செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் புகைப்படங்களா இவை?

False

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link 

குறித்த பதிவில் புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள்6 பேரை இருக்கையில்வைத்து கொன்றோ அரை உயிருடனோ புதைத்து

ஒரே குழிக்குள் இருந்தபடியே மீட்கப்பட்ட  ஆறு எலும்புக்கூடுகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு நிலவரம் (07/06/2026 நிலவரப்படி):

மூன்றாம் கட்ட அகழாய்வின் 18ஆவது நாளான‌ நேற்று மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள்: 302

முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டவை: 298 என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.06.09 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.


Claim – 2 

Facebook | Archived Link

இந்த பதிவில் செம்மணி கூட்டுப் புதைகுழியில் மீட்கப்பட்ட குழந்தைகளின் பால் போத்தல்களும், பிஞ்சு எலும்புக் கூடுகளும்! 💔

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பட்டி கூட்டுப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கிப் போடும் மிகக் கொடூரமான உண்மைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன!

​மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 20-வது நாளான இன்று, மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் மிகக் கொடுமை என்னவென்றால், மீட்கப்பட்ட 9 எச்சங்களில் 8 எலும்புக்கூடுகள் பிஞ்சு குழந்தைகளின் உடல்கள் என நம்பப்படுகிறது!

​வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமல்லாமல், அந்தப் பிஞ்சுகள் பயன்படுத்திய குழந்தை பால் புட்டிகள் 🍼

​மற்றும் விளையாட்டுப் பொம்மைகள் & பதுமைகள்.

அத்தோடு சிறிய காலணிகள் 👟 பள்ளிப் பைகள் (School Bags) 🎒போன்றவையும் மண்ணுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தரைக்குக் கீழே வெறும் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழத்திலேயே இந்த எச்சங்கள் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் குழந்தைகளாக இருந்திருக்கலாம் என்ற பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது!

​இலங்கையின் இரண்டாவது பெரிய கூட்டுப் புதைகுழியாகக் கருதப்படும் இந்தச் செம்மணித் தளத்தில், இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது! இவற்றில் 311 உடலங்கள் தற்போது முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

​1996-ல் தமிழ்ப் பள்ளி மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, 1998 நீதிமன்ற விசாரணையின் போதுதான், “செம்மணியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன” என்ற அதிர்ச்சித் தகவலை முதன்முதலில் வெளியிட்டார்!

​ஏழு மாத முடக்கத்திற்குப் பிறகு, ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27 முதல் அகழ்வுகள் தீவிரமடைந்துள்ளன.

யாழ்ப்பாண நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில், பிரபல தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண நீதித்துறை மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன!

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன! இருந்தும் அந்த ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்குமா? என தெரிவிப்பட்டு புகைப்படத்துடனான பதிவு 2026.06.09 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த புகைப்படங்களுடனான பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

Claim – 1

புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை இருக்கையில் வைத்து கொன்று புதைத்து ஒரே குழிக்குள் இருந்தபடியே மீட்கப்பட்ட  எலும்புக்கூடுகள் எனவும் செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு 07/06/2026 நிலவரப்படி இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்று வரும் அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த செய்திகளை நாம் ஆராய்ந்த போது இந்த புகைப்படமோ அல்லது தகவலோ எந்த பிரதான ஊடகங்களிலும் வெளியாகியிருக்கவில்லை.

எனவே நாம் இந்த புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம் இதன்போது, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் CNN செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில் இந்த புகைப்படம் வெளியாயிருந்தமையை காணமுடிந்தது.

CNN 


மேலும் குறித்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, ஜெர்மனியின் நியூரிம்பெர்க் (Nuremberg) நகரில் கண்டறியப்பட்ட ஒரு வரலாற்றுக்கால மனிதப் புதைகுழி இது எனவும், இது ஐரோப்பாவில் இதுவரை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொதுப் புதைகுழியாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முறையான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, 2024 மார்ச் மாதம் இது குறித்த உத்தியோகபூர்வ விபரங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு (CNN உட்பட) வெளியிடப்பட்டன.

நியூரிம்பெர்க் நகரில் முதியோர் இல்லம் (Retirement home) ஒன்றைக் கட்டுவதற்காக, கட்டுமானப் பணிகளுக்கு முன்னர் நிலத்தை வழமையாகச் சோதிக்கும் தொல்பொருள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுதான் இந்த வரலாற்றுப் புதைகுழி தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்பன் பரிசோதனைகளின்படி, இவை 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரியவை (குறிப்பாக கி.பி. 1632 – 1633) என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது போரினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல எனவும் ‘முப்பது ஆண்டுகாலப் போர்’ மற்றும் கடுமையான பஞ்சம் காரணமாக நியூரிம்பெர்க் நகரில் ஏற்பட்ட மிக மோசமான ‘பிளேக்’ (Plague) தொற்றுநோய் அலையினால் உயிரிழந்தவர்களின் உடல்களாகும் எனவும் இதன்போது அறியப்பட்டிருந்தது.

மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததால், உடல்களைக் கிருஸ்தவ மத முறைப்படி தனித்தனியாகப் புதைக்க நேரமில்லாமல், பெரிய குழிகளில் (Mass Graves) ஒன்றன் மேல் ஒன்றாக அவசரமாக அடுக்கிக் கூட்டாகப் புதைத்திருக்கலாம் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இது ஐரோப்பாவில் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுக்காலப் பொதுப் புதைகுழியாகக் கருதப்படுகிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியாதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே குறித்த புகைப்படம் இலங்கையின் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட எச்சங்களின் புகைப்படம் அல்ல என்பதனை அறியமுடிகின்றது.

மேலும் நாம் இது குறித்து தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற அகழ்வில் 06 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்த செய்தியில் புதைகுழி ஒன்றினுள் தமிழ் குடும்ப உறுப்பினர்களை ஒரே இருக்கையில் வைத்து கொன்று ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டவர்களின்  6 எலும்புக்கூடுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன் அன்றைய தினம் அந்த அகழ்வுப்பணி தொடர்பான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணி ஊடகங்களுக்கு கருந்து தெரிவிக்கும் போது மேற்குறிப்பிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள அந்த தகவல் தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.

அத்துடன் செம்மணி அகழ்வுப்பணிகள் தொடர்பான புகைப்படங்களை வெளியிடும் ஊடகவியலாளர் குமனன் அவர்களும் இந்த புகைப்படம் செம்மணி அகழ்வுப்எபணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதனை அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கடந்த 2026.06.07 ஆம் திகதி இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் புகைப்படங்களை இங்கே காண்க.

பிராந்திய ஊடகவியலாளர்கள்


மேலும் நாம் இந்த தகவல் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியபோது இந்த புகைப்படம் முற்றிலும் போலியானது என்பதுடன் அவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் எலும்புக்கூடுகள் என்றோ இவர்கள் ஒன்றாக கட்டிவைத்து கொன்று குழியில் போட்டு புதைப்பட்டுள்ளார்கள் என்றோ இதுவரை எந்த விடயங்களும் வெளியாகவில்லை என்பதனை அவர்கள் தெரிவித்தனர்

அதனடிப்படையில் கடந்த 07 ஆம் திகதி செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மூன்றாம் கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 298 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்ற தகவல் உண்மை எனினும் அதுகுறித்து பகிரப்பட்ட புகைப்படம் தவறானது. அது 2024 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியூரிம்பெர்க் (Nuremberg) நகரில் கண்டறியப்பட்ட ஒரு வரலாற்றுக்கால மனிதப் புதைகுழி என்பதுடன் அந்த புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலுப்புக்கூடுகளின் புகைப்படமே அது என்பதுவும் கண்டறியப்பட்டது.

அதேபான்று குறித்த பதிவில் செம்மணியில் 7 ஆம் திகதி கண்டெடுக்கப்பட் 6 மனித எலுப்புக்கூடுகளும் புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை இருக்கையில்வைத்து கொன்று புதைக்கப்பட்டவர்களுடையது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறான எந்த தகவல்களும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதனுடன் பிரதேச ஊடகவியலாளர்களும் அதனை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Claim – 2 

இரண்டாவதாக பகிரப்பட்ட பதிவில் கடந்த 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட அவர்களின் பால் போத்தல்கள் மற்றும் பாடசாலை பைகள் என்பன கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று பகிரப்பட்டிருந்தது.

எனவே நாம் அந்த தகவல் தொடர்பிலும் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். இதன்போது, கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் தொடர்பில் அன்றைய தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது அவர் கடந்த 2026.06.09 ஆம் திகதி அகழ்வின் போது 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அன்றைய தினம் சான்றுப்பொருட்கள் என ஒரு மனித எண்புத் தொகுதியில் இருந்து ஒரு நாணயக்குற்றி மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும்  குழந்தைகளின் பால் போத்தல்கள், விளையாட்டு உபகரணங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிடவில்லை.

மேலும் நாம் இது குறித்து தொடர் ஆய்வினை மேற்கொண்ட போது செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பில் நாளாந்தம் உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் காணொளிகளை வெளியிடும் Lanka Files என்ற எக்ஸ் தளத்தில் கடந்த 2026.06.09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகள் தொடர்பான விபரங்கள் மற்றும் காணொளிகள் என்பன வெளியிடப்பட்டிருந்தது.

அதில் இன்றைய தினம் (2026.06.09)  செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட 9 எலும்புக்கூடுகளில் 8 குழந்தைகளுடையதாகும். இதுவரை மொத்தமாக 327 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 311 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. என தெரிவிக்கப்பட்டு அன்றைய தினம் அகழ்வுப்பணிகளின் போது எடுக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருந்தது.


ஆனால் குறித்த பதவில் குழந்தைகளின் பால் போத்தல்கள் மற்றும் பாடசாலை பைகள் என்பன கண்டெடுக்கப்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. 

மேலும் நாம் ஊடகவியலாளர் குமனனின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கடந்த 9 ஆம் திகதி அகழ்வின் புகைப்படங்களிலும், மேற்குறிப்பிட்ட பதிவில் பகிரப்பட்ட புகைப்படங்கள் எதனையும் காணமுடியவில்லை.


பிராந்திய ஊடகவியலாளர்

நாம் இந்த விடயம் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியபோது, கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளில் 8 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் காணப்பட்டமை உண்மை எனினும், அன்றைய தினம் குழந்தைகளின் பால் போத்தல்களோ, பாடசாலை பைகளோ கண்டெடுக்கப்படவில்லை எனவும் அன்றைய தினம் சான்றுப் பொருளாக ஒரு நாணயக்குற்றி மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் அதுகுறித்த பகிரப்படும் புகைப்படமும் முற்றிலும் தவறானது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


மேற்குறிப்பிட்ட பதிவில் பகிரப்பட்டிருந்த புகைப்படத்தில் ஒரு செயற்கைத்தன்மை காணப்பட்டமையினால் நாம் அந்த புகைப்படத்தை Ai Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வு செய்த போது அந்த புகைப்படம் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகளின் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள்

குறித்த பதிவுகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு இந்த அகழ்வுப் பணிகளின் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகளை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு நாட்களுக்கு ஒருதடைவையே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அனுமதி உள்ளதனால் அவர்களிடமிருந்து தவல்களை பெறமுடியவில்லை. எனினும் அவர்களுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ள நாளில் அவர்களுடன் தொடர்பு கொண்டு அகழ்வுப் பணிகள் குறித்த தகவல்களைப் பெற்று இந்த அறிக்கையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப்பணிகள் தொடர்பான தகவல்கள்

நீதிமன்ற உத்தரவின் பேரில் 2025 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு இந்த அகழ்வுப் பணிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இரு கட்டங்களாக அகழ்வுகள் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கையின் முடிவில் மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. பின்னர் நிதி மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

அதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தால் 21 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் ஏப்ரல் 27 அன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 

ஜூன் மாதத்தில் முன்றாம் கட்டப் பணிகள் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றன. அண்மையத் தரவுகளின்படி (ஜூன் 10ஆம் திகதி நிலவரப்படி), இக்கட்டத்தின் 21 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 339 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 318 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.  

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த அகழ்வு மற்றும் தடயவியல் ஆய்வுகள் மிகவும் முறையான மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 8 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டமை உண்மை எனினும், அன்றைய தினம் குழந்தைகளின் பால் போத்தல்களோ, பாடசாலை பைகளோ கண்டெடுக்கப்படவில்லை என்பதுடன் அதற்காக பகிரப்பட்ட புகைப்பட்டம் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது வரலாற்று ரீதியாகவும், மனித உரிமைப் பின்னணியிலும் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விடயமாகும். இத்தகைய சூழலில், இந்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பழைய புகைப்படங்கள், தொடர்பற்ற பிற நாட்டு புதைகுழிகளின் காட்சிகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் தவறான புரிதல்களையும் ஏற்படுத்துகின்றன.

எனவே  நீதிமன்ற உத்தரவின் கீழ் நடைபெறும் இந்த அகழ்வுப் பணிகள் குறித்து, களத்தில் இருக்கும் உத்தியோகபூர்வ தடயவியல் நிபுணர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள் அல்லது யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் வழங்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மாத்திரமே நம்பகமான ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும். உணர்ச்சிகரமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட போலித் தகவல்களைத் தவிர்த்து, அறிவியல் பூர்வமான மற்றும் சட்டப்பூர்வமான இறுதி அறிக்கைகள் வெளியாகும் வரை பொறுமை காப்பதே சிறந்தது செயலாகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் புகைப்படங்களா இவை?

Written By: Suji Shabeedhran

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *