மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 2026.04.30 அன்று மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது.
உண்மையில் அவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் எரிபொருள் விலை அதிகரிப்பு என தெரிவித்து விலை பட்டியல் ஒன்று பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
2026.04.30 அன்று எரிபொருள் விலை திருத்தம் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது குறித்து பிரதான ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். அதற்கிணங்க, 2026.04.30 அன்று எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதா என நாம் ஆராய்ந்த போதிலும், அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக, மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு மேலதிகமாக, கடந்த மார்ச் மாதத்தில் மேலும் இருமுறை எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கிணங்க, இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது 2026 மார்ச் 21 ஆம் திகதி ஆகும். அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தம் கீழே தரப்பட்டுள்ளது.
| எரிபொருள் வகை | தற்போதையவிலை | புதிய விலை | அதிகரிப்பட்ட விலை |
| பெற்றோல் ஒன்டேன் 92 | 317.00 | 398.00 | +81.00 |
| பெற்றோல் ஒன்டேன் 95 | 365.00 | 455.00 | +90.00 |
| லங்கா டீசல் | 303.00 | 382.00 | +79.00 |
| லங்கா சுப்பர் டீசல் | 353.00 | 443.00 | +90.00 |
| மண்ணெண்ணெய் | 195.00 | 255.00 | +60.00 |
குறிப்பு: இந்த விலைகள் 2026 மார்ச் 21 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.
அந்த விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தல் கீழே தரப்பட்டுள்ளது.

2026.04.30 அன்று எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் எவ்வித தகவல்களும் குறிப்பிடப்படவில்லை.
2026 மார்ச் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த எரிபொருள் விலைகள் இன்னமும் மாற்றமின்றி தொடர்வதை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்த போது தெளிவாகக் காண முடிகின்றது.

இன்றைய தினம் (01) எரிபொருள் விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படலாம் என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. Link | Link
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பதிவு
சமூக ஊடகஙடகளில் பகிரப்பட்டு வரும் குறித்த பதிவை உன்னிப்பாக அவதானிக்கும்போது, அதில் உள்ள SynthID அடையாளத்தை தெளிவாகக் கண்டறிய முடிகிறது. SynthID என்பது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் காணப்படும் ஓர் அடையாளமாகும்.

அதற்கமைய, குறித்த பதிவு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இதன்போது, அந்தப் பதிவு கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தித் திருத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பதிவு குறித்து, நாம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரின் ஊடகச் செயலாளரிடம் வினவினோம். இதன்போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த பதிவு முற்றிலும் தவறதனது எனவும், அவ்வாறான எந்தவொரு விலை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் இத்தகைய விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து இப்போதைக்குத் தெளிவாகக் கூற முடியாது எனவும், எவ்வாறாயினும் நேற்றைய தினம் அல்லது இன்றைய தினம் அவ்வாறான எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவு தொடர்பாக, நாம் மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளரிடமும் வினவினோம். இதன்போது, 2026.04.30 அன்று எரிபொருள் விலை திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை என அவரும் உறுதிப்படுத்தினார். மேலும், பகிரப்பட்டு வரும் அந்தப் பதிவு போலியானது எனவும், நேற்றோ அல்லது இன்றோ எரிபொருள் விலை அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், 2026.04.30 அன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன். அவ்வாறான எரிபொருள் விலை அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் 2026.03.21 அன்று நள்ளிரவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

