நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்கள்!!!

False இலங்கை | Sri Lanka

2026 ஜூலை 05, 06 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும், காயங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 

இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. குறிப்பாக, டெங்கு நோய்க்கான மருந்து கேட்ட கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் தெரிவித்ததாக பல கருத்துக்களும் பகிரப்பட்டன. 

ஆகவே இந்த தகவல் தொடர்பி ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு

தகவலின் விவரம் (What is the claim):

FB | FB Archived Link  

சிங்கள மொழியில் பகிரப்பட்ட குறித்த பதிவில் டெங்குவிற்கு மருந்து கேட்டவர்கள் தானே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது.

அதேபோன்று இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த சிறைச்சாலை கலவரத்தின் போது  நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையில் ஏறிய பெண் கைதிகள் கூறியவை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்ற கலவரம் நாட்டையே பரபரப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அங்கு பெண் கைதிகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

சிறைச்சாலையில் கூரையில் ஏறியுள்ள பெண் கைதிகள் பலர் கூறியுள்ள தகவல்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

”டெங்கு பரவி இப்போது சுமார் 40 பேருக்கு தொற்றியுள்ளது.. மருந்து இல்லை சார்.. இரண்டு பெனடோல் மாத்திரைகள் மாத்திரமே தருகிறார்கள். என்று தெரிவிக்கப்பட்ட தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

Facebook | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)

உண்மையில் என்ன நடந்தது?

விசாரணைகளின்படி, தற்போது துபாயில் தங்கியிருக்கும் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதரவாளர்களான இரண்டு கைதி குழுக்களுக்கு இடையே நடந்த பழிவாங்கல் நடவடிக்கையே நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த மோதலுக்கான பிரதான காரணமாகும் என தெரியவந்துள்ளது. சிறைக்குள் போதைப்பொருள் வியாபாரம் நடத்தும் ஒரு தரப்பினர் பற்றிய தகவலை மற்றொரு தரப்பினர் சிறை அதிகாரிகளுக்கு வழங்கியதே இந்த மோதலுக்கு அடிகோலியதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

  • ஜூலை 05 அன்று நடந்த முதல் மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததோடு, 33 முதல் 38 வரையிலான பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • ஜூலை 06 அன்று காலை, நிலைமை மீண்டும் மோசமடைந்து, கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் வரை உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தரப்பு தெரிவித்தது.
  • நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புப் படையினர் சிறைக்குள் அனுப்பப்பட்டனர். கைதிகள் இரும்புக் கம்பிகள், கற்கள், கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
  • மொத்த உயிரிழப்புகள்: 28 பேர், இதில் 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 21 கைதிகளும் அடங்குவர்.ஆரம்பத்தில் உயிரிழப்புகள் 25 மற்றும் 27 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்து ஏனைய சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் மேலும் சிலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒரு விசேட விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவும், இந்த மோதல் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான பழிவாங்கலே தவிர வேறெதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

“டெங்கு மருந்து கேட்ட கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்ற பதிவு

சமூக ஊடகங்களில், சிறைக்குள் டெங்கு நோய் ஏற்பட்டு மருந்து கேட்ட கைதிகளுக்கு சுட்டு கொலை செய்யப்பட்டதாகக் காட்டி ஒரு புகைப்படமும் தலைப்பும் பரவலாக பகிரப்பட்டன.

ஆனால் விசாரணையில் தெரியவந்தது என்னவெனில், பயன்படுத்தப்பட்ட புகைப்படமும் தலைப்புச் செய்தியும், 2026 ஜூலை 05 அன்று நீர்கொழும்பு சிறையில் நடந்த கைதிகள் இடையேயான மோதல் தொடர்பான உண்மையான புகைப்படமும் செய்தியும்தான். எனினும், “அத தெரண” (Ada Derana) செய்தி வடிவமைப்பில் இருந்த இந்த உண்மையான பதிவுக்கு, “டெங்கு நோய்க்கு மருந்து கேட்டவர்கள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்” என்ற பொய்யான வாசகம் கூடுதலாக இணைக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உண்மை என்றாலும், அது இந்த சிறை மோதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாத, முற்றிலும் தொடர்பற்ற செய்தி என்பதை புலனாய்வு உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்த மோதலின்போது, சிறைக்குள் இருந்த கைதிகள் சிலர் கூரை மீது ஏறி, “டெங்கு நோய் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும், மருந்து வழங்கப்படவில்லை” என்றும் தெரிவித்திருந்தமை ஊடகங்களில் வெளியாகியிருந்தது. எனினும், இந்த மோதல் இடம்பெற்றது ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் என்பதால், அது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அல்லது மருந்து கோரி ஏற்பட்ட மோதல் அல்ல என்று சம்பந்தப்பட்ட தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் குறித்த மோதலின்  பிரதான காரணம் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான பழிவாங்கலே என்பதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்த மேலதிகள் தகவல்களை இங்கே காண்க

சிறைச்சாலை மோதலுடன் தொடர்புபடுத்தி அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர் பெயரில் பகிரப்பட்ட போலி கருத்துக்கள்

சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை அரசியல் மற்றும் தனிநபர் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி, ஜனாதிபதி, நீதி அமைச்சர், முன்னணி ஊடகவியலாளர் உள்ளிட்டோரை இலக்காகக் கொண்டு, பல தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன

நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்காரவின் கருத்து

Facebook | Archived Link 

“மீகமுவ சிறைச்சாலை சம்பவத்திற்கு நான் பொறுப்பல்ல, அரச உத்தியோகத்தர்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும்” என அமைச்சர் கூறியதாக தேசிய தொலைக்காட்சியின் செய்தி கார்ட் வடிவில், தகவல் பபகிரப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது முற்றிலும் தவறான பதிவு என்பது எமது ஆய்வுகளில் கட்டறியப்பட்டது. நீதி மற்றும் தேசிய ஒறுமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நானாயக்கார, மோதலுக்குப் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், தமது அமைச்சின் கீழுள்ள நிறுவனம் என்பதால் நிகழ்வுக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். உயிரிழப்புகள் குறித்து வேதனையடைவதாகவும், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Facebook 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவின் கருத்து

, “சிறைச்சாலை மோதலைத் தீர்க்க நான் ஜெயிலர் இல்லை” என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெரிவித்ததாக இலங்கை ரூபவாஹினி செய்தி கார்ட் போல வடிவமைத்து ஒரு பதிவு WhatsApp வழியாக பகிரப்பட்டது.

Fact Check (உண்மை அறிவோம்)

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் அத்தகை செய்தியை உண்மையில் வெளியிடவில்லை. மேலும் ஜனாதிபதியும் இத்தகைய கருத்தை நாட்டு மக்களிடம் தெரிவிக்கவில்லை. நீதி அமைச்சு மூலம் சிறையின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தவும் ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு எம்மிடம் உறுதிப்படுத்தியது.

ஊடகவியலாளர் கசுன் புஸ்ஸவெலவின் கருத்து

LankaNews இலட்சினையுடன் உருவாக்கப்பட்ட பதிவில், புலனாய்வு ஊடகவியலாளர் கசுன் புஸ்ஸவெல, “சிறையில் உள்ள குற்றவாளிகள் கலவரம் செய்தால் இன்னும் அதிக வன்முறையால் அவர்களை அடக்குவது அரசின் முழு உரிமை” எனக் கூறியதாக பகிரப்பட்டிருந்தது.

Facebook | Archived Link 

Fact Check (உண்மை அறிவோம்)

இதுவும் முற்றிலும் தவறான தகவல் என்பதுடன் அவதூறு நோக்கில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளமையும் எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. 

அவர் தமது பேஸ்புக் கணக்கில் இத்தகைய கருத்தை எங்குமே பதிவிடவில்லை. மாறாக, அவர் வெளியிட்டிருந்த இரு பதிவுகளில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறு சிறை மோதல்களுக்கான பொறுப்பு இருந்ததோ அதேபோல் தற்போதைய ஜனாதிபதியும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், 2020ல் மஹர சிறையில் நடந்த மோதலின்போது அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திஸாநாயக்க, “சிறையில் இருப்பவர்கள் அரசின் பொறுப்பில் உள்ளவர்கள், அவர்களது பாதுகாப்பை அரசு ஏற்க வேண்டும்” எனக் கூறியிருந்ததையும் நினைவூட்டியிருந்தார். மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுயாதீன விசாரணை கோரி முறைப்பாடும் அளித்திருந்தார். ஆனால் அந்த பதிவுகளில் எங்குமே கைதிகளை அடக்குமாறு அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

Facebook | Archived Link 

Facebook | Archived Link 

பயன்படுத்தப்பட்ட புகைப்படமும், வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கு 13 ஆண்டுகள் நிறைவடைந்த நினைவேந்தல் நிகழ்வில் – கசுன் புஸ்ஸவெல பேசிய போது எடுக்கப்பட்டதாகும். இது தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பொய்யான பதிவு எனவும் அவரே உறுதிப்படுத்தினார்.

அமைச்சர் லால்காந்தவின் கருத்து

“சம்பவம் சோகமானது என்றாலும், இதனால் சிறைச்சாலைகளின் நெரிசல் குறையும்” என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த கூறியதாக Daily Mirror செய்தி வடிவில் ஒரு பதிவு பகிரப்பட்டிருந்தது.

Facebook | Archived Link 

Fact Check (உண்மை அறிவோம்)

அமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவிக்கவில்லை. Daily Mirror இணையதளத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் செய்தி வடிவமைப்பையும் லோகோவையும் தவறாக  பயன்படுத்தி இந்த போலியான பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. Daily Mirror இத்தகைய செய்தி எதையும் வெளியிடவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் வஜிர அபேவர்தனவின் கருத்து

“நிலைமை மோசம், உடனடியாக ஆட்சியை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் நாடு ஆபத்தில் விழும்” என ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் வஜிர அபேவர்தன ஊடக சந்திப்பில் கூறியதாக ஒரு தகவல் பகிரப்பட்டது.

Facebook | Archived Link Facebook | Archived Link 

Fact Check (உண்மை அறிவோம்)

ஐக்கிய தேசியக் கட்சி தமது அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, சமூக ஊடக கணக்குகளிலோ இத்தகைய கருத்தை வெளியிடவில்லை. நம்பகமான எந்த முன்னணி ஊடக நிறுவனமும் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் செய்தியை வெளியிடவில்லை. வஜிர அபேவர்தனவின் ஊடகப் பிரிவும் இது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறாக பதிவு என உறுதிப்படுத்தியது. மேலும், அந்தப் பதிவின் அடிக்குறிப்பில் அவமதிப்பான புனைப்பெயர் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது – இது எந்தவொரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ பதிவிலும் காணப்படாத பாணி என்பதும் இதன் போலித்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

ஏன் இத்தகைய தவறான தகவல்கள் பரவுகின்றன?

பொதுவாக ஒரு பேரிடர் அல்லது துயரச் சம்பவம் நடக்கும்போது, அதைப் பற்றிய பொது மக்களின் அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் பயன்படுத்தி, உண்மையான புகைப்படங்களுக்கு தவறான தலைப்புகளை இணைத்தோ, அரசியல் தலைவர்கள் பெயரில் போலி மேற்கோள்களை உருவாக்கியோ சமூக ஊடகங்களில் குழப்பம் பரப்பப்படுவது வழக்கமான ஒரு போக்காக அமைகிறது. நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திலும், உண்மையான மோதலின் புகைப்படங்களை பயன்படுத்தி, “டெங்கு மருந்து மறுப்பு” போன்ற உணர்வுபூர்வமான, எளிதில் நம்பக்கூடிய கோணங்களை இணைத்து பரப்பியிருப்பது இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். இதேபோன்று, நம்பகமான ஊடக நிறுவனங்களின் லோகோக்களையும், வடிவமைப்புகளையும் தவறாக பயன்படுத்துவதன் மூலம், பொய்யான செய்திகளுக்கு “அதிகாரப்பூர்வத் தன்மை” இருப்பதாக மக்களை நம்ப வைக்கும் உத்தியும் பரவலாகக் காணப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பகிரும் முன் கவனிக்க வேண்டியவை

  • ஒரு புகைப்படம் உண்மையானதாக இருந்தாலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தலைப்பு/வாசகம் உண்மையா என்பதை தனியாக சரிபார்க்கவும்.
  • அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரில் வரும் “மேற்கோள் பதிவுகளை”, அவர்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் அல்லது நம்பகமான ஊடக நிறுவனங்களின் வெளியீடுகளுடன் ஒப்பிட்டு உறுதிசெய்யவும்.
  • பிரபல செய்தி நிறுவனங்களின் லோகோ/வடிவமைப்புடன் வரும் “ஸ்கிரீன்ஷொட்” வகையான பதிவுகளை, அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ பேஸ்புக் பக்கத்திலோ அதே செய்தி வெளியாகியுள்ளதா எனச் சரிபார்த்த பின்னர் நம்பவும்.
  • உணர்வுபூர்வமான, கோபமூட்டும் தலைப்புகளைக் கொண்ட பதிவுகளை உடனடியாக பகிர்வதற்கு முன், ஒரு கணம் நிறுத்தி அதன் மூலத்தை சிந்தித்துப் பாருங்கள்

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல், போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான பழிவாங்கல் நடவடிக்கையால் ஏற்பட்டதே தவிர, டெங்கு நோய்க்கான மருந்து மறுப்புடன் அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. அதேபோல், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, ஜனாதிபதி, நீதி அமைச்சர், விவசாய அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர், மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் ஆகியோர் பெயரில் பகிரப்பட்ட அனைத்து கருத்துக்களும் முற்றிலும் தவறான பதிவுகளே என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பேரிடர் காலங்களில் பரப்பப்படும் தகவல்களை பகிர்வதற்கு முன், அவற்றின் மூலத்தையும் உண்மைத் தன்மையையும் சரிபார்த்துக் கொள்வது ஒவ்வொரு சமூக ஊடக பயனாளருடைய பொறுப்புமாகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்கள்!!!

Fact Check By: Suji Shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *