
மாத்தறை, திக்வெல பிரதேசத்தில் அண்ணனால் தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து செய்தியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே குறித்த சம்பவம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் தம்பியை கதற கதற வெட்டிசாய்த்த தமயன் – இலங்கையில் சம்பவம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.06.07 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் இந்த தலைப்பு தொடர்பான முழுமையான செய்தியை கமென்டில் கொடுக்கப்பட்டுள்ள லின்க் ஊடாக சென்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே நாம் அந்த லின்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்ட செய்தியை முழுமையா பார்த்தபோது, அதில் மாத்தறை, திக்வெல பகுதியில் பணக் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக அண்ணன் ஒருவர் தனது தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில், 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின்படி, 45 வயதுடைய அண்ணன் மதுபோதையில் தனது தம்பியின் வீட்டிற்குள் கூரிய ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் பின்னர் அது கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதன்போது, சந்தேகநபர் தனது தம்பியை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
சம்பவத்தையடுத்து, நான்கு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சந்தேகநபரான அண்ணனை பொலிஸார் கைது செய்துள்ளனர். என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதற்கட்டமாக இந்த செய்தி பிரதான ஊடகங்களில் வெளிவந்துள்ளதா என்பதனை ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் எமது ஆய்வில் திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது. ஆனால் தற்போது பகிரப்படும் செய்தியானது கடந்த 2026.06.06 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டே பகிரப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அண்மையில் அவ்வாறான சம்பவம் தொடர்பில் எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை என்பது உறுதியானது.
திக்வெல பொலிஸ் நிலையம்
ஆகவே மேற்குறிப்பிட்ட செய்தியில் உள்ள குறித்த சம்பவம் திக்வெல பிரதேசத்தில் இடம்பெற்றதா என்பதனை அறிய நாம் திக்வெல பொலிஸாரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது அவ்வாறான எந்த கொலை சம்பவமும் அண்மையில் திக்வெல பிரதேசத்தில் இடம்பெறவில்லை என அவர்கள் குறிப்பிட்டினர்
பொலிஸ் ஊடகப் பிரிவு
எனவே இது குறித்து மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ள நாம் பொலிஸ் ஊடகப்பிரிவையும் தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது திக்வெல பிரதேசத்தில் இவ்வாறான கொலை சம்பவம் எதுவும் இடம்பெற்றதாக பதிவாகவில்லை எனவும், மாத்தறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இவ்வாறான
சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பிரந்திய ஊடகவியலாளர்கள்
மேலும் மாத்தறை, திக்வெல பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் எதுவும் நடந்துள்ளதா என்பது குறித்து நாம் திக்வெல பிரதேச ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது அண்மையில் அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் தமக்கு தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என அவர்கள் குறிப்பிட்டதுடன் அவ்வாறான சம்பவம் உண்மையில் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் திக்வெல பொலிஸாரும் ஊடகவியலாளர்களாகிய எங்களுக்கு தெரிவித்திருப்பார்கள் ஆனால் அவ்வாறு பொலிஸ் தரப்பிலும் எந்த தகவல்களும் எமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் இதுவொரு போலியான தகவல் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மாத்தறை, திக்வெல பிரதேசத்தில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் என தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது என்பதுடன் அவ்வாறான எந்த சம்பவமும் அண்மையில் திக்வெல பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்பதனையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


