
INTRO :
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை இலங்கை 286 டொலலருக்கு வாங்கியதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “மற்ற நாடுகள் ஒரு பேரல் எண்ணெய்க்கு 150 டாலர் செலுத்திய நிலையில், இலங்கை 286 டாலர் செலுத்தியதாக HSBC தலைவர் ஒரு சர்வதேச மாநாட்டில் தெரிவித்துள்ளார் “என இம் மாதம் 16 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (16.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு இலங்கை 286 டொலர் என்ற மிகப்பெரிய தொகையைச் செலுத்தியதாக HSBC வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கூறியதாகக் கூறப்படும் கூற்று, சமூக ஊடகப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரின் அறிக்கையினை நாங்கள் முதலில் ஆய்வு செய்தோம்.
HSBC தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து, கடந்த வாரம் ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் HSBC தலைமை நிர்வாக அதிகாரி ஜோர்ஜ் எல்ஹடாரி பேசியதாகப் பல வெளிநாட்டு இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இலங்கையையும் குறிப்பிட்டிருந்த அந்தத் தலைமை நிர்வாக அதிகாரியின் அறிக்கையை, ‘இலங்கையின் கொள்வனவாளர், ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்துகிறார்’ என்ற தலைப்புடன் Middle East Eye இணையதளம் வெளியிட்டிருந்தது. Middle East Eye இணையதளத்திற்கு முன்பாகவே, sherwood.news இணையதளமும் தலைமை நிர்வாக அதிகாரியின் அறிக்கையை மேற்கோள் காட்டி இதே செய்தியை வெளியிட்டிருந்தது.

HSBC தலைமைச் செயல் அதிகாரியின் அறிக்கையை உள்ளூர் ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டன?
Middle East Eye இணையதளத்தை மேற்கோள்காட்டி, இலங்கை உலகச் சந்தையிலேயே மிக உயர்ந்த விலையான 286 டொலருக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியதாகவும், இணையத்தள ஊடகங்கள் உட்பட உள்ளூர் பிரதான ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பலவிதமாக வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இலங்கை 286 டொலருக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததாக பிரதான ஊடகங்கள் தங்களின் சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவித்திருந்தன. இதற்கிடையில், அரசாங்கம் மிக அதிக விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியதாக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் பதில்
ஊடக அறிக்கைகள் தொடர்பாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக மட்டுமே இலங்கைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாகக் கூறியுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட எந்தவொரு கச்சா எண்ணெய்க்கும் ஒரு பீப்பாய்க்கு 286 அமெரிக்க டொலர் என்ற விலையை கூட்டுத்தாபனம் செலுத்தவில்லை அல்லது செலுத்துவதாக உறுதியளிக்கவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பிறகு இலங்கையை வந்தடையும் முதல் கச்சா எண்ணெய் கப்பல் ஏப்ரல் 17 அன்று இலங்கையை வந்தடையும் என்றும், மத்திய கிழக்கு போர் வெடித்த பிறகு வரும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு ஒரு பீப்பாய்க்கு முறையே சுமார் 71.99, 111.62, 71.81 மற்றும் 113.29 அமெரிக்க டொலர்களை செலுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும், இது தற்போதைய உலக சந்தை விலையுடன் ஒப்பிடும்போது மிகவும் சாதகமான மதிப்பாகும் என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கை மேலும் கூறுகிறது.
இதற்கிடையில், பொய்யான அறிக்கைகளைப் பரப்புதல், சமூகத்தில் அமைதியின்மையையும் பதற்றத்தையும் ஏற்படுத்துதல் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் ஆகியவற்றுக்காக அனைத்துத் தரப்பினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண, எண்ணெய் கூட்டுத்தாபனம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று ஏப்ரல் 16 அன்று ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இலங்கை 286 டாலருக்கு டீசலைக் கொள்முதல் செய்துள்ளது – எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், ஏப்ரல் 17 அன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகளில் தெரிவிக்கப்பட்டது போல் கூட்டுத்தாபனம் 286 டொலருக்கு கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யவில்லை என்றும், மாறாக அந்தத் தொகைக்கு டீசலே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தலைமைச் செயல் அதிகாரியின் அறிக்கையை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு திரித்துக்கூறினவா அல்லது அது வேண்டுமென்றே கச்சா எண்ணெய் என்று தவறாகச் சித்தரிக்கப்பட்டதா என்பதே கேள்வியாக உள்ளது என்றும் தலைவர் மேலும் கூறினார்.
“டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த விலையை நம்மில் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் மாலை 5 மணிக்கு ஒரு கப்பல் வந்தால், அந்தக் கப்பலின் விலை நிச்சயமாக அந்த விலைக்குத்தான் செல்லும். அதை யாராலும் தடுக்க முடியாது. இரண்டு உலகச் சந்தை விலைகளையும் ஒன்றாகக் கூட்டிய பிறகு அதிகரித்த விலையே பிரீமியம் மதிப்பு ஆகும். இது நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிலை அல்ல. நாம் இந்த வழியில் எண்ணெய் வாங்கவில்லை என்றால், நாடு தனது எண்ணெய் விநியோகத்தை இழந்துவிடும். சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் தீர்ந்துவிடும்போது, உலகச் சந்தையில் உயர்ந்த விலையில் நாம் எண்ணெய் வாங்க வேண்டியுள்ளது. அதுதான் இப்போது பயன்படுத்தப்படும் எண்ணெய்.”
கச்சா எண்ணெய்க்கும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கும் (டீசல், பெட்ரோல்) இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், நாட்டின் எரிபொருள் தேவைகளில் 20%-30% மட்டுமே சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 70% சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளிலிருந்து பூர்த்தி செய்யப்படுவதாகவும் தலைவர் கூறினார்.
மார்ச் 31 அன்று, பெட்ரோலியக் கழகம் ஒரு பேரல் டீசலை 285.28 என்ற விலையில் கொள்முதல் செய்தது. ஏப்ரல் 7 ஆம் திகதி வந்த கப்பலிலிருந்து ஒரு பேரல் டீசல் 288.06 அமெரிக்க டொலருக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகத் தலைவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 17 அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், உலக சந்தைக் குறியீட்டு மதிப்பின் அடிப்படையில் அரசாங்கம் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ததாகக் கூறினார். இருப்பினும், ஏப்ரல் 2 அன்று, அரசாங்கம் டீசலை 286 டாலருக்குக் கொள்முதல் செய்ததாகவும், அக்காலத்தில் உலக சந்தைக் குறியீட்டு மதிப்பு 291 டாலராக இருந்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பு ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எண்ணெய்க்கு வழங்கப்படும் விலையை விட நாட்டில் எண்ணெய் இருப்பதே முக்கியம் என்றும், போர்ச் சூழலை எதிர்கொண்டு இலங்கை எரிபொருள் விநியோகத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளது என்றும் கூறினார். ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின்படி கொள்முதல் கொள்கைகளுக்கு உட்பட்டு, அரசாங்கம் திட்டமிட்ட முறையிலும் பதற்றமின்றியும் இந்தச் சூழலை எதிர்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர்
இதற்கிடையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மயூர நெத்திகுமரகேவிடம் நாங்கள் விசாரித்தபோது, மார்ச் மாதத்தின் பிற்பகுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களிலும் அறிவிக்கப்பட்ட உயர் விலையில் பல கப்பல்கள் தீவை வந்தடைந்ததாக அவர் தெரிவித்தார். sundaytimes
-மார்ச் 31 அன்று, ஒரு பேரல் 285 அமெரிக்க டொலர் விலையில் 240,000 பேரல்கள் கொள்முதல் செய்யப்பட்டன,
-ஏப்ரல் 6-7 திகதிகளில், ஒரு பேரல் 288 அமெரிக்க டொலர் விலையில் 295,000 பேரல்கள் கொள்முதல் செய்யப்பட்டன,
-ஏப்ரல் 7-8 திகதிகளில், ஒரு பேரல் 281 அமெரிக்க டொலர் விலையில் 254,000 பேரல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
ஏப்ரல் 2 ஆம் திகதி அரசாங்கம் டீசலை 286 டொலருக்கு கொள்முதல் செய்ததாகக் கூறப்பட்டதால், அந்தத் திகதிகளில் உலக சந்தையில் ஒரு பேரல் டீசலின் விலையை நாங்கள் ஆய்வு செய்தோம். அங்கு, சிங்கப்பூரில் ஒரு பேரல் டீசலின் விலை சுமார் 230 டாலராக இருந்தமை காணக்கிடைத்தது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில், அதிக அபாயம் உள்ள பகுதிகளைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட நாடுகளுக்கான எரிபொருள் இறக்குமதிக்கான கப்பல் மற்றும் காப்பீட்டுக் கூடுதல் கட்டணங்கள் ஒரு பேரலுக்கு $30 முதல் $40 வரை சேர்க்கப்பட்டன.
நெருக்கடியான சந்தைகளில் டீசல் விலை ஒரு பேரலுக்கு $290 வரை உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) கூறியது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

