எல் நினோ நிலைமை தொடர்பான தெளிவுபடுத்தல்!!! 

Insight சமூகம் | Society

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதற்கும் அசாதாரண காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கும் முக்கிய இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான ‘எல் நினோ’ (El Niño) நிலைமை தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, எல் நினோ நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. 

இத்தகையதொரு பின்னணியில், இந்த எல் நினோ நிலைமை தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோவின் தெளிவுபடுத்தல் பின்வருமாறு

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் எல் நினோ பூமியை உலுக்கப் போகிறது – இதோ ஆபத்து!*

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது: பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. இது தற்போது எல் நினோ காலநிலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்கிறது.

இந்த திடீர் வெப்பநிலை உயர்வு உலகின் முழு காலநிலை அமைப்பிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால், உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான வறட்சி போன்ற அசாதாரண காலநிலை தாக்கங்கள் ஏற்பட வாய்புள்ளது என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.06.12 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இவ்வாறான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Explainer (விளக்கமளித்தல்)

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அசாதாரணமாக அதிகரிப்பதன் காரணமாகவும், அது சார்ந்த வளிமண்டல அழுத்த வடிவங்கள் மாறுபடுவதன் காரணமாகவும் உலகெங்கிலும் காலநிலை மாற்றங்களை உருவாக்கும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும்.

பொதுவாக கடலில் வீசும் காற்றானது பசிபிக் பெருங்கடலின் வெப்பமான மேற்பரப்பு நீரை ஆசிய பிராந்தியத்தை நோக்கி தள்ளுகிறது. ஆனால், இந்தக் காற்று பலவீனமடைவதால் அல்லது திசைமாறுவதால் வெப்பமான நீர் தென் அமெரிக்காவை நோக்கி நகர்கிறது.

விஞ்ஞானிகள் இதனை முக்கியமாக Niño 3.4 குறியீட்டின் (Niño 3.4 Index) மூலம் அளவிடுகின்றனர்; கடல் மேற்பரப்பு வெப்பநிலை விலகல் +0.5°C ஐ தாண்டும் போது அது எல் நினோ நிலைமையாகக் கருதப்படுகிறது. Link | Link

உலகளவில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

எல் நினோ (El Niño) நிலைமை காரணமாக உலகின் பல்வேறு கண்டங்களில் பரஸ்பர முரணான தீவிர காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

  • வறட்சி மற்றும் கடுமையான வெப்பம்: இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கிடைக்கும் பருவமழை அளவு கணிசமாகக் குறைகிறது. நீண்ட கால வறண்ட காலநிலையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது.
  • அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு: தென் அமெரிக்காவின் பசிபிக் கடலோர நாடுகளான பெரு, ஈக்வடார் மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வழமையை விட அதிக மழை பெய்யக்கூடும். இந்த கடும் மழை காரணமாக அந்த நாடுகளில் வெள்ளப்பெருக்கும், மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவுகளும் பரவலாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம். Link | Link

ஏற்கனவே சில பிரந்தியங்களில் ஆரம்பமாகியுள்ள தாக்கங்கள்: இந்த நிலைமையின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் உலகிலும் எமது பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ளன. உலக வானிலை ஆய்வு மையம் (WMO) சுட்டிக்காட்டியுள்ளபடி, இம்முறை தெற்காசியாவில் வழமையை விடக் குறைவான பருவமழையே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) 2026 ஆம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழை, நீண்ட கால சராசரியிலிருந்து சுமார் 90% ஆகக் குறைவடைந்து, வழக்கமான அளவை விடக் குறைவாகவே இருக்கும் என கணித்துள்ளதுடன், வழக்கமான காலத்தை விட சில நாட்கள் தாமதித்தே இந்தியாவிற்குள் பருவமழை பிரவேசித்துள்ளது.

தென்னிந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற பகுதிகளில் இந்த வறண்ட காலநிலையின் தாக்கம் கடுமையாக இருக்கக்கூடும் என்பதுடன், இது உணவு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஊடாக இலங்கையையும் மறைமுகமாகப் பாதிக்கலாம். WMO; IMD forecast

எல் நினோவின் வரலாறும் தற்போதைய நிலையும்

இந்த நிகழ்வு பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வாகும். 1982-1983, 1997-1998, 2015-2016 ஆகிய ஆண்டுகளில் கடுமையான எல் நினோ நிலமைகள் பதிவாகியுள்ளன. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் காரணமாக, கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகள் முன்னரை விட மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளதாக சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. Link

இதற்கு முன்னர் எல் நினோ காலங்களில் இலங்கைக்கு என்ன நடந்தது?

2015-2016 ஆம் ஆண்டின் கடுமையான எல் நினோ நிலமையின் போது, இலங்கை ஆரம்பத்தில் 2016 இன் முற்பகுதியில் வறண்ட காலநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டது. அதன் பின்னர், 2016 மே மாதத்தில் ஏற்பட்ட திடீர் பலத்த மழை காரணமாக அரநாயக்க நிலச்சரிவு உட்பட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 2016 இன் பிற்பகுதியிலிருந்து 2017 வரை 17 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த நீண்ட கால கடுமையான வறட்சி நிலவியது.

இது ஒரே சுழற்சிக்குள் வறட்சி மற்றும் ஈரப்பதம் ஆகிய இரு தீவிர நிலைகளையும் அனுபவிக்கும் Climate Whiplash வடிவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எனவே, எல் நினோ என்பது வெறும் வறட்சி மட்டுமல்ல, வறட்சி மற்றும் அதிக மழை ஆகிய இரு தீவிர நிலைகளையும் கொண்டு வரக்கூடிய ஒரு சூழ்நிலையாகும் (உலக வங்கி PDNA அறிக்கை).

இது ஒரு குறுகிய காலநிலை அல்ல:

எல் நினோ (El Niño) நிகழ்வு பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிப்பதால், இம்முறை அதன் தாக்கம் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, இதை ஒரு மாதத்தில் முடிவடையும் நிகழ்வாக அல்லாமல், பல மாதங்களாக படிப்படியாக வளர்ச்சியடையும் ஒரு செயல்முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் இந்த இயற்கைச் சுழற்சியின் தாக்கங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவை, காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்துக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை அடையாளப்படுத்தியுள்ளன.ADB

2026 ஜூன் மாத தொடக்கத்தில் எல் நினோ நிலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

அமெரிக்காவின் National Oceanic and Atmospheric Administration (NOAA)-இன் காலநிலை முன்னறிவிப்பு மையம் (CPC), 2026 ஜூன் 11 அன்று அதிகாரப்பூர்வமாக “El Niño Advisory” அறிவிப்பை வெளியிட்டு, தற்போது எல் நினோ நிலைமை நிலவுவதாக அறிவித்தது.

NOAA-வின் தகவலின்படி, 2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இந்த எல் நினோ நிகழ்வு மிகவும் வலுவான (Very Strong) நிலையை அடைவதற்கான வாய்ப்பு 63% அருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை, World Meteorological Organization (WMO) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எல் நினோ உருவாகும் சாத்தியம் 80% ஆகவும், அதன் பின்னர் அது 90% ஆக அதிகரிக்கும். மேலும், இந்த நிகழ்வு குறைந்தபட்சம் மிதமான அளவிலும், சில சந்தர்ப்பங்களில் வலுவான அளவிலும் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய வாராந்திர தரவுகளின்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை விலகல் (Niño 3.4) +0.7°C ஆக பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டின் எஞ்சிய மாதங்களில் உலகளாவிய வெப்பநிலை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. Link | Link | Link

2026 ஜூன் மாதமளவில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின்  உத்தியோகபூர்வ தரவு பகுப்பாய்வுகளின்படி, தற்போது இலங்கையில் நிலவும் தென்மேற்குப் பருவமழையானது  எல் நினோ நிலைமை காரணமாகக் குறையக்கூடும். பொதுவாகக் கிடைக்கும் மழைவீழ்ச்சி குறைவடைவதன் காரணமாக, நீர்மின் உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் மத்திய மலைநாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களுக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைவடையும் அபாயம் காணப்படுகிறது.

வறண்ட மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக, நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களின் (தேயிலை, தென்னை) விளைச்சல் பாதிக்கப்படுவதுடன், எதிர்வரும் பெரும்போக நெல் விவசாயத்திற்கான நீர் வழங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆதலால், எதிர்வரும் சில மாதங்களில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் தினசரி வானிலை அறிக்கைகளை அவதானிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. Link | Link

உணவுப் பாதுகாப்பு குறித்த பிராந்திய கண்ணோட்டம்:

உலக வங்கி (World Bank), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், தீவிரமடைந்து வரும் எல் நினோ நிலைமையானது தெற்காசியாவின் பயிர் உற்பத்தியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கலாம் எனவும், இதனால் நெல் விளைச்சல் 20% முதல் 50% வரை வீழ்ச்சியடையக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

தென்னிந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அது இலங்கையையும் மறைமுகமாகப் பாதிக்கக்கூடும். உலக வங்கி

தற்போது இலங்கையில் மழை பெய்வது ஏன்?

இக்காலப்பகுதியில் (2026 ஜூன் மாதத்தில்) இலங்கையில் மழை பெய்வதற்கு, தென்மேற்குப் பருவமழை காலநிலை தீவிரமாக நிலைபெற்றுள்ளமையே காரணமாகும். Link

எல் நினோ நிலைமை இதுவரை இலங்கையை பாதிக்காதது ஏன்?

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியிருந்த போதிலும், அதன் நேரடித் தாக்கம் (வறண்ட காலநிலை அல்லது பருவமழை பலவீனமடைதல்) இலங்கைக்கு படிப்படியாகவே ஏற்படும். வலிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகளின்படி, இந்த ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை வழமை போல் பெய்யும் என்பதுடன், எல் நினோ காரணமாக மழைவீழ்ச்சி குறைவடையும் தாக்கம் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியை நெருங்கும் போதே வெளிப்படத் தொடங்கும். Link

முக்கியமான உதாரணம்: 45-55°C “வெப்பநிலை” குறித்த போலியான வட்ஸ்அப் செய்தி

சமூக ஊடகங்களில் பரவும் சில தகவல்கள் எந்தளவிற்கு மிகைப்படுத்தப்பட்டவை என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். 2026 மார்ச் மாதத்தில், “ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் வரை 45-55 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும்” என வட்ஸ்அப் ஊடாகப் பரவிய செய்தி முற்றிலும் போலி வதந்தியாகும்.

வலிமண்டலவியல் திணைக்களம் அத்தகையதொரு எச்சரிக்கையை விடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்ததுடன், உணரப்படும் வெப்பநிலை (Heat Index) மற்றும் பதிவாகும் உண்மையான வளிமண்டல வெப்பநிலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டைக் குழப்பிக்கொள்வதே இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்குப் பொதுவான காரணமாக அமைகிறது. Climate Fact Checks 

இத்தகைய போலி வானிலை செய்திகள்,  பழைய காட்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் அவ்வப்போது பரவி வருகின்றன. எமது முந்தைய உண்மைச் சரிபார்ப்புகளையும் பார்வையிடுங்கள்: மற்றொரு சூறாவளி குறித்த போலிச் செய்தி; AI மூலம் உருவாக்கப்பட்ட வெள்ளக் காட்சிகள். 

சமூக ஊடகங்களில் பரவும் சில தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை ஆகும்

சமூக ஊடகப் பிரசாரங்கள்உண்மை நிலைமை
எல் நினோ காரணமாக இலங்கையில் மழை முற்றாக இல்லாமல் போய், மிக விரைவில் கடுமையான வறட்சி ஏற்படும்.தற்போது இலங்கையில் தென்மேற்குப் பருவமழை வழமை போல் பெய்து வருகின்றது. எல் நினோ தாக்கத்தினால் மழைவீழ்ச்சி குறையும் போக்கு 2026 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களிலேயே வெளிப்படத் தொடங்கும். [மேலும் விபரங்கள் இங்கே]
‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) நிலைமை காரணமாக முழு உலகமும் முன்னெப்போதும் இல்லாதவாறு பெரும் அழிவைச் சந்திக்கும்.“சூப்பர் எல் நினோ” என்பது ஊடகங்களால் பயன்படுத்தப்படும் ஒரு புனைப்பெயராகும். உத்தியோகபூர்வமாக இது ஒரு ‘மிகவும் வலுவான’ (Very Strong) நிலைமையாக இருக்கலாமே தவிர, உலகமே அழியப்போகிறது என்று அர்த்தமல்ல. உலக வானிலை ஆய்வு அமைப்பு (WMO) “சூப்பர் எல் நினோ” என்ற வார்த்தையை உத்தியோகபூர்வ வகைப்பாடாகப் பயன்படுத்துவதில்லை.
எல் நினோ நீடிக்கும் காலம் முழுவதும் இலங்கையில் மழை முற்றாகவே இல்லாமல் போகும்.எல் நினோ நிலைமையால் மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் பருவமழை குறைந்தாலும், வருடத்தின் பிற்பகுதியில் (நவம்பர்-டிசம்பர்) வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வழமையை விட அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
எல் நினோ என்பது மனிதர்கள் சூழலை மாசுபடுத்துவதால் அண்மைக் காலத்தில் புதிதாக உருவான ஒரு நிலைமையாகும்.எல் நினோ என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இயற்கையாக நிகழும் ஒரு காலநிலைச் சுழற்சியாகும். மனித நடவடிக்கைகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் காரணமாக இதன் வீரியம் சற்றே அதிகரிக்கலாமே தவிர, இது புதிதாகத் தோன்றிய ஒன்று அல்ல.


வளிமண்டலவியல் திணைக்களத்தின்  பதில் பணிப்பாளர் நாயகம் –  அஜித் விஜேமான்ன

இந்த நிலைமை தொடர்பில் நாம் அஜித் விஜேமான்னவிடம் வினவியபோது, இந்த எல் நினோ (El Niño) நிலைமை தொடர்பாக சமூக ஊடகங்களில் நீண்ட காலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், அவற்றில் சில தகவல்கள் பொதுமக்களிடையே வீண் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறாக வழிநடத்துபவையாகவும், மிகைப்படுத்தப்பட்டவையாகவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் காட்டப்படுவது போன்று எல் நினோ நிலைமை அவ்வளவு கொடூரமானது அல்ல என அவர் தெரிவித்தார். எல் நினோ நிலைமை என்பது முழுமையானதொரு வறட்சி அல்ல என்றும், சமூக ஊடகங்களில் வறட்சி குறித்து அதிகம் பேசப்பட்டாலும், எல் நினோ காரணமாக ஏற்படக்கூடிய அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற நிலைமைகள் குறித்து மிகக் குறைந்த கவனமே செலுத்தப்பட்டுள்ளது என்றும் விஜேமான்ன சுட்டிக்காட்டினார்.

எல் நினோவினால் இந்நாட்டிற்கு தாக்கம் ஏற்பட்ட போதிலும், சமூக ஊடகங்களில் பகிரப்படுவது போன்று கடல் நீரைக் கூட சுத்திகரித்துக் குடிக்கும் அளவுக்கு அதுவொரு பாரதூரமான நிலைமை அல்ல எனவும், பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பாக, தென்னிந்தியாவுக்கு இந்த எல் நினோ நிலைமையால் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வட பகுதிக்கு ஏதோவொரு வகையில் வறட்சி நிலைமையின் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற போதிலும், ஒட்டுமொத்தமாக இலங்கைக்கு இதனால் கடுமையான தாக்கம் எதுவும் இல்லை என அவர் கூறினார். எவ்வாறாயினும், தென்னிந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் வறட்சி ஏற்பட்டால் உணவு ஏற்றுமதி மட்டுப்படுத்தப்படும் என்பதால், உணவுப் பாதுகாப்பு குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்போது எல் நினோ நிலைமையானது பலவீனமான மட்டத்திலேயே தொழிற்பட்டு வருவதாகவும், அது எதிர்காலத்தில் நடுத்தர நிலையை அடையக்கூடும் என்றும், இதுவொரு மிக வலுவான (Very Strong) எல் நினோவாக மாறக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு நிகழுமாயின், அதன் உச்சக்கட்ட நிலைமை டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஏற்படக்கூடும்.

மே-ஜூன் மாதங்களில் கிடைக்க வேண்டிய அளவை விட அதிக மழைவீழ்ச்சி கிடைத்த போதிலும், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கமைய ஓரளவுக்கு வறட்சியான நிலைமை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டார். ஆகஸ்ட் மாதத்தில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றாலும், அது தாங்க முடியாதளவுக்கு இருக்காது என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் மாதம் என்பது இரண்டாவது இடைப் பருவமழை ஆரம்பிக்கும் காலப்பகுதி என்பதால், பசிபிக் பெருங்கடலில் சூறாவளிகள் உருவானால் பருவமழை தீவிரமடைந்து அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அக்டோபர்-நவம்பர் காலப்பகுதியில் எல் நினோ நிலைமையின் கீழ் மழைவீழ்ச்சி, சூறாவளி, தாழமுக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். மீண்டும் 2027 ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் காலப்பகுதியில் மழை குறையும் நிலைமை ஏற்படலாம் என்பதுடன், எல் நினோவினால் ஏற்படும் வறட்சியின் தாக்கம் இக்காலப்பகுதியிலும் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் எல் நினோ (El Niño) நிலைமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில தகவல்கள் தவறாக வழிநடத்துபவை என்பது தெளிவாகிறது. குறிப்பாக, எல் நினோ நிலைமையின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்றொரு கருத்து சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், எல் நினோ காலப்பகுதியில் வறட்சியான வானிலை மட்டுமன்றி அதிக மழைவீழ்ச்சியுடனான வானிலையும் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது இதுவொரு பலவீனமான எல் நினோ நிலைமையாகவே தொழிற்பட்டு வருவதால், தற்போது இலங்கைக்குக் கிடைக்கும் மழையானது எல் நினோவினால் ஏற்படுவது அல்லாமல், தென்மேற்குப் பருவமழை காரணமாகப் பெய்யும் மழையாகும். ஆனால், அடுத்த இரண்டு மாதங்களில் மழைவீழ்ச்சியில் குறைவை எதிர்பார்க்கலாம். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், இது பல மாதங்களுக்கு (சுமார் 2027 பெப்ரவரி வரை) நீடிக்கக்கூடிய ஒரு நீண்ட கால நிலைமையாகும். எனவே, எதிர்காலத்தில் வறட்சியான வானிலை மட்டுமன்றி, அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற நிலைமைகளையும் எதிர்பார்க்கலாம். ஆகவே, உத்தியோகபூர்வ வானிலை அறிக்கைகளைப் பின்பற்றி, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானதாகும்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

மூலங்கள் (Sources)

  1. NOAA CPC — ENSO Diagnostic Discussion (2026 ජූනි 11)
  2. WMO — Prepare for El Niño (2026 ජූනි)
  3. Daily Mirror — Sri Lanka braces for severe heat in July-August
  4. Ada Derana — Drought likely in July-August
  5. The Morning — El Niño: possible drought in July-Aug
  6. World Bank/IMF/WFP — Food Security Update (2026 අප්‍රේල්)
  7. IMD 2026 monsoon forecast (Business Standard)
  8. ADB & World Bank — Climate Risk Country Profile: Sri Lanka
  9. Climate Fact Checks — 45-55°C heat hoax debunk
  10. World Bank — 2016 Sri Lanka floods PDNA

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: எல் நினோ நிலைமை தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Fact Check By: Suji Shabeedharan

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *