கண்ணாடி போத்தலில் நீர் ஊற்றி அதை நேரடி  சூரிய ஒளியில் வைத்து குடித்தால்  உடலுக்கு தேவையான விட்டமின் D கிடைக்குமா?

Misleading சமூகம் | Society

மருத்துவம் மற்றும் நோய்களுக்கான வீட்டு வைத்தியங்கள் தொடர்பில் அவ்வப்போது சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் தற்போது விட்டமின் D குறைப்பாடு உள்ளவர்கள் கண்ணாடி போத்தலில் தண்ணீர் நிரப்பி அதனை ஒருநாள் முழுவதும் சூரிய ஒளியில் வைத்திருந்து பிறகு நாம் அந்த நீரை குடித்தால் எமது உடலுக்கு தேவையான விடட்டமின் D கிடைக்கும் என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில்  பகிரப்பட்டிருந்தது.

எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

குறித்த பதிவில் ஒரு கண்ணாடி போத்தலில் முக்கால் பாதி தண்ணீர் நிரப்பி அந்த போத்தலை ஒரு மரப்பலகையின் மீது வைத்து அந்த போத்தல் ஒரு நாள் முழுவதும் சூரிய ஒளியில் நேரடியாக இருக்க வேண்டும் அதன் பின்னர் மாலையில் சூரிய ஒளியினால் ஆற்றல் பெற்ற அந்த தண்ணீரை அருந்தினால் உங்களுக்கு தேவையான விட்டமின் D எளிதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட ஒரு காணொளி 2026.06.6 ஆம் திகதிபகிரப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சூரிய ஒளியிலிருந்து நேரடியாக விட்டமின் D எமது உடலுக்கு கிடைக்கப்பெறுகின்றது என்ற தகவலை நாம் இந்த காணொளியில் மாத்திரம் அல்ல பொதுவாகவே பலராலும் தெரிவிக்கப்படுகின்றமையை அறிந்திருப்போம். இருப்பினும் இந்த தகவல் உண்மையா என்பதனை அறிய நாம் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல உத்தியோகபூர்வ ஆய்வறிக்கைகளின் ஊடாக தேடுதலை மேற்கொண்டோம்.


இதன்போது Harvard health publishing வெளியிட்ட தகவலின் படி சூரியனின் புற ஊதா B கதிர்கள் மனிதனில் தோலில் படும்போது, ​​அது மனித தோலில் உள்ள ஒரு வேதிப்பொருளை விட்டமின்  D3 ஆக மாற்றுகிறது. வைட்டமின் D3 நமது கல்லீரலில் இருந்து சிறுநீரகங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அது, உடலில் பயன்படுத்தக்கூடிய விட்டமின் D-யின் செயல்திறன் மிக்க வடிவமாக மாறுகிறது. என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தகவலில் சூரிய ஒளியிலிருந்து நேரடியாக நமக்கு விட்டமின் D கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை

மேலும் சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் பி (UVB) கதிர்கள் மனித உடலின் தோலில் நேரடியாகப் படும்போதுதான் உடல் விட்டமின் D யை உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த UVB கதிர்கள் கண்ணாடி வழியாக ஊடுருவாது. எனவே, ஒரு கண்ணாடி போத்தலுக்குள்  இருக்கும் தண்ணீர் சூரிய ஒளியின் மூலம் விட்டமின் Dயை உருவாக்கும் ஆற்றல் கிடைக்க வாய்ப்பில்லை. Link

விட்டமின் D என்பது கொழுப்பில் கரையக்கூடிய (fat-soluble) ஒரு சத்தாகும். இது பொதுவாக கொழுப்புள்ள மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு போன்ற உணவுகளில் மாத்திரமே  இயற்கையாகக் காணப்படுகிறது. இது நீரில் கரையக்கூடியது அல்ல என்பதால், சூரிய ஒளியில் வைக்கப்பட்ட தண்ணீரில் விட்டமின் D இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது.

விட்டமின் D ஒரு வேதியியல் மாற்றத்தின் மூலம் உடலில் உருவாகிறது. சூரிய ஒளியின் ஆற்றல் தோலில் உள்ள ‘7-Dehydrocholesterol ‘ என்ற பொருளை விட்டமின்  D 3 ஆக மாற்றுகிறது, பின்னர் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் செயல்படும் வடிவமாக மாற்றப்படுகிறது. இந்த செயல்முறை மனித உடலில் மட்டுமே நடக்கும், தண்ணீரில் நடக்காது. Link

சூரிய ஒளி மனித உடலில் பட்டவுடன் அது எவ்வாறு விட்டமின் D ஆக மாறுகிறது என்பதன் பட விளக்கத்தினை கீழே காணலாம்

NIH

அதேபோன்று தண்ணீரில் விட்டமின் D யை உருவாக்கும் மூலக்கூறுகள் எதுவும் இல்லை. சூரிய ஒளி தண்ணீரின் மீது எவ்வளவு நேரம் பட்டாலும், நீரினால் விட்டமின் D யை உருவாக்க முடியும்  அல்லது சூரிய ஒளியில் இருந்து அதை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்பதற்கான எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை.

ஆனால் அறிவியலில் சூரிய ஒளியை தண்ணீருக்குப் பயன்படுத்தும் ஒரு முறை உள்ளது அதனை Solar Water Disinfection என்று அழைப்பார்கள்.

தூய்மையான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தலில் தண்ணீரை ஊற்றி 6 மணித்தியாலங்கள் சூரிய ஒளியில் வைப்பதன் மூலம், அதிலுள்ள பக்டீரியா மற்றும் வைரஸ்கள் அழிக்கப்படுமே தவிர, அந்தத் தண்ணீரில் விட்டமின் டி அல்லது தாதுக்கள் அதிகரிக்காது. இது வெறும் நீரைச் சுத்திகரிக்கும் ஒரு எளிய முறை மாத்திரமேயாகும். 

வயம்ப பல்கலைக்கலகத்தின் பயன்பாட்டு ஊட்டச்சத்து துறையின் பேராசிரியர் ஆனந்த சந்திரசேகர

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பில் நாம் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ள வயம்ப பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு ஊட்டச்சத்து துறையின் பேராசிரியர் ஆனந்த சந்திரசேகரவை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது இந்த தகவல் முற்றிலும் ஒரு வேடிக்கையான விடயம் என அவர் குறிப்பிட்டார். அத்தோடு சூரிய ஒளியிலிருந்து நேரடியாக ஒருபோது நமது உடலுக்கு விட்டமின் D கிடைப்பதில்லை, காரணம் சூரிய ஒளியில் விட்டமின் D இல்லை. விட்டமின் D என்பது எமது உடலுக்குள் நடக்கும் செயற்பாட்டின் மூலமே உருவாகிறது. அதாவது  சூரிய ஒளியில் உள்ள UVB கதிர்கள் நமது தோலில் நேரடியாகப் படும்போது, தோலில் உள்ள ‘7-Dehydrocholesterol’ என்ற கொழுப்புப் பொருள்  விட்டமின் D ஆக  மாறத் தொடங்குகிறது. பின்னர் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மூலம் உடலுக்குப் பயன்படும்  விட்டமின் D ஆக  மாற்றமடைகிறது என பேராசிரியர் தெளிவுபடுத்தினார். 

ஆனால் இவ்வாறு தண்ணீரை சூரிய ஒளியில் நேரடியாக வைத்து குடிப்பதன் மூலம் எமக்கு  விட்டமின் D கிடைக்கும் என்பது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

அதேபோன்று மேற்குறிப்பிட்ட காணொளியில் ஒரு பெண் வைத்தியரே அந்த தகவலை தெரிவப்பதனைப் போன்று உள்ளது. இதன் காரணமாகவும் இந்த தகவல் உண்மை என பலர் நம்பி அதனை பகிர்ந்துள்ளனர். ஆகவே நாம் குறித்த காணொளியை Ai Detective Tool மூலம் ஆய்வு செய்தபோது அந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது

விட்டமின் D குறைபாட்டைப் போக்க சரியான வழிகள்:

காலை 10 மணி முதல் மதியம் 3 மணிக்குள் வாரத்திற்கு 2-3 நாட்கள், 15-30 நிமிடங்கள் முகத்திலும், கைகளிலும் நேரடியாக (கண்ணாடி ஜன்னல் வழியே அல்லாமல்) சூரிய ஒளி படுமாறு இருக்கும் போது, சூரிய ஒளியில் உள்ள UVB கதிர்கள் நமது தோலில் படும்போது நமது உடல் தானாகவே விட்டமின் D யை உடலுக்குள் உற்பத்தி செய்கிறது 

முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள், மீன் (சல்மன், மத்தி), மற்றும் விட்டமின் D செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள்.

குறைபாடு அதிகமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் Vitamin D3 Supplements களை உட்கொள்வதே பாதுகாப்பான மற்றும் அறிவியல் பூர்வமான வழியாகும்.

 எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கண்ணாடி போத்தலில் தண்ணீர் ஊற்றி அதனை நாள் முழுவதும் சூரிய ஒளியில் வைத்து பின்னர் அந்த நீரை குடித்தால் நமது உடலுக்கு தேவையான விட்டமின் D கிடைக்கும் என்பது முற்றிலும் தவறான தகவல். மேலும் அதற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று விட்டமின் D என்பது எமது உடலுக்குள் நடக்கும் செயற்பாட்டின் மூலமே உருவாகிறது. அதாவது  சூரிய ஒளியில் உள்ள UVB கதிர்கள் நமது தோலில் நேரடியாகப் படும்போது, தோலில் உள்ள ‘7-Dehydrocholesterol’ என்ற கொழுப்புப் பொருள்  விட்டமின் D ஆக மாறத் தொடங்குகிறது. பின்னர் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மூலம் உடலுக்குப் பயன்படும்  விட்டமின் D ஆக  மாற்றமடைகிறது என்பது வயம்ப பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு ஊட்டச்சத்து துறையின் பேராசிரியர் ஆனந்த சந்திரசேகர மற்றும் அது குறித்த அறிவியல் ஆய்வறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், விட்டமின் D எமது உடலுக்கு கிடைப்பதற்கு மாத்திரைகள் மற்றும் சில உணவுகளும் உதவும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: கண்ணாடி போத்தலில் நீர் ஊற்றி அதை நேரடி சூரிய ஒளியில் வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான விட்டமின் D கிடைக்குமா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *