
சமூக ஊடகங்களில் உணர்வுபூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் பயனர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு புகைப்படம் அல்லது காணொளியை மையமாகக் கொண்டு இத்தகைய பதிவுகள் பரவுகின்றன. ஆனால் அவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களா என்பதை பலரும் கவனிக்காமல் இருக்கின்றனர்.
அவ்வாறு இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஏழு நாய்கள் உரிமையாளர்களை தேடிச்சென்றதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட காணொளி தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வு பின்வருமாறு.
தகவலின் விவரம் (What is the claim):
இறைச்சிக்காக கடத்தப்பட்ட நாய்கள் 17 KM ஓடி தப்பி உலகத்தை வியப்பில் ஆழ்த்திய தகவல் என தெரிவிக்து குறித்த காணொளி 2026.03.26 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
சில சர்வதேச ஊடகங்களிலும், அதேபோல் உள்நாட்டு ஆங்கில ஊடகங்களிலும் இந்த தகவல் தொடர்பான செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.

Fact Check (உண்மை அறிவோம்)
காணொளியின் தொடக்கம்
சீன ஊடகங்களில் வெளியான தகவலின்படி, “லூ” (Lu) என அடையாளம் காணப்பட்ட ஒருவர், சீனாவின் ஜிலின் (Jilin) மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது இந்த நாய்களின் கூட்டத்தை முதன்முதலில் கண்டு, அந்தக் காட்சியை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
மேலும், சீன ஊடகங்கள் தெரிவித்ததன் அடிப்படையில், இந்த வீடியோவை “ஃபெங் வேய்” (Feng Wei) என்ற Content creator பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. சீனாவின் டிக்டாக் (TikTok) என அறியப்படும் டோயின் (Douyin) தளத்தில் அவர் வெளியிட்ட இந்த நாய்களின் வீடியோ, 1.6 இலட்சத்திற்கும் மேற்பட்ட likes களை பெற்றுள்ளது.
சீனாவின் ‘City Evening News’பத்திரிகையில் வெளியான செய்தி அறிக்கையின்படி, ஃபெங் உடன் பயணம் செய்த ஒருவரே முதலில் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும், அதற்கு ஆரம்பத்தில் அதிக கவனம் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபர் “லூ” ஆக இருக்கக்கூடும் என கருதப்படுகின்றது. எனினும், ஃபெங் உடன் பயணம் செய்தவர் யார் என்பது பற்றிய சரியான தகவல்கள் அந்த கட்டுரைகளில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
பின்னர், ஃபெங் தாமும் இந்த வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி இசையை (automatically selected background music) சேர்த்திருந்தார். அந்த இசை எதிர்பாராத விதமாக காட்சிகளுடன் மிகவும் பொருந்தியதால், அந்த வீடியோ மிக வேகமாக பிரபலமடைந்தது.
மார்ச் 20 அன்று வெளியான Dahe Daily பத்திரிகை செய்தி அறிக்கையின் படி, “லூ” ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது, மார்ச் 15 அன்று இரவு 7 மணியளவில் தான் இந்த நாய்களை பார்த்ததாகவும். அவை இருந்த கடினமான நிலை, அவற்றின் நடத்தை என்பவற்றை கருத்தில் கொண்டு, அவை தெருநாய்கள் (strays) அல்ல எனவும் காணாமல் போன வளர்ப்பு நாய்களாக இருக்கக்கூடும் எனவும் தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“அவை உண்மையிலேயே செய்வதறியாது நிற்கும் சகோதரர்கள் போலத் தோன்றின. அதே நேரத்தில், அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பு (formation) இருந்தது. ஜேர்மன் ஷெப்பர்ட் நாய் நடுவில் இருந்தது; சிறிய நாய்கள் அதனைச் சுற்றி இருந்தன,” என்று லூ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஊகம் உண்மைத் தகவல் போல பரவியுள்ளது
Dahe Daily பத்திரிகை அறிக்கையின்படி, இந்த நாய்கள் வாகனங்களில் மோதிக் கொள்ளக்கூடும் அல்லது அவற்றைத் தவிர்க்க முயலும் ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகக்கூடும் என்ற அச்சத்தினால், லூ உதவி கோரி இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ மிகவும் பிரபலமானதற்குப் பிறகு, இந்த நாய்கள், நாய்களை எடுத்துச் செல்லும் ஒரு வாகனத்திலிருந்து தப்பித்து வந்திருக்கலாம் என லூ கருத்து தெரிவித்ததாகவும் Dahe Daily செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், நாய்கள் ஏதாவது ஒரு வாகனம் அல்லது கூண்டிலிருந்து தப்பிச் செல்லும் காட்சியை தாம் நேரடியாகப் பார்க்கவில்லை என்று லூ பின்னர் தெளிவுபடுத்தியதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
நாய்கள் கடத்துபவர்களிடமிருந்து தப்பித்து வந்ததாக இணையத்தில் பரவிய கூற்றுகள், வெறும் ஊகங்களாக இருந்தபோதிலும் அவை உண்மையான தகவல்களாகப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாகவும் Dahe Daily செய்தி குறிப்பிடுகிறது.
தெருநாய்களை மீட்கும் குழுவொன்றின் தன்னார்வ செயற்பாட்டாளரான தோங், மார்ச் 18 அன்று சாங்சுன் (Changchun) பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதையடுத்து, நாய்கள் குளிரால் உயிரிழக்கக்கூடும் என்ற அச்சத்தால் அருகிலுள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று விசாரித்து, அறிவிப்புப் பதாகைகள் ஒட்டியதாக சீனாவின் Jimu News இடம் தெரிவித்துள்ளார்.
Bitter Coffee Stray Dog Sanctuary எனப்படும் இந்த மீட்பு அமைப்பு, மார்ச் 21 அன்று வெளியிட்ட வீடியோவின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
Jimu News வெளியிட்ட அறிவிப்பு பதாகையில், இந்த நாய்கள் “சுவான்ஷுவாங் (Chuan Huang) அதிவேக நெடுஞ்சாலையில், சுவான்யாங் (Shuangyang) மாவட்டத்திலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில்” காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தில் குறிப்பிடப்படும் “17 கிலோமீட்டர்” என்ற தகவல் இந்த தகவலிலிருந்தே வந்திருக்கலாம் என்று கூறலாம். ஆனால், Jilin News Network, மார்ச் 23ஆம் திகதி வெளியிட்ட செய்தியின் படி, அந்த நாய்களின் வீடியோவானது, கிராமத்திலிருந்து சுமார் 4 அல்லது 5 கிலோமீட்டர் தூரத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாய்களில் 5 நாய்கள் வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கிராம மக்களின் வழிகாட்டுதலின்படி, உதவியாலர்களால் அந்த மூன்று நாய்களின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடிந்தது. கிராமத்திற்குள் மக்கள் வந்து இடையூறு விளைவிப்பார்கள் என்று கிராமவாசிகள் அஞ்சியதால், ‘ஜிமு நியூஸ்’ (Jimu News) செய்தி அறிக்கையில் உரிமையாளர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த கோர்கி (Corgi), ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) மற்றும் Golden Retriever ஆகிய மூன்று நாய்களும் தன்னுடையவை என்றும், அவை சுதந்திரமாக நடமாடுவதற்கு தான் அனுமதித்திருந்ததாகவும் நாய்களின் உரிமையாளர் கூறினார். நான்கு நாட்களாக அவற்றைத் தேடிய அவர், நம்பிக்கையை இழக்கவிருந்த நிலையில், மார்ச் 18ஆம் திகதி பிற்பகல் (ஏனைய செய்திகளில் இந்த திகதி மாறுபடுகின்றது) கோர்கி நாய் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்ததாக ‘ஜிமு நியூஸ்’ (Jimu News) செய்திக்குத் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் அருகிலுள்ள கிராமங்களில் தேடியபோது, வேறொருவரின் தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து நாய்களைக் கண்டுபிடிக்க முடிந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 21 அன்று மீட்புக் குழுவினர் வெளியிட்ட காணொளியில், கோர்கி நாயின் உரிமையாளரைச் சந்தித்த பின்னர், ஏழு நாய்களைக் கொண்ட அந்தக்குழுவில் ஐந்து நாய்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த உரிமையாளர், மற்ற இரு நாய்களின் உரிமையாளர்களது அண்டை வீட்டாராவார். இருப்பினும், மீட்புக் குழுவின் தன்னார்வலர்களால் மீதமுள்ள இரு நாய்களையும் பார்க்க முடியவில்லை என்பதோடு, அவை இருக்கும் இடம் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜிமு நியூஸ் (Jimu News) மற்றும் மீட்புக் குழுவின் தகவல்படி, கோர்கி நாயின் பெயர் ‘டாபங்’ (Dapang – இதன் பொருள் பெரிய ஐயா). ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் பெயர் ‘சிபாவோ’ (Sibao – இதன் பொருள் நான்கு பொக்கிஷங்கள்). கோல்டன் Retriever நாயின் பெயர் ‘ஹுவாங்மாவ்’ (Huangmao – இதன் பொருள் மஞ்சள் ரோமம்) என்று ஜிமு நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தாலும், அதன் பெயர் ‘சாங்மாவ்’ (Changmao – இதன் பொருள் நீண்ட ரோமம்) என்று மீட்புக் குழு தெரிவித்தது.
இந்த நாய்கள் மீண்டும் உரிமையாளருடன் இணையும் காட்சிகளைக் கொண்ட காணொளி ஒன்றை மீட்புக் குழுவினர் மார்ச் 19 அன்று டொயின் (Douyin) தளத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் உரிமையாளரின் முகம் தெளிவற்றதாக (Censored) ஆக்கப்பட்டிருந்தது.
நாய்கள் கடத்தப்படவில்லை என்று ஜிலின் சுற்றுலா பணியகம் (Jilin Tourism Bureau) தெரிவித்துள்ளது
மார்ச் 21 அன்று, ஜிலின் மாகாண கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் ஒரு காணொளியைப் பதிவிட்டது. அதில் ஃபெங்குடன் (Feng) நடத்தப்பட்ட நேர்காணலின் குரல் பதிவு உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்தக் காணொளியில் நாய்களின் உண்மையான காட்சிகள் மற்றும் அவை மீண்டும் உரிமையாளர்களுடன் இணையும் உண்மையான காட்சிகளுடன், AI மூலம் உருவாக்கப்பட்ட பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்ததுடன், இது குறித்து காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் காயமடைந்திருந்ததாகவும் மற்ற நாய்கள் அதைப் பாதுகாத்ததாகவும் பரவிய கருத்துக்கள் குறித்தும் அங்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
ஜிலின் சுற்றுலா பணியகம்
வடகிழக்கு சீனாவின் அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் ஏழு நாய்கள் நடந்து செல்லும் காணொளி உண்மையானது என்றாலும், அவை சட்டவிரோதக் கடத்தலில் இருந்து தப்பி வந்தவை என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இனச்சேர்க்கை ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட பெண் நாய் ஒன்றைப் பின்தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய ஐந்து நாய்கள், கோர்கி (Corgi) நாயின் வழிகாட்டலில் பாதுகாப்பாக மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளன என ஜிலின் சுற்றுலா பணியகத்தின் (Jilin Tourism Bureau) தகவல் தெரிவிக்கின்றது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சீனாவில் இறைச்சிக்காக குறித்த 7 நாய்கள் கடத்தப்ட்டு, லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோது, அந்த 7 நாய்களும் லொறியிலிருந்து குதித்துத் தப்பித்து, இரண்டு நாட்களில் 17 கிலோமீட்டர் தூரம் பயணித்து தமது உரிமையாளரின் வீட்டிற்கு வந்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தவறாக சித்தரிக்கப்படும் ஒன்றாகும்.
மேலும் அக்காணொளியில் உள்ள 7 நாய்களின் காட்சிகள் உண்மையானவை என்றாலும், அதன் பின்னணிக் கதையாகக் கூறப்படும் ‘இறைச்சிக்காக அந்த நாய்கள் கடத்தப்பட்டன’ என்ற செய்தி தவறானது. ஜிலின் சுற்றுலா பணியகத்தின் தகவல்படி, இனச்சேர்க்கை ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட பெண் நாய் ஒன்றைப் பின்தொடர்ந்து அவை வீடுகளை விட்டு வெளியேறியபோது எடுக்கப்பட்ட காணொளியே இது என்பது தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


