இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை காட்டும் புகைப்படமா இது?

Misleading சமூகம் | Society

கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, அதில் விலங்குகளும் அடங்கும். இருப்பினும் இந்த இயற்கை அனர்த்தத்துடன் தொடர்புபடுத்தி பல தவறான காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையொன்றில் உள்ள அனைத்து கோழிகளும் இறந்து நீரில் மிதப்பதாக புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link


ஹலாலே சுத்தமானது

இலங்கையின்  வெள்ள அணர்த்தம் ஓர் உண்மையை உணர்த்தியுள்ளது. மாற்று மத நண்பர்கள் இந்த நாட்களில் இஸ்லாமியர்களிடம் மட்டுமே இறைச்சி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.

வெள்ளத்தால் இறந்து போன கோழிகளும் ஆடு மாடுகளும் இறைச்சியாக சந்தைக்கு வந்துகொண்டு இருக்கிறது.

எது நல்லது எது கெட்டது என்று வேறுபிரிக்க முடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு ஹலால் என்ற வார்த்தை பெரும் ஆறுதலாக இருக்கிறது.

ஹலாலில் அரசியல் செய்த அனைவரையும் ஹலாலுக்கு மாற்றிவிட்டது இந்த அணர்த்தம்.

தாமாக செத்தவை ஹராம் என்ற இஸ்லாமிய சட்டத்தின் தாத்பரியத்தை உணர்ந்துகொள்ள இந்த நாடு கொடுத்த விலை கொஞ்சம் அதிகம்தான். என தெரிவித்து குறித்த புகைப்படம் 2025.12.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் அதனை சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது மன்னார் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி கால்நடைகள் உயிரிழந்தமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட புகைப்படத்துடன் தொடர்புடைய காணொளி, புகைப்படங்கள் மற்றும் செய்திகள் எந்தவொரு பிரதான ஊடகங்களிலும் வெளியாகியிருக்கவில்லை.

எனவே நாம் மேற்குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம். இதன்போது தாய்லாந்தின் ராயோங் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது அந்த நகரில் இருந்த பெரிய கோழிப்பண்ணை ஒன்றில் வெள்ளம் புகுந்தமையினால் அங்கிருந்த கோழிகள் அனைத்தும் இறந்துள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இது என்பதனை அறிய முடிந்தது.

அது தொடர்பில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்துடனான பதிவு பின்வருமாறு

இது தொடர்பில் நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் தாய்லாந்தின் பல செய்தி இணையதளங்களில் அந்த படத்துடனான செய்திகள் வெளியாகியிருந்தமையையும் காணமுடிந்தது. Link | Link | Link 

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமான இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களில் வெள்ளத்தில் மூழ்கி கோழி பண்ணையொன்றி உள்ள கோழிகள் இறந்துள்ளதாக பகிரப்படும் புகைப்படம் தவறானது என்பதுடன் அது கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்தின் ராயோங் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி கோழி பண்ணையொன்றில் இருந்த கோழிகள் இறந்ததை காட்டும் புகைப்படம் என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை காட்டும் புகைப்படமா இது?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *