ஹண்டா வைரஸ் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Insight சமூகம் | Society

அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV Hondius எனும் சொகுசு சுற்றுலா கப்பலில், ஹண்டா வைரஸ் (Hantavirus) தொற்று காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹண்டா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பலரது கவனம் திரும்பியுள்ளது.

ஹண்டா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட ஆயு்வு பினவருமாறு

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு சொகுசுக் கப்பலில் அரிதான ஹன்டா வைரஸ் ( Hantavirus) தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், குறித்த கப்பலில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், மேலும் குறைந்தது மூன்று பேர் நோய்வாய்ப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை (3) தெரிவித்துள்ளது. என குறிப்பிடப்பட்டு அந்த தகவல் கடந்த 2026.05.04 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

மேலும் இது தகவல்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதனை காணமுடிந்தது.


Fb | Fb 

Explainer (விளக்கமளித்தல்)  

அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV Hondius என்ற கப்பல், 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி ஆர்ஜென்டினாவின் உசுவாயா (Ushuaia) துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. இது தெற்கு ஜோர்ஜியா, டிரிஸ்டன் டா குன்ஹா (Tristan da Cunha) மற்றும் செயின்ட் ஹெலினா தீவுகள் வழியாக கேப் வெர்டே (Cape Verde) நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த பயணத்தின் போது, ஏப்ரல் முதல் வாரத்தில் சில பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் தென்பட்டன. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இந்தக் கப்பலில் ஹண்டா வைரஸ் (Hantavirus) தொற்று காரணமாக இதுவரை 3 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மரணங்கள் குறித்த விபரம்:

  • ஏப்ரல் 11: நெதர்லாந்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் கப்பலிலேயே உயிரிழந்தார்.
  • அவரது மனைவி (69 வயது), தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • மே 2: ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கப்பலிலேயே உயிரிழந்தார்; இது மூன்றாவது மரணமாகப் பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களின் மாதிரிகள் தென்னாப்பிரிக்காவின் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனம் National Institute for Communicable Diseases   (NICD) மூலம் பரிசோதிக்கப்பட்டன. இந்த மரணங்கள் Andes strain எனப்படும் ஹண்டா வைரஸ் வகையினால் ஏற்பட்டவை என்பதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

WHO 

இது தொடர்பான மேலதிக விளக்கத்தை பெறவும் Link | Link 

ஹண்டா வைரஸ் என்றால் என்ன?

ஹண்டா வைரஸ் என்பது எலிகள் மற்றும் பிற கொறித்துண்ணிகள் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் குழுவாகும். இது முக்கியமாக இரண்டு வகையான நோய் நிலைகளை உருவாக்குகிறது:

  • HPS (Hantavirus Pulmonary Syndrome): இது ஒரு உயிருக்கு ஆபத்தான சுவாச நோயாகும். இந்த பாதிப்பு முக்கியமாக அமெரிக்க பிராந்தியங்களில் (வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா) காணப்படுகிறது.
  • HFRS (Hemorrhagic Fever with Renal Syndrome): இது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை ரத்தப்போக்குடன் கூடிய காய்ச்சலாகும் (Hemorrhagic Fever). இது ஐரோப்பா மற்றும் ஆசிய பிராந்தியங்களில் பரவலாகக் காணப்படுகிறது.Link | Link

ஹண்டா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

இந்த நோயின் முக்கிய கடத்திகள் எலிகள் ஆகும். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்குப் பல வழிகள் உள்ளன:

  • காற்று வழியாகப் பரவுதல்: பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர், மலம் மற்றும் உமிழ்நீர் காய்ந்த பிறகு, அவற்றிலுள்ள வைரஸ்கள் தூசித் துகள்களுடன் கலக்கின்றன. மனிதர்கள் இந்த அசுத்தமான காற்றைச் சுவாசிக்கும்போது, வைரஸ் நுரையீரலுக்குள் செல்கிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவிக்கிறது.
  • நேரடித் தொடர்பு: வைரஸ் உள்ள எலிக் கழிவுகளைத் தொட்டுவிட்டு, அதே கைகளால் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலமும், எலிக் கழிவுகளால் அசுத்தமடைந்த உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதன் மூலமும் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • எலி கடி: பாதிக்கப்பட்ட எலி மனிதனை நேரடியாகக் கடிப்பதன் மூலமும் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது.

மனிதனிடமிருந்து மனிதருக்குப் பரவுதல்: பொதுவாக ஹண்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது என்றே கருதப்படுகிறது. இருப்பினும், தெற்கு அமெரிக்காவில் (குறிப்பாக ஆர்ஜென்டினா மற்றும் சிலி) காணப்படும் Andes Virus வகை, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.Link | Link 


நோய் அறிகுறிகள்

உலக சுகாதார அமைப்பின் (WHO) உறுதிப்படுத்தலின்படி, வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து அறிகுறிகள் தென்படுவதற்கு 1 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம்.

ஆரம்ப அறிகுறிகள் (முதல் 3-5 நாட்கள்):

  • கடும் காய்ச்சல்
  • கடுமையான தசை வலி
  • தலைவலி
  • நடுக்கத்துடன் கூடிய குளிர் (Chills)
  • வாந்தி

தீவிர அறிகுறிகள் (4-10 நாட்களுக்குப் பிறகு):

  • HPS நிலை: நுரையீரலில் நீர் கோர்ப்பதால் (Fluid buildup) கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஏற்படும்.
  • HFRS நிலை: இரத்த அழுத்தம் வேகமாக குறைதல், சிறுநீரக செயலிழப்பு மற்றும் உள் இரத்தப்போக்கு (Internal bleeding) போன்றவை ஏற்படலாம்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தகவல்படி, HPS பாதிப்பு ஏற்படும்போது இறப்பு விகிதமானது 35% முதல் 40% வரை உயர்வாகக் காணப்படுகிறது. Link | Link


நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை

நோய் கண்டறிதல் பொதுவாக நோயாளியின் அறிகுறிகளின் வரலாறு, எலிகள் நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் சென்ற வரலாறு மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளின் அடிப்படையில் அமைகிறது. இரத்தப் பரிசோதனைகள் மற்றும் PCR பரிசோதனை முறைகள் மூலம் வைரஸை அடையாளம் காண முடியும்.

ஹண்டா வைரஸுக்கென இதுவரை பிரத்தியேகமான மருந்தோ அல்லது தடுப்பூசியோ கண்டறியப்படவில்லை. கடுமையான சுவாசப் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு ஒட்சிசன் சிகிச்சை, செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilators) அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

நோய் பாதிப்பை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம், நோய் தீவிரமடைவதையும் உயிரிழப்பு ஏற்படுவதையும் கணிசமாகக் குறைக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வலியுறுத்துகின்றன.


ஹண்டா வைரஸின் வரலாறு

ஹண்டா வைரஸ் தொடர்பான முதல் பதிவுகள் 1950-1953 காலகட்டத்தைச் சேர்ந்தவை. கொரியப் போரின் போதுதான் இந்த வைரஸ் முதன்முதலில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அப்போது அங்கு பணியாற்றிய 3,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு “கொரிய ரத்தப்போக்கு காய்ச்சல்” (Korean Hemorrhagic Fever) ஏற்பட்டது. அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் உள் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

1993 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ‘Four Corners’ (அரிசோனா, நியூ மெக்ஸிகோ, கொலராடோ மற்றும் யூட்டா மாநிலங்கள் சந்திக்கும் இடம்) பகுதியில் நுரையீரல் தொடர்பான இந்த நோய் பாதிப்பு பரவியது. 1995-1996 காலகட்டத்தில் ஆர்ஜென்டினாவில் ஏற்பட்ட ஒரு பரவலின் போது, இதன் Andes virus வகை கண்டறியப்பட்டது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரே ஹண்டா வைரஸ் வகை இதுவென அடையாளம் காணப்பட்டது இதன் வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும். Link | Link

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தரவுகளின்படி, 1993 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் அமெரிக்காவில் 864 ஹண்டா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் இறப்பு விகிதம் சுமார் 35-36% ஆகும்.

ஆசிய நாடுகளுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

2026 மே மாத நிலவரப்படி, ஆசிய நாடுகளுக்கு ஹண்டா வைரஸ் தொடர்பான உலகளாவிய அச்சுறுத்தல் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. 2026 ஜனவரியில் தாய்வானின் தைபே நகரில் ஹண்டா வைரஸ் தொற்றால் ஒரு மரணம் பதிவானது, இது அந்த நாட்டில் இந்த ஆண்டு பதிவான முதல் சம்பவமாகும்.

ஆசியாவில் (குறிப்பாக சீனா மற்றும் தென்கொரியா) ஆண்டு முழுவதும் ஹண்டா வைரஸால் ஏற்படும் சிறுநீரகம் சார்ந்த நோய் பாதிப்புகள் (HFRS) சிறிய அளவில் பதிவாகி வந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

MV Hondius கப்பலில் ஏற்பட்ட நோய் பரவலானது அந்தக் கப்பலுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே, பிராந்தியத்தில் உள்ள பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Link | Link

நோய் தடுப்புக்கான பொதுச் சுகாதார அறிவுரைகள்

ஹண்டா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) ஆகியவை சில நடைமுறைப் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

தனிநபர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

  • சுத்தம் பேணுதல்: வீடுகள் மற்றும் அலுவலகங்களில் எலிகள் நுழைவதைத் தடுக்க அவற்றை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • உணவுப் பாதுகாப்பு: உணவுப் பொருட்களை எலிகள் நெருங்காதவாறு பாதுகாப்பான கொள்கலன்களில் (Containers) மூடி வைக்க வேண்டும்.
  • கழிவு மேலாண்மை: குப்பைகள் மற்றும் உணவு எஞ்சியவைகளை முறையாக அப்புறப்படுத்துவதன் மூலம் எலிகள் ஈர்க்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்யும் போது:

எலிகள் நடமாட்டம் இருந்த இடங்களைச் சுத்தம் செய்யும் போது சுகாதாரத் துறையினர் பின்வருவனவற்றை வலியுறுத்துகின்றனர்:

  • பாதுகாப்புக் கவசங்கள்: சுத்தப்படுத்தும் பணியின் போது Gloves மற்றும் முகக்கவசம் (Mask) அணிவது அவசியம்.
  • காற்றோட்டம்: நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த அறைகள் அல்லது இடங்களுக்குள் நுழையும் முன், அதன் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்து போதிய காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
  • கிருமிநாசினிகள்: வெறும் துடைப்பத்தால் பெருக்காமல், கிருமிநாசினிகள் அல்லது பிளீச்சிங் திரவங்களைப் பயன்படுத்தி ஈரமான முறையில் சுத்தம் செய்ய வேண்டும் (இது வைரஸ் காற்றில் கலப்பதைத் தடுக்கும்).

மருத்துவ உதவி:

எலிகள் நடமாட்டம் உள்ள இடங்களில் இருந்த பிறகு காய்ச்சல், தசை வலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு

ஹண்டா வைரஸ் பரவல் குறித்தும், அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கண்டறிய நாம் தொற்றுநோயியல் பிரிவைத் தொடர்பு கொண்டு வினவினோம்.

அதன் போது, பின்வரும் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன:

  • தற்போதைய நிலை: ஹண்டா வைரஸ் தற்போது இலங்கையில் ஒரு பாதிப்பாகவோ அல்லது பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகவோ அடையாளம் காணப்படவில்லை.
  • விழிப்புணர்வு: இருப்பினும், சர்வதேச ரீதியாக இவ்வாறானதொரு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் அனைத்து மருத்துவமனைகளும் சுகாதாரப் பிரிவுகளும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.
  • பரவல் வேகம்: ஹண்டா வைரஸ் என்பது மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு நோய் அல்ல என்பதையும், இலங்கையில் இதுவரை இத்தகைய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பதையும் தொற்றுநோயியல் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Result Stamp

Title: ஹண்டா வைரஸ் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Fact Check By: Suji Shabeedharan

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *