இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, 2026 ஜூன் 18 முதல் 23 வரை ஐந்து நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 32 சந்தேக நபர்களில் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சமூக வலைதளங்களில் பல காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே இஅந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
Claim 1

குறித்த காணொளியில் ராஜஸ்தானில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 32 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார்.
ஆனால், அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார்.
ஜூன் 22 அன்று போலீஸாரால் அந்தச் சிறுமி மீட்கப்படும் வரையிலான அந்த ஐந்து நாட்களுக்குள், அச்சிறுமி நான்கு வெவ்வேறு உள்ளூர் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமியின் அழுகுரலையும் சத்தத்தையும் அடக்குவதற்காக அவருக்குக் கட்டாய மதுபானம் புகட்டப்பட்டு, கொடூரமான முறையில் 32 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் தகவல் தற்பொழுது வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அந்த ஈ-ரிக்ஷா ஓட்டுநர் உட்பட இந்தச் சங்கிலித் தொடர் குற்றத்தில் தொடர்புடைய 12 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த அக்கிரமத்திற்குத் துணையாக இருந்த மற்றும் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஹோட்டல்களும் தரைமட்டமாக்கப்பட்டு இடிக்கப்பட்டுள்ளன.
“>
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “அந்தப் பிஞ்சுச் சிறுமியைத் சித்திரவதை செய்த மற்றும் அதற்குத் துணையாக நின்ற அத்தனை மிருகங்களுக்கும் தூக்குத் தண்டனை மட்டுமே சரியான தீர்ப்பு; மனிதநேயமற்ற இந்த அரக்கர்கள் ஒரு நொடி கூட இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள்” என்று ஒட்டுமொத்த பொதுமக்களும் தங்களது கடுமையான ஆக்ரோஷத்தையும், குற்றவாளிகளுக்கு எதிரான மரண தண்டனைக் கோரிக்கையையும் எழுப்பி வருகின்றனர். என தெரிவிக்கப்பட்டு அந்த சிறுமி வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படம் என குறித்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்கூறிய புகைப்படத்தில், மருத்துவமனை அறை என்று கருதக்கூடிய இடத்தில், கடும் அதிர்ச்சிக்குள்ளாகி அழுதுகொண்டிருக்கும் சிறுமி ஒருவரும், அவருக்கு அருகில் இருந்து அவரை ஆற்றுப்படுத்தும் சில நபர்களும், சீருடை அணிந்த சில காவல்துறை அதிகாரிகளும் இருப்பதைக் காண முடிகிறது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர் மிகக் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, இக்காட்சிகள் அடங்கிய காணொளியை எந்தவொரு நம்பகமான அல்லது அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமும் வெளியிடவில்லை. இதன் காரணமாக, நாங்கள் அந்த காட்சிகளை ‘ரிவர்ஸ் இமேஜ்’ தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இந்த சம்பவமானது உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய், பில்கிராம் (Bilgram) பகுதியில் நடந்த ஒரு சம்பவமாகும்
இந்தக் காட்சிகளுடனான காணொளி பதிவொன்றை இன்ஸ்டாகிராம் பக்கமொன்றில் கண்டறிய முடிந்தது. அதில், உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய், பில்கிராம் பகுதியில் நடந்த ஒரு கடத்தல் சம்பவம் குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதனை தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்த பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
அப்போது செய்தி அறிக்கையொன்றில், ஹர்தோய் பில்கிராம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, பொலிஸார் தங்களை அச்சுறுத்தியதாகவும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தச் சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியிருந்ததும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹர்தோயில் நடந்த இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகளை எம்மால் காண முடிந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்தது குறித்த தகவல்களை ஹர்தோய் பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்களை வெளியிட்ட ஹர்தோய் பொலிஸார், இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், மேலும் சிறுவர்களைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
ராஜஸ்தான் பொலிஸாரும் தமது X பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் காணொளி தவறான தகவலுடன் பரப்பப்பட்டு வருவதாகவும், அந்தக் காணொளி உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடையது என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தது.

இதன்படி, மேற்கூறிய காணொளி மற்றும் புகைப்படம் உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவருடையது என்பது தெளிவாகிறது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துடன் இந்த காணொளியை தவறான முறையில் தொடர்புபடுத்தி பகிரப்பட்டு வருகிறது.
Claim 2
குறித்த காணொளியானது இந்தியாவை நடுங்க வைத்த ராஜஸ்தான் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தானில் 13 வயது சிறுமி ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்டு ஹோட்டலில் விற்கப்பட்டார். 5 நாட்கள் 4 ஹோட்டலில் 32 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ராஜஸ்தான் காவல்
துறையினர் அந்த 32 பேரையும் கைது செய்து தெருவில் அடித்து இழுத்து செல்கிறார்கள். அதில் ஒருவன் மக்கள் அடித்து கொன்று விட்டானர். போலீஸ் இன்னும் விசாரித்து வருகின்றனார்.
இந்தியாவில் பாலியல் குற்றத்திற்கு புதிய சட்டம் வரவேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
சரியா? தவறா என தெரிவித்து பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேலும் இந்த காணொளியின் சில காட்சிகளையும் நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
2026 மார்ச் மாதம் பதான் (Patan) மாவட்டத்தில் உள்ள பண்ணையொன்றுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, குற்றவாளிகளைத் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியாகும்
குறித்த காணொளி 2026 மே 19 அன்று X தளத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில், அது குஜராத் மாநிலம் பதான் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், நாம் நடத்திய ஆய்வில், மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த காணொளி தொடர்பாக வெளியான செய்தியறிக்கை ஒன்றைக் கண்டறிய முடிந்தது. அந்த செய்தியறிக்கையின்படி, இந்தச் சம்பவம் குஜராத்தின் பதான் மாவட்டத்தில் நடந்ததாகும். ஒரு கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் 18 பேர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கும்பல் அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணை மற்றும் பொலிஸ் வாகனம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதே இதற்கு முதன்மைக் காரணம் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனை உறுதிப்படுத்தும் வகையில், 2026 மார்ச் 19 அன்று வெளியான மற்றொரு செய்தியறிக்கையில், இது படான் மாவட்டத்தின் ஜிலியா (Jiliya) கிராமத்தில் உள்ள பண்ணையொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, குற்றவாளிகள் தாக்கப்பட்ட காணொளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் அனைவரும் பொலிஸாரினால் பதான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, மார்ச் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் காணொளி குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு மோதல் தொடர்பான சம்பவம் என்றும், ஸ்ரீ கங்காநகரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் இதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்தியாவின் ‘நியூஸ் 18’ (News18) நிறுவனம் நடத்திய உண்மைச் சரிபார்ப்பு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இந்தக் காணொளி ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையதல்ல என்பதும், இது மார்ச் மாதம் பதானில் உள்ள பண்ணை ஒன்றில் நடந்த மோதல் தொடர்பான சம்பவம் என்பதும் தெளிவாகிறது.
Claim 3

13 வயது சிறுமி…
32 ஆண்கள்… 5 நாட்கள்…
வீட்டுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறிய அந்த 13 வயது சிறுமியை, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், பின்னர் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று விற்றதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஐந்து நாட்களில், அந்த விடுதிக்கு வந்ததாகக் கூறப்படும் 32 ஆண்கள் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
32 ஆண்கள்…
அவர்களில் ஒவ்வொருவரும் அந்த இரவு தங்கள் மனைவி, மகள், சகோதரி அல்லது தாயுடன் ஒரே வீட்டில் உறங்கியிருக்க மாட்டார்களா?
இந்த நாட்டில் எத்தனை பாலங்கள், ரயில்கள், சாலைகள் கட்டப்பட்டாலும், மனிதநேயம் இல்லையெனில் நாம் எப்படி முன்னேறப் போகிறோம்?
ஒரு நாடாக நாம் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோமோ என்ற வேதனை எழுகிறது.
ஒரு கேள்வி மட்டும் மனதை விட்டு அகலவே இல்லை…
அந்த 32 பேரில் ஒருவருக்குக் கூட, தன் முன்னால் அச்சத்திலும் வேதனையிலும் தவித்துக் கொண்டிருந்த அந்த 13 வயது சிறுமியின் நிலையைப் பார்த்து, ஒரு கணமாவது இரக்கமோ மனிதநேயமோ தோன்றவில்லையா? என தெரிவிக்கப்பட்டு இந்த காட்சி பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த காட்சி தொடர்பான உண்மையை அறிய நாம் அதனை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
குஜராத்தின் கேடா (Kheda) மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்
இதனைத் தொடர்ந்து, 2026 ஏப்ரல் 19 அன்று X கணக்கு ஒன்றில் இந்த காணொளியுடன் பகிரப்பட்டிருந்த பதிவு ஒன்றைக் காண முடிந்தது. அதில்,
“கேடா (Kheda) சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு: 8 பேர் கைது, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குஜராத்தின் கேடா (Kheda) மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு நபர்களை குஜராத் பொலிஸார் கைது செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை வட்டாரங்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மிரட்டியதாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், 2026 ஏப்ரல் 18 அன்று இந்தியாவின் பிரதான ஊடகங்களில் வெளியான செய்தியறிக்கை ஒன்றை காணமுடிந்தது. அதில், மேற்படி பதிவில் உள்ள அதே நபர்களின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அந்த அறிக்கையின்படி, குஜராத்தின் கேடாவில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் மூன்று ஆண்டுகளாக அந்தச் சிறுமியைத் துன்புறுத்தி வந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இந்தக் காட்சிகள் ஸ்ரீ கங்காநகர் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையவை அல்ல என்பது தெளிவாகிறது.
Claim 4
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது கடந்த ஜூன் 27 அன்று இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அந்த காணொளியின் காட்சி அமைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய சமூக வலைதள ஆர்வலர்கள், இந்தக் காட்சிகள் அந்தச் சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புடையவை அல்ல என்றும், அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் பதிவிட்டிருந்தனர். எமது இந்தியக் குழுவும் இதனை உறுதிப்படுத்தியது. ஜூன் 27-ஆம் திகதி வரை பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பதையும், மேற்படி காட்சிகள் வேறு ஒரு சம்பவத்தைச் சேர்ந்தவை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டத்திலேயே முகரம் (Muharram) பண்டிகை அனுசரிக்கப்பட்டதால், இக்காட்சிகள் முகரம் கொண்டாட்டங்கள் தொடர்பானவையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் ராஜஸ்தான் சிறுமி மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகரில் 13 வயது பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, ஐந்து நாட்கள் பல ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட துயரச் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. இந்தச் குற்றச் செயலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகள் உட்பட 14 பேர் இதுவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததும், சட்டவிரோதமாக இயங்கி வந்ததுமான மூன்று ஹோட்டல்களை மாநில அதிகாரிகள் முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை மற்றும் ஊடகச் செய்திகளின்படி, கடந்த ஜூன் 18-ஆம் திகதி எட்டாம் வகுப்பு பயிலும் அந்தச் சிறுமி காணாமல் போயுள்ளார். வீட்டிற்குச் செல்வதற்காக அவர் ஏறிய முச்சக்கர வண்டியின் சாரதி, சிறுமியை ஏமாற்றி அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஸ்ரீ கங்காநகர் பொலிஸார் விரைந்து செயல்பட்டு, ஒரு சிறப்பு விசாரணை குழுவைஅமைத்து சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பலனாக, ஜூன் 22-ஆம் திகதி இரவு ‘குங்கர்’ (Khungar) என்ற ஹோட்டலை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, கட்டிட விதிமுறைகளை மீறியும், இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு இடமளித்தும் இயங்கி வந்த ‘Hotel Khungar’, ‘Joy Inn’ மற்றும் ‘Sapphire Inn’ ஆகிய மூன்று ஹோட்டல்களையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடித்துத் தரைமட்டமாக்கியது.
ஸ்ரீ கங்காநகர் பொலிஸ் கண்காணிப்பாளர் ஹரிசங்கர் அவர்கள் ஊடகங்களிடம் கூறுகையில், சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்து விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றத்தில் தொடர்புடைய எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ சிகிச்சையும் ஆலோசனைகளும் பெற்று வருகிறார்.Link | Link | Link
Also Read : Union Minister Consoling The Sri Ganganagar Rape Victim? Here’s The Truth Behind The Viral Video.
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்தியாவின் ராஜஸ்தானில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவை எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளிகள், அந்தச் சம்பவத்தைச் சேர்ந்தவை அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சில காணொளிகள் இதற்கு முன்னர் நடந்த வேறொரு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுடன் தொடர்புடையவை; அதேபோல், வேறு சில காட்சிகள் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுடன் தொடர்பற்ற, முற்றிலும் வேறொரு பழைய சம்பவத்தைச் சேர்ந்தவை.
ராஜஸ்தானில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குற்றத்திற்குத் துணைநின்ற மற்றும் சட்டவிரோதமாக இயங்கி வந்த மூன்று ஹோட்டல்களை மாநில அதிகாரிகள் முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


