18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

Missing Context இலங்கை | Sri Lanka

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றம் அது குறித்த சட்டங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

எனவே அது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் இன்னும் 12நாள்தான் இருக்கு.

உடனடியாக டின்

நம்பரை எடுங்க.

இல்லையென்றால்

தண்ட பணம்.

மற்றும் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டி வரும். என தெரிவித்து கடந்த 2026.06.18 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

மேலும் சமூக ஊடகங்களில் பலரும் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஊடக அறிக்கைகள்

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அந்த இலக்கத்தை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு எடுக்காதவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தால் அது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

எனினும் இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வருமான வரி திணைக்களத்தில் பதிவு செய்து வரி அடையாள எண்ணை (TIN) பெற்றுக்கொள்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையை மீறுபவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய சட்டங்கள் மூலம் வரி நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. என தெரிவித்து 2024 ஆம் ஆண்டு வெளியான செய்திகளை எமக்கு காணக்கூடியதாக இருந்தது. Link | Link 

இருப்பினும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அபராத முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்ததாக 2024 ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வெளியான செய்தியையும் எம்மால் காணமுடிந்தது.

ஆனால் குறித்த செய்தியில் இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, பெப்ரவரி முதலாம் திகதி முதல் அந்த நடைமுறையை கட்டாயமாக்க, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம்

மேலும் இந்த வரி அடையாள எண்ணை (TIN) பெறுவதற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது, வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வியாழக்கிழமை (25) அவ் அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்து செய்தி அறிக்கைகள் வெளியாகியிருந்தன.

அதில், மேற்படி கலந்துரையாடியதற்கு அமைவாக பின்வரும் விபரங்களை பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் தெரியப்படுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அவ்வாறு கட்டணம் செலுத்துவதோ அல்லது பெற்றுக் கொள்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஏற்கனவே வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் உரியவர் தனது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்து வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும்.

எனவே மேற்படி விபரங்களுக்கு அமைய, பொதுமக்கள் எதுவித அச்சமும்அடையத் தேவையில்லை என அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வெளியான செய்தி அறிக்கையை காண்க

ஆனால் அந்த செய்தியில் 50,000 அபராதத் தொகை குறித்து எந்த தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. 

 உள்நாட்டு இறைவரி திணைக்களம்

எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான தெளிவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தொடர்புகொண்ட போதும் அவர்களிடம் இருந்து பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவே அவர்கள் இது குறித்த விளக்கத்தை வழங்கிய பின்னர் நாம் இந்த கட்டுரையில் அதனை இணைக்க காத்திருக்கின்றோம்.

ஜூன் மாதம் ஏன் பேசப்படுகிறது? 

இந்த காலெக்கெடு ஜுன் 30 ஆம் திகதியாக சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கான காரணம் தொடர்பில் நாம் ஆராய்தோம். அதன்போது 2026 ஜுன் 3 ஆம் திகதி அன்று புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் சான்றளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரி விதிப்பு மற்றும் சில நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அதனடிப்படையில்  2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின்படி, வரி அடையாள எண் (TIN) மற்றும் அது தொடர்பான விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதங்கள் பின்வருமாறு அமையும்:

  • பதிவு செய்யத் தவறுதல்: ஒரு நபர் சட்டத்தின் 102 ஆம் பிரிவின் கீழ் ஆணையாளரிடம் பதிவு செய்யத் தவறினால் (TIN பெறுவதற்கு), ஆணையாளர் அவருக்கு எழுத்து மூலமான அறிவித்தலை வழங்குவார். அந்த அறிவித்தல் வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். இதற்கு நீதிவான் நீதிமன்றத்தினால் 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
  • தவறான தகவல்களை வழங்குதல்: ஒரு தனிநபர் வரி விலக்கு அல்லது சலுகை பெறுவதற்காக (குறிப்பாக வட்டி வருமானம் தொடர்பான சுய-பிரகடனத்தின் போது) தவறான அல்லது திசைதிருப்பக்கூடிய தகவல்களை வழங்கினால், அவருக்கு 200,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வழங்கப்படும்.
  • தடுப்பு வரி முகவர்கள் (Withholding Agents): தடுப்பு வரி தொடர்பான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறும் முகவர்களுக்கு ஒரு வரி மதிப்பீட்டு ஆண்டுக்கு 200,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், நிலுவையிலுள்ள வரிகளைச் செலுத்தத் தவறுபவர்களிடமிருந்து, அந்தத் தொகையை அபராதமாக (Fine) கருதி நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக அறவிடுவதற்கு ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில், வரி நிலுவையைச் செலுத்தத் தவறினால் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இது குறித்து மேலதிக தகவல்களை அறிக 

ஆகவே இந்த திருத்தச் சட்டம் குறித்த தவறான புரிதல் காரணமாகவே சமூக ஊடகங்களில் TIN இலக்கத்தை ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற வேண்டும் எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பகிரப்படுகின்றமையை அறியமுடிகின்றது.

TIN இலக்கம் என்றால் என்ன?

TIN (Taxpayer Identification Number) என்பது இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் (Department of Inland Revenue) தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான 9 இலக்க அடையாள எண் ஆகும். நாட்டின் வரி நிர்வாகத்தை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை  அதிகரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

  • முக்கிய தெளிவுபடுத்தல்: TIN இலக்கம் வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. உங்கள் ஆண்டு வருமானம் வரிவிலக்கு வரம்பை (ரூ. 1.2 மில்லியன் அல்லது மாதத்திற்கு ரூ. 100,000) தாண்டினால் மாத்திரமே நீங்கள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர் ஆவீர்கள்.

யாருக்கெல்லாம் TIN இலக்கம் கட்டாயம்?

  • டிசம்பர் 31, 2023 அன்றோ அல்லது ஜனவரி 1, 2024 அன்றோ 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து இலங்கை பிரஜைகளும் TIN இலக்கத்தைப் பெறுவது கட்டாயமாகும்.
  • மேலும், 18 வயது பூர்த்தியடையும் ஒவ்வொரு புதிய பிரஜையும் இந்த இலக்கத்தைப் பெற வேண்டும்.
  • ஒரு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை) ரூ. 1,200,000-க்கும் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் இந்த எண்ணைப் பெற்று வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும்.

அன்றாட வாழ்வில் TIN ஏன் அவசியம்? (இதன் பயன்கள்)

பின்வரும் முக்கியமான அன்றாடச் செயல்பாடுகளுக்கு TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது:

  1. வங்கிகளில் புதிய நடப்புக் கணக்கு (Current Account) தொடங்குவதற்கு.
  2. கட்டிட வரைபட ஒப்புதல் (Building Plan Approval) பெறுவதற்கு.
  3. வாகனம் ஒன்றை உங்கள் பெயரில் பதிவு செய்வதற்கு அல்லது வாகன உரிமையை மாற்றுவதற்கு.
  4. ஓட்டுநர் உரிமத்தைப் (Driving License) புதுப்பிப்பதற்கு.
  5. காணி அல்லது நிலப் பத்திரங்களை (Title Deeds) பதிவு செய்வதற்கு.

TIN இலக்கத்தை பெற்றுக்கொள்வது எப்படி?

பொதுமக்கள் இரண்டு வழிகளில் தங்களுக்குரிய TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்:

முறை அ) ஒன்லைன் (Online) மூலம் விண்ணப்பித்தல் (மிக எளிதான வழி):

  1. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.ird.gov.lk) செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் உள்ள e-Services என்பதைத் தேர்வு செய்யவும்.
  3. அதில் Taxpayer Registration (வரி செலுத்துநர் பதிவு) என்ற பகுதியைச் கிளின் செய்யவும்.
  4. உங்களின் வகைப்பாட்டைத் (Individual – தனிநபர் / Company – நிறுவனம்) தேர்வு செய்யவும்.
  5. கேட்கப்படும் தனிப்பட்ட விபரங்கள் (தேசிய அடையாள அட்டை எண், முழுப் பெயர், முகவரி போன்றவை) மற்றும் உங்களது சரியான மின்னஞ்சல் முகவரி (Email), கைபேசி எண் (Mobile Number) ஆகியவற்றைத் துல்லியமாக உள்ளிடவும்.
  6. தேவையான ஆவணங்களை (உதாரணமாக: தேசிய அடையாள அட்டையின் இரு பக்க நகல்) ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
  7. விபரங்களைச் சமர்ப்பித்த பிறகு, திணைக்களத்தால் அது சரிபார்க்கப்பட்டு உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு TIN சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

முறை ஆ) நேடியாகச் சென்று விண்ணப்பித்தல்:

  • ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், கொழும்பில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் (Primary Registration Unit, 2nd Floor, IRD Head Office) 2வது மாடிக்கு அல்லது உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு (Regional Offices) நேரில் செல்லலாம்.
  • அங்குள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேசிய அடையாள அட்டை (NIC) நகலுடன் சமர்ப்பித்து TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தை (TIN) ஜும் 30 ஆம் திகதிக்கு முன்ன 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பெறவேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் காலக்கெடு விதித்துள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், சட்டப்படி நீங்கள் இன்னும் TIN இலக்கத்தைப் பெறவில்லை எனில், எதிர்காலத் தேவைகளுக்காக அதனை விரைவில் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.

மேலும் அவ்வாறான எந்த காலக்கெடுவையும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விதிக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என பகிரப்பட்ட தகவலானது தவறான புரிதலுடன் பகிரப்பட்டுள்ளது என்பதுடன் 2024 ஆம் ஆண்டு இந்த TIN இலக்க நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே இந்த அபராதம் தொடர்பிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஜுன் 3 ஆம் திகதி  கொண்டுவரப்பட்ட 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின்படி, வரி அடையாள எண் (TIN) மற்றும் அது தொடர்பான விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *