
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
ஈரான் உச்சபட்ச தலைவர் சையத் அலி கோமேனி இறுதி ஊர்வலம்.
இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி ஊர்வலம்; இத்தகைய எண்ணிக்கையிலான மக்களை இதற்கு முன் கண்டதில்லை.
வீரனிலிருந்து தியாகியாக மாறிய பயணம்/ ஈரான் வெளியுறவுத்துறை என குறிப்பிடப்பட்டு இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் மேற்குறிப்பிட்ட காணொளியை ஆராய்ந்த போது, தெஹ்ரானின் அலி கமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறும் இடங்களின் உண்மையான அமைப்புடன் இந்த காணொளியில் உள்ள இடத்தின் அமைப்பு ஒத்துப்போகவில்லை என்பதனை காணமுடிந்தது.
உச்சத் தலைவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா மசூதியில் (Grand Mosalla Mosque) நீல நிறக் குவிமாடங்கள், உயர்ந்த மாடிகள் மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்கள் உள்ளன. ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில் அந்த அமைப்புகளை காணமுடியவில்லை.
கிராண்ட் மொசல்லா மசூதியின் உண்மையான காட்சிகளை கீழே காண்க.
ஆகவே மேற்குறிப்பட்ட காணொளியில் இயற்கைக்கு மாறான அம்சங்கள் காணப்பட்டமையினால், நாம் இந்த காணொளியை AI Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

கமேனியின் இறுதிச்சடங்கு இடம்பெறுவது உண்மை என்றாலும் இந்த காணொளி உண்மையல்ல
ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் உண்மை எனினும், அது குறித்து பகிரப்படும் இந்த காணொளி போலியானதாகும்.
Reuters , Associated Press மற்றும் பிற சர்வதேச ஊடகங்களின் செய்திகளின்படி, 2026 ஆம் ஆண்டு ஈரான் மோதலின் தொடக்க கட்டத்தில், 2026 பெப்ரவரி 28 ஆம் திகதியன்று நடைபெற்ற அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களில் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார்.
தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் காரணமாக, அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பல மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
2026 ஜூலை மாத தொடக்கத்தில், ஈரான் அரசு பல நாட்கள் நீடிக்கும் அரச மரியாதையுடனான இறுதிச்சடங்கு நிகழ்வுகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது. இந்நிகழ்வுகளில் தெஹ்ரானில் நடைபெற்ற ஊர்வலங்களும், கோம், மஷ்ஹத், நஜஃப் மற்றும் கர்பலா ஆகிய இடங்களில் நடைபெற்ற மத நினைவேந்தல் நிகழ்வுகளும் அடங்கியிருந்தன.
ரொய்ட்டர்ஸ் செய்தியின்படி, அதிகாரப்பூர்வ இறுதிச்சடங்கு நிகழ்வுகளின் போது கமேனியின் சவப்பெட்டி தெஹ்ரான் நகரின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். வெளிநாட்டு பிரதிநிதிகளும், மூத்த ஈரானிய அதிகாரிகளும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர். போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தேசிய ஒற்றுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக இதை ஈரான் அரசு சித்தரித்தது.
ஆனால், பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட காட்சியிலிருந்து மாறுபட்ட நிலையை BBC வெளியிட்ட உண்மையான காணொளியின் காட்சிகள் வெளிப்படுத்தின. அந்தக் காட்சிகளில், பாதுகாப்பு தடுப்புகளால் சூழப்பட்ட பகுதியில் காமெனியின் சவப்பெட்டி வாகனத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அலி கமேனி அவர்களின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 2026 ஜூலை மாதம் முழுவதும் கமேனிக்காக ஈரான் அரசு மிகப்பெரிய அளவிலான அரச மரியாதை மிக்க இறுதிச்சடங்கு நிகழ்வுகளை நடத்தி வருகிறது என்பது உண்மை. மேலும், அந்த நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்றிருந்ததை சர்வதேச செய்தி நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன.
எனினும், தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த காணொளி அந்த உண்மையான நிகழ்வுகளைச் சித்தரிப்பவை அல்ல என்பது தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


