டதாக பகிரப்பட்ட காணொளி நமக்கு கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய குறித்த காணொளியினை நாம் நங்கு அவதானித்தபோது, அவர் இசை நிகழ்ச்சியில் நேரலையாக பாடிய பாடல் போன்று இது தென்படாமை எமது ஆய்வில் காணக்கிடைத்தது.
வழக்கறிஞர் கேசவன் சயந்தன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சன் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் கேசவன் சயந்தன் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தினை ஊடகத்திற்கு வழங்கியிருந்தார்.
நாவற்குழியில் அமைந்துள்ள ஒரு கோயில் திருவிழாவின் போது நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிய சங்கீத்சன் குறித்த நிகழ்ச்சியில் தான் பாடியபோது எடுக்கப்பட்ட காணொளிக்கு Dubbing முறையில் அவரால் எழுதப்பட்டிருந்த புரட்சிகர பாடலினை இணைத்து சமூகவலைத்தளத்தில் பகிரந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
குறித்த பாடலின் மூலம் விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளுவதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த புரட்சிகர பாடலில் விடுதலைப்புலிகளை போற்றக்கூடிய அல்லது விடுதலைப்புலிகள் என்ற வசனம் கூட அதில் அடங்கவில்லை எனவும், குறித்த அமைப்பின் சின்னங்கள், இலட்சினைகள் மற்றும் பிரபாகரனின் பெயர் எதுவும் அதில் அமையவில்லை என வழக்கறிஞர் சுட்டிகாட்டினார்.
மேலும் பொலிஸார் குறித்த பாடல் வரிகளில் தமிழீழ என்ற சொல் அடங்கியுள்ளதாக தெரிவித்திருந்தமையினால், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) இலங்கை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி இருக்கின்றமையும், தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) என்ற கட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் உருவாக்கிய பாடலில் விடுதலைப் புலிகள் என்ற வார்த்தைக் கூட இடம்பெறவில்லை அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அது விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க கூடும் என தன்னுடைய சமர்ப்பணத்தில் கேள்வி எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆயினும் குறித்த இளைஞர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை (17.06.2026) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத்திற்கு கருத்தினை வெளியிட்டிருந்தார்.
இலங்கை பொலிஸ்
இது தொடர்பாக இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் படி சங்கீத்சன் குறித்த இசை நிகழ்ச்சியில் இரு பாடல்களை பாடியதாகவும் பின்னர் குறித்த காணொளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பினை புகழும் மற்றும் அதனை ஊக்குவிக்கும் விதமாக அவரினால் எடிட் செய்யப்பட்டு சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டதாக அவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை
சொல்லிசை கலைஞனின் கைதினை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவிய செய்தியினை மறுத்து ஊடக அறிக்கையினை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.
குறித்த அறிக்கையில் குடிமக்கள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கு இணங்க பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று இலங்கை பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியதுடன், தவறான சமூக ஊடக தகவல்கள் மூலம் பொதுமக்கள் தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தமை காணக்கிடைத்தது.
சங்கீத்சனின் கைது தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள்.
குறித்த கலைஞனின் கைது தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, நாமல் ராஜபக்ஷ போன்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த கைது தொடர்பாக தங்கள் கருத்தினை ஊடகங்களுக்கும் மற்றும் பாராளுமன்றத்திலும் வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
அவரின் கைது தொடர்பாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த இளைஞனின் கைது தொடர்பாக சர்வதேச அரசியல் களத்திலும் பேசப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதில் குறிப்பாக இந்தியாவில் தமிழக அரசியல்வாதிகளான சீமான் மற்றும் அமைச்சர் வன்னி அரசு இது தொடர்பாக கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் கனடா பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தமது கண்டனத்தினையும் தெரிவித்திருந்தார்.
சங்கீத்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்…!
சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீதனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறீதரன் எம்.பிக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியதோடு சங்கீதனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியதாக சிறீதரன் அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
நமது ஆய்வுக்கு அமைய சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் கைது நடவடிக்கையின் பின்னர் சமூகவலைத்தளங்களில் சில தவறான வழிநடத்தலுக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையோடு, அது குறித்து பொலிஸார் விளக்கியிருந்தமையும் காணக்கிடைத்தது.
ஆகவே உத்தியோகப்பூர்வ ஊடக அறிக்கைகள் பின்பற்றுவதோடு, இலங்கை பொலிஸார் விடுத்த அறிவித்தலின் படி தவறான சமூக ஊடக தகவல்கள் மூலம் பொதுமக்கள் தவறாக வழிநடத்த வேண்டாம் என தெரிவித்து கொள்கின்றோம்.
Updated – 12.06.2026
கடந்த 2 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்ட சொல்லிசை கலைஞன் சங்கீத்சனிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் இற்கு பிணை கோரி நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

