
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் அரசியல்வாதிகள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களில், அமைச்சர் லால் காந்தவின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று முன்பு கூறியிருந்த அமைச்சர் லால் காந்தா, இவ்வளவு சொத்துக்களை எப்படிச் சேர்த்தார் என்பது அரசியல் மேடைகளில் ஒரு சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஆகவே இதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதனை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

அமைச்சர் லால்காந்தவின் (46 கோடி ரூபாவிற்கும் அதிகமான) சொத்து விபரங்கள் வெளியீடு என தெரிவிக்கப்பட்டு குறித்த தகவல் கடந்த 2026.04.16 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
அதேபோல் இந்த செய்தியை பல பிரதான ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டதனை தொடர்து இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
2023 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் படி, அமைச்சர் கே.டி. லால் காந்த கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விபரங்களை சமர்ப்பித்துள்ளார் என லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப் பரிசோதிக்கும் போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அசையாச் சொத்துக்கள்
- 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2,500 சதுர அடி குடியிருப்பு கட்டடம் மற்றும் 10 பேர்ச்சஸ் காணி.
- 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிரந்தர கட்டடம் மற்றும் 20 பேர்ச்சஸ் வீட்டுத் தோட்டம்.
- 56 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,500 சதுர அடி குடியிருப்பு கட்டடம் மற்றும் 14 பேர்ச்சஸ் காணி.
பரம்பரைச் சொத்துக்களாக
- 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1,500 சதுர அடி குடியிருப்பு கட்டடம் மற்றும் வர்த்தகக் கட்டடம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
அசையும் சொத்துக்கள்
- ஓய்வூதியம்: ரூபா. 771,400.00
- சம்பள வருமானம்: ரூபா. 738,918.16
- சொத்து வாடகை மூலம்: ரூபா. 4,000,000
- நிலையான வைப்பு வட்டி வருமானம்: ரூபா. 2,755,851.97 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேற்கூறப்பட்ட ஊடக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் அமைச்சர் லால் காந்தவின் சொத்து விபர அறிக்கையில் உள்ளவாறே சொத்துக்கள் வெளியிடப்பட்டிருந்த போதிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிணையங்களின் (Securities) பெறுமதி தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிடப்பட்டுள்ளமை எமது ஆய்வின் போது கண்டறியப்பட்டது.
அமைச்சரின் சொத்து விபர அறிக்கையின்படி, 10 தனியார் நிறுவனங்களில் பிணையங்கள் (Securities) முதலீடு செய்யப்பட்டுள்ளன.
- Brown Investment: இரண்டு சந்தர்ப்பங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 648 பங்குகள் காணப்படுகின்றன. அதன் பெறுமதி ரூபா. 4,276.80 ஆகும்.
- Blue Diamond Jewelry: 20,550 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 6,165.00 ஆகும்.
- Hela Apparel Holdings: 980 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 3,038.00 ஆகும்.
- Jat Holdings: 209 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 9,823.00 ஆகும்.
- Ceylon Land & Equity PLC: 440 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 4,576.00 ஆகும்.
- Lanka Credit & Business Finances: 5,450 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 41,420.00 ஆகும்.
- Chevron Lubricant: 200 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 36,100.00 ஆகும்.
- Expack Corrugated Cartons: 550 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 7,645.00 ஆகும்.
- Renuka Holdings: 416 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 19,552.00 ஆகும்.
- Sunshine Holdings: 320 பங்குகள் காணப்படுவதுடன், அதன் பெறுமதி ரூபா. 10,880.00 ஆகும்.
இந்த மொத்த பிணையங்களின் (Securities) பெறுமதி ரூபா. 143,476 ஆகும் (ஒரு இலட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து நானூற்று எழுபத்தி ஆறு ரூபா). சொத்து விபர அறிக்கையின் “பெறுமதி” (Value) நிரலில் உள்ள பெறுமதியை, “பிணையங்களின் எண்ணிக்கை” (Quantity) நிரலில் உள்ள பெறுமதியுடன் பெருக்கி, அதனை அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ஒரு அலகின் விலை (Unit Price) எனத் தவறாகக் கருதி, பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக இந்த பிணையங்களின் மொத்தப் பெறுமதி ரூபா. 383,906,705.40 (முப்பத்து எட்டு கோடியே முப்பத்து ஒன்பது இலட்சத்து ஆறாயிரத்து எழுநூற்று ஐந்து ரூபா நாற்பது சதம்) எனத் தவறாகப் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கையின் “பெறுமதி” நிரலில் காட்டப்பட்டுள்ளது அந்தந்த நிறுவனங்களில் உள்ள ஒட்டுமொத்த பங்குகளினதும் பெறுமதியாகும்.

மேற்கூறப்பட்ட பிணையங்களை (Securities) கொள்வனவு செய்ததற்கான உண்மையான ஒரு அலகின் விலை மற்றும் தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிடப்பட்டுள்ள விதம் குறித்த ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது:
| நிறுவனம் | உண்மையான மொத்த பெறுமதி | பங்குகளின் எண்ணிக்கை | ஒரு பங்கின் விலை | தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிடப்பட்ட விலைகள் |
| Brown Investment | 2296.8 | 348 | 6.6Archived | 799,286.4 |
| Brown Investment | 1980.06 | 300 | 6.6 | 594,018 |
| Blue Diamond Jewelry | 6165 | 20550 | 0.3Archived | 126,690,750 |
| Hela Apparel Holdings | 3038 | 980 | 3.1Archived | 2,977,240 |
| Jat Holdings | 9823 | 209 | 47.0Archived | 2,053,007 |
| Ceylon Land & Equity Plc | 4576 | 440 | 10.4Archived | 2,013,440 |
| Lanka Credit & Business Finances | 41420 | 5458 | 7.6 Archived | 226,070,360 |
| Chevion Lubricant | 36100 | 200 | 180.5Archived | 7,220,000 |
| Ex-Pack Corrugated Cartons PLC | 7645 | 556 | 13.8Archived | 4,250,620 |
| Renuka Holdings PLC | 19552 | 416 | 47.0Archived | 8,133,632 |
| Sunshine Holdings | 10880 | 320 | 34.0Archived | 3,481,600 |
| மொத்தம் | ரூ. 143,476 | ரூ. 384,283,953 |
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பிணையங்களின் (Securities) ஒரு அலகின் விலையைத் தனித்தனியாகப் பரிசோதிக்கும் போதும், அமைச்சரின் சொத்து விபர அறிக்கையில் உள்ள அவருக்குச் சொந்தமான அலகுகளின் எண்ணிக்கையை அதன் மொத்தப் பெறுமதியால் பிரிக்கும் போது கிடைக்கும் ஒரு அலகின் விலையும் சமமாகவே காணப்படுகின்றன. மேலும், சில அலகுகளின் சந்தை விலையானது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிக நெருக்கமான பெறுமதியைக் கொண்டுள்ளது.
இதற்கமைய, குறிப்பிட்ட சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அமைச்சர் லால் காந்தவின் பிணையங்களின் மொத்தப் பெறுமதி எனக் குறிப்பிட்டுப் பகிரப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என உறுதிப்படுத்தப்படுகின்றது.
அதாவது, பிணையங்களின் (Securities) உண்மையான பெறுமதியான ரூபா. 143,476 என்பதற்குப் பதிலாக, இந்தத் தவறான புரிதலினால் ரூபா. 384,283,953 (38 கோடிக்கும் அதிகத் தொகை) பெறுமதியான பிணையங்கள் அமைச்சரிடம் இருப்பதாக சமூக ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன் மூலம் அமைச்சரின் ஒட்டுமொத்த சொத்துக்களின் பெறுமதி 46 கோடியைத் தாண்டுவதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அந்த தகவல் முற்றிலும் தவறானது என தெளிவாகின்றது.
அமைச்சர் லால்காந்த
இது தொடர்பாக நாம் அமைச்சர் லால்காந்தவிடம் வினவியபோது, சட்ட ஆலோசனைகளுக்கு அமைய இது குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களால் அறிக்கையிடப்பட்ட அமைச்சர் லால்காந்தவின் சொத்து விபர அறிக்கையில், அவர் வைத்துள்ள பிணையங்களின் (Securities) பெறுமதி ரூபா. 383,906,705.40 எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானது என எமது ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டுகின்றது. சொத்து விபர அறிக்கையின்படி, அமைச்சரிடம் உள்ள பிணையங்களின் உண்மையான பெறுமதி ரூபா. 143,476 ஆகும் (ஒரு இலட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து நானூற்று எழுபத்தி ஆறு ரூபா).
அவர் முதலீடு செய்துள்ள 10 நிறுவனங்களின் பங்குகளின் எண்ணிக்கையை, ஒரு பங்கின் விலை (Unit Price) எனத் தவறாகக் கருதி, மொத்தப் பெறுமதியால் பெருக்கியதன் விளைவாகவே இந்தத் தவறான தரவு சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
உண்மையான பெறுமதியான ரூபா 143,476 என்பதற்குப் பதிலாக, பிழையான கணக்கீட்டின் மூலம் 38 கோடி ரூபா பெறுமதியான பிணையங்கள் இருப்பதாகக் காட்டி, அமைச்சரின் மொத்தச் சொத்துக்கள் 46 கோடியைத் தாண்டுவதாகக் கூறப்படும் கருத்துக்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


